> குருத்து: Déjà vu (2006) Time travel Thriller

June 19, 2021

Déjà vu (2006) Time travel Thriller


Déjà vu என்றால் “முன்பு பார்த்தது” என பொருள். அதாவது நாம் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு இடத்திற்கு செல்லும் பொழுதோ அப்பொழுது நடக்கும் செயல்கள் அதற்கு முன்பு பார்த்தது போன்றோ அல்லது நடந்தது போல தோன்றும். இது நம் மூளை நிகழ்த்தும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் மட்டுமே. சொல்லப்போனால் இதை நம் நினைவகத்தில் நிகழும் சிறு கோளாறு (Memory Glitch) எனலாம். இந்த தேஜா வூ ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் நிகழும் அறிய நிகழ்வு கிடையாது. உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இது அவ்வப்போது நிகழ்கிறது. அதுவும் குறிப்பாக 15 முதல் 25 வயதிற்குள் இருப்பவர்களுக்கு, இது அதிக அளவில் நிகழும்.

- இணையத்திலிருந்து….

கதை. அமெரிக்க கடற்படையில் வேலை செய்யும் வீர்ர்கள் ஒரு பயணிகள் கப்பலில் தங்கள் குடும்பங்களை சந்திக்கிறார்கள். அப்பொழுது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கிறது. 500க்கு மேற்பட்டவர்கள் செத்துப்போகிறார்கள்.

உடனடியாக ஒரு குழு விசாரணைக்கு செல்கிறது. சிறப்பு அதிகாரியாக நாயகனும் போய் இணைந்துகொள்கிறார். குண்டுவெடிப்பு நடந்த ஆற்றின் கரையில் ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கியிருக்கிறது. இந்த குண்டுவெடிப்புக்கு ஏதோ தொடர்பு இருக்கு என கணிக்கிறார். சாட்டிலைட், அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளின் உதவியால் நான்கு நாட்கள், 6 மணி நேரம், 3 நிமிடங்கள், 45 செகண்ட்ஸ் மட்டும் பின்னோக்கி பார்க்க முடியும் என்கிறார்கள். அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடித்து ஆராய்கிறார்கள்.

நாயகன் நினைத்தப்படியே குண்டுவெடிப்புக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறது. கால இயந்திரத்தின் (Time Travel) உதவியால் நாயகன் பின்னுக்கு போய், குண்டு வெடிப்பு நிகழாமல் இருக்க குண்டு வெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதியை எதிர்கொள்கிறார்.

தீவிரவாதியை கண்டுபிடித்தாரா? அந்த பெண்ணுக்கும் தீவிரவாதிக்கும் என்ன சம்பந்தம்? குண்டு வெடிப்பை நிகழவிடாமல் தடுக்க முடிந்ததா? என்பதை பரபரப்பாக சொல்லி முடிக்கிறார்கள்.
****

கால பயணம் என்பது ஒரு நல்ல கற்பனை. உலக அளவில் அல்லது குறைந்த பட்சம் ஹாலிவுட்டிலாவது கால பயணம் குறித்த ஒரு வரையறையை ’தெளிவாக’ சொல்லிவிடுங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி விளக்குவது எங்களுக்கெல்லாம் ரெம்ப மண்டை குடைச்சலாக இருக்கிறது. 🙂

ஹாலிவூட்டின் விஜயகாந்த் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிற Denzel Washington தான் படத்தின் நாயகன். நாயகி Paula Patton. எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

பர பர வென இறுதிவரை செல்கிற திரில்லர். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: