> குருத்து: பெட்ரொல், டீசல் விலை உயர்வு : பா.ஜ.க மோடி தேர்தல் வாக்குறுதியாக சொன்னது என்ன? ஏழு ஆண்டுகளில் செய்ததும் என்ன?

June 19, 2021

பெட்ரொல், டீசல் விலை உயர்வு : பா.ஜ.க மோடி தேர்தல் வாக்குறுதியாக சொன்னது என்ன? ஏழு ஆண்டுகளில் செய்ததும் என்ன?


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க தேர்தல் நேரத்தில் பிரதம வேட்பாளர் மோடி முதல், பா.ஜ.க தொகுதி வேட்பாளர் வரை மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்போம். குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என வாக்களித்தனர்.


தேர்தல் நேரத்தில் ”பெட்ரோல் விலை பதறவைக்கிறது. சிலிண்டர் விலை கவலைக்குள்ளாக்குகிறது” என பாஜக பிரமுகர் தமிழிசை ஒரு காணொளியில் பொங்கி பொங்கி பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும். போன தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறேன் என சொன்ன வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை. ஆகையால், இந்த தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என பாபா ராம்தேவ் சொன்னது எல்லாம் நினைவில் வந்து போகிறது.

இப்படி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த ஆறரை ஆண்டுகளில் (டிசம்பர் 2020 வரை) பெட்ரொல், டீசல், இயற்கை எரிவாய் மூலம் மக்களிடம் அடித்த கொள்ளை மட்டும் 19 லட்சம் கோடி.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் வருமானத்தின் அளவு 2014-15ல் 5.4% தான் அதாவது ரூ. 74,158 கோடி. ஆனால், 2020 – 21 ஆண்டில் 12.2% யாக ரூ. 2.95 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

ஜூன் 2014ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 109 டாலராக இருந்தது. அப்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.51. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 57.28.

ஜூன் 2021ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 61 டாலராக இருக்கிறது. இப்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 96.71. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.92.

பெட்ரொல், டீசல், சிலிண்டர் விலை அதிகரிக்க, அதிகரிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே இந்த கொரானா முதல், இரண்டாம் அலைகளில் வருமானம் இழந்து, வேலை இழந்து, மருத்துவத்திற்காக தாங்கள் சிறுக சிறுக சேமித்த மொத்த சேமிப்பையும் தொலைத்துவிட்டு நிற்கும் இந்த நெருக்கடியான காலத்திலும், எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என பா.ஜ.க மோடி அரசு பெட்ரொல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள்.

’இந்துக்கள். இந்துக்கள்’ என பேசி பேசி ஆட்சிக்கு வந்த பிஜேபிகாரர்கள், பெரும்பான்மை ’இந்துக்களை’ பற்றிய எந்தவித கவலையும் இல்லாமல், கொள்ளையடித்து கொண்டே இருக்கிறார்கள். பெரும்பான்மை ’இந்துக்கள்’ தான் இந்த உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.

****

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? - நான்காவது அத்தியாயம்.

0 பின்னூட்டங்கள்: