நகரத்தின் மையத்தில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் ஒரு வங்கியில் பெயிண்டர்கள் போல நால்வர் நுழைகிறார்கள். உள்ளே நுழைந்ததும் வாசலை மூடுகிறார்கள். சிசிடியை முடக்குகிறார்கள். வங்கியில் இருந்த ஊழியர்கள், பொதுமக்களை எல்லாம் ஆடைகளை கழற்ற சொல்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இவர்கள் அணிந்திருப்பது போலவே, முகமூடியுடன் ஆடைகள் தருகிறார்கள். இதற்குள் போலீசுக்கு விவரம் தெரிந்து ஒரு படையே திரண்டு வருகிறது.
பயணக்கைதிகளுடன் தப்பித்து செல்ல ஒரு பேருந்தும், தாங்கள் செல்ல ஒரு விமானமும் வேண்டும் என கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் பயணக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் நபர்களை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு இயல்பான வங்கி கொள்ளை படம் போல தான் தெரிகிறதா? படம் அப்படியே பயணிக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் பயணிக்கிறது. பிறகு ஒரு சில திருப்பங்களுடன் முடிகிறது.
*****
வழக்கமான வங்கிக்கொள்ளைப் படம் போல இல்லாமல் இருப்பதே நமக்கு பெரிய ஆறுதல். வங்கி கொள்ளையை தடுக்க வந்திருக்கும் அந்த போலீசு அதிகாரி இவர்களின் நடவடிக்கையைப் பார்த்து குழம்புவது போல நம்மையும் குழப்புவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த பொழுது பாக்யராஜ் நடித்து 1991ல் வெளிவந்த ’ருத்ரா’ படத்தில் வரும் வங்கி கொள்ளைக் காட்சி நினைவுக்கு வந்து போனது.
Denzel Washington தான் அந்த புத்திசாலி போலீசு அதிகாரியாக வருகிறார். இவரை பிடித்துப் போனதால், இவருடைய புகழ்பெற்ற படங்களை தேடித்தேடி பார்த்து வருகிறேன். புகழ்பெற்ற மால்கம் எக்ஸ் படத்தை இயக்கிய Spike Lee தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
படம் துவங்குவதே ஏ.ஆர். ரகுமானின் ”சைய்யா! சைய்யா!” பாட்டில் தான்! தமிழ் டப்பிங்கில் ஏதோ கலாட்டா பண்ணியிருக்கிறார்கள் என நினைத்தால், ஆங்கிலத்திலும் அந்த பாடல் இருக்கிறது.
நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment