> குருத்து: தோழர் ஜவஹர்

June 19, 2021

தோழர் ஜவஹர்


90களில் விகடன் குழுமத்தில் இருந்து வெளிவந்த ஜூனியர் போஸ்ட் எனக்கு ரெம்ப பிடிக்கும். நான் அட்டை டூ அட்டை விரைவாக படித்துவிட்டு, அரசால் இயக்கப்படும் பகுதி நூலகத்தில் வாசகர்கள் படிக்க தானமாக தந்துவிடுவேன். அடுத்த வாரம் அந்த இதழை மாற்ற போகும் பொழுது, படித்து படித்து கந்தலாய் மாறியிருக்கும். அதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் அதன் துணை ஆசிரியராய் இருந்த தோழர் ஜவஹர் தான்!


90களின் இறுதிகளில் அவர் மதுரை வந்த பொழுது, நண்பர்களுடன் நானும் அறிமுகமானேன். அக்கவுண்ட்ஸ் வேலை ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்தாலும், வேறு வேலைக்கு மாறலாமா என குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை படித்து பாராட்டி, ”சென்னைக்கு வாருங்கள்! பத்திரிக்கைகளில் முயற்சி செய்யலாம்” என உற்சாகப்படுத்தினார்.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாக சென்னையில் இருந்தேன். அந்த காலத்தில் ’தோழமை’ குடும்பத்தில் என்னையும் ஒரு ஆளாய் சேர்த்தார். திடீரென எனக்கு நிறைய சொந்தங்கள் கிடைத்துவிட்ட சந்தோசம். சென்னையில் பல பகுதிகளில் தோழர்கள் இருந்தார்கள். இராமசாமி, மஞ்சுளா, குட்டி பையன் இனியன், கிருஷ்ணவேணி, மணிவண்ணன் குடும்பம் என்ற தோழர்களின் பட்டியல் பெரியது. டார்வின், பாலு எல்லாம் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்கள். துவக்கத்தில் ஒரு நாள் தப்பித்தவறி வேறொரு நண்பரை சொல்லாமல் கொள்ளாமல், சென்னை காந்தி சிலை அருகே தோழமை சந்திப்புக்கு அழைத்துச் சென்றேன். எல்லோரையும் அப்படி சேர்த்துக்கொள்ளமுடியாது என தனியே அழைத்து விளக்கினார். என் மீதான அவர் அன்பு அன்று புரிந்தது.

இந்த எட்டு மாத காலமும், தோழருடன் நிறைய சுற்றமுடிந்தது. பத்திரிக்கையாளன் செய்யவெண்டும் என சில அடிப்படைகளை கற்றுத்தந்தார். அடிக்கடி தொலைபேசி செய்து, அதுவரை வாழ்ந்த வாழ்வில் அவருடைய வீட்டு தொலைபேசி எண் மட்டுமே எனக்கு மனப்பாடமாக இருந்தது. சின்னக்குத்தூசி அவர்களுடைய அறைக்கு வாரம் வாரம் வரும் பொழுது, என்னையும் வரச்சொல்வார். ஆஜராகிவிடுவேன். அவர் வீட்டில் பொருளாதாரம் அரசியல் என வகுப்பு நடந்தால், தவறாமல் கலந்துகொள்வேன். என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்கமுடியும். அதைப் பற்றி தெளிவாக விளக்குவார்.

நான் பத்திரிக்க வேலைக்காக சென்னை வந்த சமயத்தில், பத்திரிக்கைகளில் வேலை செய்த பலருக்கும் வேலை போனது. ஆகையால் பத்திரிக்கையில் வேலை என்பது மிக சிரமமாக இருந்தது. உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலை எனக்கு. தாக்குப்பிடிக்க முடியவில்லை. மீண்டும் ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்தேன். மதுரையை சுத்தின ஆள் மதுரையை தான் சுத்துவான் என்று ஒரு பழமொழி உண்டு. அதில் எனக்கு பெரிய வருத்தமில்லை. தோழரை பிரிகிற வருத்தம் மட்டுமே பெரிதாக இருந்தது.

முகநூலில்... 29/05/2021

0 பின்னூட்டங்கள்: