> குருத்து: Wild (2014) Travel Movie

June 19, 2021

Wild (2014) Travel Movie




Tracks என ஒரு படம். 1970களில் ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தின் வழியாகவும் 2700 கிமீ தனது மூட்டை முடிச்சுகளுடன் மூன்று ஒட்டகத்தின் துணையுடன் பயணித்த கதை.


அது போல இதுவும் நீண்ட நடைபயணம் குறித்த படம் தான். Pacific Crest Trial சுருக்கமாய் PCT. மெக்சிகோவில் துவங்கி அமெரிக்கா வழியாக கனடா வரை 4270 கிமீ நீண்ட பயணமிது. இந்த பயணத்தில், மிக வறட்சியான பாதை, குளு குளு ஓடைகள், அருவிகள், முழங்காலுக்கு பனிப்பாதை என கலவையாக இருக்கிறது. தனியாக, குழுவாக பயணம் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில், நாயகியின் நடுத்தர வயது அம்மாவை புற்றுநோய் கொன்றுவிடுகிறது. சிறுவயதிலேயே குடிகார அப்பாவிடமிருந்து பிரிந்து வந்துவிடுகிறார்கள். இவளின் தாறுமாறான நடவடிக்கைகளில் திருமண உறவும் முறிந்துவிடுகிறது. ஒரு மாறுதலுக்காக அந்த நீண்ட பயணத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை (1800 கி.மீ.) தேர்ந்தெடுத்து தனியே பயணிக்கிறாள்.

மூன்று மாதத்திற்கான தேவையான பொருட்களை சேகரித்து, அடுக்கி அதை முதுகில் மாட்டி நிற்கவே பெரிய போராட்டமாகிவிடுகிறது. இருப்பினும் வெற்றிகரமாய் நடக்க துவங்குகிறாள். ”எல்லா பயணமும் முதல் காலடியில் தான் துவங்குகிறது” என்பார்கள். பயணம் முழுவதும் அவளின் கடந்த கால கசப்பான வாழ்க்கை நினைவலைகள் வந்து அலைகழிக்கின்றன. இருப்பினும் உறுதியுடன் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறாள்.

போகிற வழியில் வாங்கிப்போன அடுப்பு சொதப்பிவிடுகிறது. ஒரு மலையின் உயரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஷீ கீழே விழுந்துவிடுகிறது. ஓரிடத்தில் தண்ணீர் இருக்கும் என்பார்கள். ஆனால் அங்கிருக்காது. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தனது இலக்கை சென்று சேர்ந்தாளா என்பதை முக்கால்வாசி படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு உண்மைக்கதை. பயணத்தின் அனுபவத்தை புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகம் நிறைய விற்று தீர்த்திருக்கிறது. அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் அதற்கே உரிய இயல்புகளுடன் படம் பயணிக்கிறது. ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. படம் இந்த பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவளின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த பயணம் குறித்து நிறைய டாக்குமெண்டரி படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. நன்றாக எடுத்திருக்கிறார்கள். நம்மூரில் இப்படிப்பட்ட டாக்குமெண்டரிகளுக்கு ஏன் முக்கியத்துவம் தருவதில்லை என ஏங்க வைக்கிறார்கள்.

“I knew that if I allowed fear to overtake me, my journey was doomed. ...
மொத்த வாழ்க்கைக்கும் இந்த வரிகள் பொருந்தும் தானே!

1. உண்மை நாயகி
2. நிழல் நாயகி
3. நீண்ட பயணத்தின் வரைபடம்

0 பின்னூட்டங்கள்: