> குருத்து: மரகத நாணயம் (2017) (அ) கொல்லும் நாணயம் Fantasy comedy Tamil Movie

October 28, 2022

மரகத நாணயம் (2017) (அ) கொல்லும் நாணயம் Fantasy comedy Tamil Movie


நாயகனுக்கு கடன் பிரச்சனை. நியாய வழியில் எல்லாம் சம்பாதித்து அடைத்துவிடமுடியாது. ஆகையால் நொடித்துபோன நிலையில் இருக்கும் ஒருவரிடம் சின்ன சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறான். இந்த சமயத்தில் ”மரகத நாணயம்”-த்தை எடுத்து தந்தால், பத்து கோடி என பேரம் வருகிறது. அந்த நாணயத்தை தேடியவர்கள், அடைந்தவர்கள் என வரிசையாக செத்துப்போயிருக்கிறார்கள். அதனால் விவரம் அறிந்தவர்கள் பயந்து ஒதுங்குகிறார்கள்.


மரகத நாணயத்தின் கதை என்னவென்றால் முன்பொரு காலத்தில் இரும்பொறை அரசன் ஒரு மன்னன். தவம் இருந்து, மரகத நாணயத்தை பெறுகிறான். அதை வைத்துக்கொண்டு நிறைய வெற்றிகளை அடைகிறான். 96 வயதில் சாகும் பொழுது கூட தன் வாரிசுகளுக்கு கூட கொடுக்க மனமில்லாமல், தனது கல்லறையில் வைத்து புதைக்க சொல்கிறான். அந்த நாணயத்தை யார் அடைய நினைத்தாலும், விரட்டி விரட்டி கொல்கிறான்.

நாயகனுக்கோ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை. ஆகையால், ஒரு ஜோசியரை சந்தித்து யோசனை கேட்கிறான். அவரும் சொல்கிறார். ஒரு பிணத்துக்கு உயிர் தந்து எழுப்பிவிடுகிறார்கள். அந்த குட்டிச்சாத்தானோ தன்னோட சகாக்கள் இருந்தால் தான் தனக்கு வசதி என அடம்பிடிக்கிறது. இன்னும் மூன்று பிணத்தை கண்டுபிடித்து, உயிர் தந்து… அங்கிருந்து கலாட்டாக்கள் ஆரம்பிக்கின்றன.

பல்வேறு முயற்சி, கலாட்டகளுக்கு பிறகு மரகத நாணயத்தை அடைந்தார்களா? இரும்பொறை மன்னன் என்ன செய்தான்? என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

ஒரு இயல்பான படத்தில் லாஜிக் மீறினால் நமக்கெல்லாம் மனசு சங்கடப்படும். அதுவே பேண்டசி என எடுத்துக்கொண்டால், அந்த பிரச்சனை இல்லை. ஆனால் பல கற்பனை (Fantasy) படங்களில் கற்பனை வறட்சி நிறைய இருக்கும். இந்தப் படத்தில் அந்த பிரச்சனை இல்லை. புகுந்து விளையாடியிருப்பார்கள். செத்தவர்களை எழுப்புவது, அவர்களுக்கான விசேச குணங்கள். மரகத நாணயத்தை தேட ஆரம்பித்துவிட்டாலே, அதனால் செத்துப்போன அந்த பெருங் கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து கொண்டு இருப்பது; விரட்டி விரட்டி கொல்லும் அந்த பழைய லாரி. இதோடு நகைச்சுவையும் இணையும் பொழுது படம் அசத்தலாகிவிடுகிறது.
படத்தில் நடித்த அத்தனை பேருமே சிறப்பாக செய்திருப்பார்கள். இதில் ஒரு கூட்டத்துக்கு தலைவனாக வரும் ஆனந்தராஜின் நகைச்சுவை நன்றாக இருக்கும். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.
இந்தப் படத்தில் நடித்த நாயகன் ஆதியும், நாயகி நிக்கியும் இப்பொழுது தம்பதிகள். இந்தப் படத்தை இயக்கிய ARK Saravan என்ன ஆனார் என தெரியவில்லை. அவருடைய அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தை பார்க்கவில்லை என்றால், தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் பாருங்கள். ஜாலியாக இருக்கும். யூடியூப்பிலேயே இலவசமாக கிடைக்கிறது. கூடுதலாக ஹாட் ஸ்டாரில், ஜீ5, சன் நெக்ஸ்டிலும் கூட கிடைப்பதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: