> குருத்து: Mr. Harrigan's Phone (2022) American teen horror drama film

October 28, 2022

Mr. Harrigan's Phone (2022) American teen horror drama film


அமெரிக்காவில் ஒதுக்குப்புறமான சிறுநகரம். அந்த ஊரில் பங்குச் சந்தையில் பெரிய ஆளான ஒரு புள்ளி வாழ்கிறார். குடும்பம் இல்லை. என்னவாயிற்று என தெரியவில்லை. வேலைகாரர்களுடன் தனியாக வாழ்கிறார். அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு புத்தகங்களை வாசித்துக் காட்டுவதற்காக ஒரு பையன் வேண்டும் என விளம்பரம் தருகிறார். நிறைய பேர் வருவதில் இருந்து பத்து வயது பையனாகிய நாயகனை தேர்ந்தெடுக்கிறார்.


வாரத்திற்கு மூன்று நாள் அவருடைய வீட்டுக்கு வருகிறான். புகழ்பெற்ற புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து காண்பிக்கிறான். இப்படியே ஐந்து வருடம் ஓடிவிடுகிறது.

செல்போன் அறிமுகமாகிறது. அந்த பையன் அவருக்கு அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடுகளையும் சொல்லியும் தருகிறான். ஆர்வமாக கற்றுக்கொள்கிறார். வழக்கம் போல ஒருநாள் வீட்டுக்கு வரும் பொழுது அவர் உட்கார்ந்தபடியே இறந்து கிடக்கிறார். அவருடைய இறுதி சடங்கின் பொழுது, அவருடைய போனை யாருக்கும் தெரியாமல், அவருடைய உடையில் வைத்துவிடுகிறான். அப்படியே புதைத்தும்விடுகிறார்கள்.

அவனுடைய மேற்படிப்புக்கு தேவையான பெரும்தொகையை அவர் தன் உயிலில் எழுதி வைத்திருக்கிறார். பள்ளியில் ஒரு பையன் இவனை சீண்டிக்கொண்டு இருக்கிறான். ஒருநாள் இருவருக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது. கோபத்தில் செத்துபோய் புதைக்கப்பட்ட அவருக்கு செல்போனில் நடந்ததை சொல்லி, அவன் தண்டிக்கப்படவேண்டும் என்கிறான். அன்றிரவு அவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். இவன் பதட்டமடைந்துவிடுகிறான்.

அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
****

பொதுவாக படங்கள் நன்றாக இருக்கிறதா என்பதை நண்பர்கள் யாராவது பரிந்துரை செய்தால், யாராவது முகநூலில் எழுதினால், IMDB மதிப்பீடு ஏழாக இருந்தால் பார்க்கலாம் முடிவு செய்வேன். ஆனால் ஹாரர் படங்களுக்கு மட்டும் ஏழு வைத்தால், பெரும்பாலான படங்கள் தேறாது. அதற்கு மட்டும் ஆறு என குறைத்துக்கொண்டுள்ளேன். (பெரிய மனசு ) ஆறுக்கு குறைந்தால் வாய்ப்பில்லை. இந்தப் படம் ஆறு என்பதாலும், தமிழ் டப்பிங்கில் இருந்ததாலும் பார்க்க ஆரம்பித்தேன்.

நாவலை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறார்கள். மொத்தப் படமும் மிக மிக மெதுவாகத் தான் நகர்கிறது. மிக மிக சுமாரான படம். இந்தப் படத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணம் யாரும் என்னை மாதிரி ஏமாந்து அந்தப் பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக தான்! 🙂

நெட்பிளிக்சில் இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: