> குருத்து: கரிகாலனின் வாளும், குறிஞ்சிக்கூடலின் தட்டும்!

October 9, 2022

கரிகாலனின் வாளும், குறிஞ்சிக்கூடலின் தட்டும்!


சுற்றுலாவில் இணைந்த பொழுது குறிஞ்சிக்கூடலின் அடையாளமாக கொடுக்கப்பட்டது உணவுக்காக தரப்பட்ட சில்வர் தட்டு. அந்தத் தட்டை உற்றுப்பார்த்தால், நான்கு விரிந்த மலர்களுடன் Prince என அச்சிடப்பட்டு இருந்தது. அது பொன்னியின் செல்வனில் கரிகாலன் வந்தியத்தேவனுக்கு கொடுக்கப்பட்ட வாள் போல என அப்பொழுது எனக்கு தெரியவில்லை.


இந்தியாவின் வட பகுதிகளில் பயணம் செய்வதில் உள்ள ஒரு பெரிய சிக்கல். நம்மூர் சாப்பாடு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், நம்ம கைப்பக்குவத்தில் கிடைக்காது. இரண்டே நாளில் சொணங்கி சொந்த ஊர் பற்றிய ஏக்கத்திலேயே மீதி நாட்களை கழிப்போம். ஊரே வெறுத்துப்போகும். அரை உசுரோடு தான் ஊர் வந்து சேர்வோம்.

முதல் நாள் சாப்பிடும் பொழுது கவனித்தேன். எல்லோரும் அந்த தட்டை மறக்காமல் பவ்யமாய் எடுத்துவந்தார்கள். அறையில் மறந்து வைத்து வந்தவர்கள் பதட்டத்துடன் அறைக்குப் போய் எடுத்துவந்தார்கள். மறந்து வருபவர்களுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு தட்டுகள் வைக்கப்படும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் இல்லை. அது தட்டுமட்டுமில்லை. குறிஞ்சிக்கூடலின் அடையாள முத்திரை என புரிந்துகொண்டேன். பத்து நாட்களுக்கு நம்மூர் சாப்பாடு வேண்டுமென்றால், இந்தத் தட்டை பாதுகாக்கவேண்டும் என மனதில் ஆழமாய் பதித்துக்கொண்டேன்.

அஜ்மீரில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க சென்று வந்த பிறகு, என்னுடைய அறையை மாற்றிவிட்டார்கள். காலையில் தட்டைத் தேடினால் காணவில்லை. பதட்டமாகிவிட்டது. அடுத்த நாள் காலையில் (அறை) நண்பர் சிவா தட்டுத்தந்து காலை உணவு பறிபோவதில் இருந்து காப்பாற்றினார். ராஜேந்திரன் தோழரிடம் போன் பண்ணி கேட்டால், ஊர் சுற்றப்போய்விட்டேன். மாலை தான் வருவேன் என கூலாக சொன்னார். மாலை அவர் அறையில் தட்டை திரும்ப பார்த்த பொழுது தான் உசுரே திரும்ப வந்தது.

ஊரிலிருந்து திரும்ப வந்த பிறகு கூட அந்த தட்டைப் பாதுகாத்து மூன்று வேளையிலும் சாப்பிட்டுவருகிறேன். அத்தனை மரியாதை அந்தத் தட்டுக்கு!

0 பின்னூட்டங்கள்: