> குருத்து: கண் தெரியாத இசைஞன் - நாவல்

October 28, 2022

கண் தெரியாத இசைஞன் - நாவல்



18ம் நூற்றாண்டு. ரசியாவின் ஒரு பகுதியான் உக்ரைனில் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். (இப்பொழுது பிரிந்து சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள்.)

அங்கு வசதிக்கு எல்லாம் குறைவில்லாத பண்ணை வீட்டில்.. ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. சில நாட்களில் அந்த குழந்தைக்கு கண் தெரியவில்லை என தாய் கண்டுப்பிடித்துவிடுகிறாள். மருத்துவரும் உறுதி செய்கிறார்.

அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்கிறான். அவனின் தாயும், அவனின் தாய் மாமாவும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

நமது உலகம் காட்சிகளால் ஆனது. அவன் உலகமோ ஒலிகளால் ஆனது. வாசனைகளால் ஆனது.

தன் பண்ணையில் வேலை செய்யும் ஒருவரின் புல்லாங்குழல் இசை அவனுக்கு அத்தனை வசீகரமானதாய் இருக்கிறது.

புல்லாங்குழல் கற்கிறான். தாய் மூலமாக பியானோ கற்றுக்கொள்கிறான். அருகில் குடி வந்து இருக்கும் சிறுமி விரைவிலேயே நல்ல தோழியாகிறாள்.

இளைஞனாகிறான். எல்லாம் இருந்தும் கண் தெரியவில்லை என்கிற காரணத்தால் கழிவிரக்கத்தில் சிக்கி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறான். மெல்ல மெல்ல மேலே வந்து கொண்டிருந்தவன் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறான்.

அதில் இருந்து மீண்டானா? தன் இசைத் திறமையை உலகு அறிய செய்தானா? என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற நாவல் இது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது.

கண் தெரியாத ஒருவன் உலகை எப்படி உணர்கிறான் என்பதை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

குழந்தைகளை தங்கள் கைகளுள்ளேயே பொத்தி பொத்தி வளர்க்கிற, வளர்க்க நினைக்கிற பெற்றோர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

இதன் ஆசிரியர் விளாதீமிர் கொரலேன்கோ. ஜார் மன்னன் ஆட்சியில் அராஜகத்தை எதிர்த்திருக்கிறார். அதற்காக சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவருடைய சொந்த கதை இன்னும் ஈர்ப்பாய் இருக்கிறது.

வெளியீடு : விகடன்
பக்கங்கள் : 230
விலை : ரூ. 115

0 பின்னூட்டங்கள்: