> குருத்து: ரயில் நட்பு

October 9, 2022

ரயில் நட்பு


பயணத்தில் 'ரயில் ஸ்நேகம்' பிரபலமானது. 10 மணி நேரம் 12 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணிக்க வேண்டியதிருக்கும்.


எப்பொழுதும் வேலையின் ஊடாக கதை பேசும் மனிதர்களால் சும்மா உட்கார்ந்திருந்தால் பேசாதிருக்க முடியுமா?

அருகில் இருப்பவர்களிடம் மெல்ல பேச்சு துவங்கி... தன் கதை, ஊர் கதை, உலக கதை பேச துவங்கிவிடுவார்கள்.

இப்படித்தான் ஒருமுறை வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் ஐவர் இரவு 8 மணி போல பேச ஆரம்பித்தோம். 11 மணி ஆன பொழுது, பேச்சில் இன்னும் உற்சாகம் வந்தது. பக்கத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் தூங்கவேண்டும் என கோரிக்கை வந்தது. அதன்பிறகும் கூட கொஞ்சம் அடக்கி வாசித்தோம். பேச்சு நிற்கவில்லை.

இப்படி ரயில் ஸ்நேகத்தில் ஒரு அம்மா ஆசையாய் தன் மகளுக்கு கொண்டு போன தீபாவளி பலகாரத்தில் எங்களுக்கும் கொடுத்து இருக்கிறார். (இப்பொழுது எல்லாம் திருட்டு பயத்தால் சாத்தியமேயில்லை.)

இடையில் பிரிகிற காதலர்கள் நம் உறவு 'ரயில் ஸ்நேகம்' போல என தமிழ் படத்தில் வசனம் பேசியிருக்கிறார்கள்.

இதோ ராஜஸ்தானுக்கு இரண்டு ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறோம். நம்மோடு வருபவர்களுடன் மட்டும் கதை பேசிகொண்டே வருகிறோம்.

எதிரில் உட்கார்ந்திருக்கும் இந்தி பேசும் இளைஞன் தன் லேப்டாப்பில் படம் பார்க்கிறார். களைத்து போனதும் தூங்குகிறார்.

பக்கத்தில் இருக்கும் இரண்டு குட்டிப் பசங்க இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களின் கைகளிலும் செல்போன்கள்.

"ரயில் ஸ்நேகம்' என்பது கடந்த தலைமுறையின் வார்த்தையாகிவிட்டது.

0 பின்னூட்டங்கள்: