> குருத்து: ரிஸ்க் எடு தலைவா! – சிபி. கே. சாலமன்

October 20, 2022

ரிஸ்க் எடு தலைவா! – சிபி. கே. சாலமன்


மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் தங்களுக்கென்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மீறி அவர்கள் பெரும்பாலும் வருவதில்லை. வரவிரும்புவதில்லை. அதையும் மீறி வருபவர்கள் ஜெயிக்கிறார்கள். புதிய பாதையை உருவாக்குகிறார்கள். ஆசிரியர் இந்த கருத்தைத் தான் ரிஸ்க் எடு தலைவா! உன்னுடைய ”பாதுகாப்பு எல்லையை” விட்டு வெளியே வா! என பல்வேறு சுவாரசிய உதாரணங்களுடன் விரிவாக எழுதியிருக்கிறார்.


துவக்கநிலையில் இருப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்படியும், விரிவாகவும் எழுதியிருக்கிறார். சிலர் படோபகரமாக வார்த்தை ஜாலங்களுடன் இருக்கும். இதன் ஆசிரியர் அப்படி எழுதவில்லை. படிப்படியான வளர்ச்சி என்கிற எதார்த்தமாக எழுதியிருப்பது சிறப்பு. ஓரிடத்தில் சொல்கிறார். “நாம் அடைய விரும்பும் மாற்றத்துக்கு ஏற்றவாறு நாமும் மாறவேண்டியிருக்கும்”. இன்னொரு இடத்தில் சொல்கிறார். ”ஒருவர் அவராகவே விரும்பி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அதே நிலையில் நீடித்திருப்பார். சுய விருப்பம் இல்லாமல் மாற்றம் நிகழாது.”

அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் ”சேஞ்ச் மேனேஜ்மெண்ட்” துறை இருக்கிறது. புதிய மாற்றங்களை மேலிருந்து கடைநிலை வரை இருக்கும் ஊழியர்களை அதற்கு தயார்ப்படுத்துவது இதன் வேலை என்கிறார்.
ஜப்பானினின் கெய்சன் தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவதற்கு பயன்படுத்துகிற ஒரு அணுகுமுறை. அதைப் படிக்க படிக்க இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என ஆர்வமாயிருக்கிறது.` கெய்சனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. “ஏதாவது தவறு செய்தால் அதைத் திருத்திக்கொள்ளுங்கள். ஒரே தவறு மீண்டும் வரக்கூடாது. புதிய தவறுகளை செய்யலாம்.” ஒரே தவறை தவறு என உணர்ந்த பிறகும், வாழ்நாள் முழுக்க செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆச்சர்யமாய் இருக்கும்.
இந்த உலகில் எல்லாமும் மாறிக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் “ஒரே ஆற்றில் இரண்டு முறை யாராலும் குளிக்க முடியாது” ஜென் கூறுகிறது. மாற்றத்திற்கு தயாராவோம். இல்லையெனில் குளம் குட்டை என தேங்கிப்போய்விடுவோம்.

புத்தகத்தின் வடிவத்தில்… ஆசிரியரின் எழுத்து வெகுஜன இதழ்களில் பரவலான மக்கள் படிப்பதற்கான எழுத்தாக இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்து இரண்டு நாட்களில் முடித்துவிட்டேன். இவ்வளவு எளிமையாக எழுதுகிறார் என்றால், நன்றாக வாசிக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளலாம். வாழ்த்துகள்.

பத்திரிக்கையில் இப்பொழுது எல்லாம் ஒரு நோய் இருக்கிறது. சரளமாக இங்கிலீஷ் வார்த்தைகள் கலந்து எழுத அனுமதிக்கிறார்கள். தமிழும் தெரியாத, இங்கிலீஷும் தெரியாத ஒரு தலைமுறை நம் சமூக அமைப்பில் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு இப்படி எழுதுகிறார்கள். இதில் ஒரு கசப்பான உண்மை என்னவெனில், அவர்கள் யாரும் படிப்பதேயில்லை. அவர்கள் எல்லாம் காணொளி வடிவத்திற்கு மாறிவிட்டார்கள்.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். முதல் பதிப்பிலேயே இத்தனை கோளாறுகள் இருக்ககூடாது. இது இரண்டாவது பதிப்பு எனவும் போட்டிருக்கிறார்கள். எப்படி இவ்வளவு அலட்சியமாக வெளியிட்டு இருக்கிறார்கள்? ஆச்சர்யம்.

இந்த நல்ல புத்தகத்தை Vinoth Meenu பிறந்தநாள் பரிசாக அனுப்பிவைத்தார். அவருக்கு நன்றி.

பக்கங்கள் : 110
ஆசிரியர் : சிபி. கே. சாலமன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

0 பின்னூட்டங்கள்: