ஜோத்பூர் சுற்றிப் பார்த்துவிட்டு, அஜ்மீருக்கு பேருந்தில் கிளம்பினோம்.
குழுவில் ஒரு வழக்கறிஞர் பொன்னியின் செல்வன் அஜ்மீரில் ஐநாக்ஸ்-ல் இந்தியில் ஓடுகிறது. போகலாம் என ஆரம்பித்தார். நாவலின் பாத்திரங்களை நன்றாக நினைவில் வைத்திருந்தார்.
இந்தியில் பார்ப்பதா? என யோசனையாய் இருந்தது. கடைசி நேரத்தில் நானும் என கையை தூக்கிவிட்டேன்.
படம் வெளியான வெள்ளிக்கிழமை. மாலை 7 வரை பத்து டிக்கெட்டுக்குள் தான் புக் ஆகியிருந்தது. போய் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என சொன்னாலும் உறுதியாய் மறுத்துவிட்டார். என்ன ஒரு மன உறுதி.
டூரிஸ்ட் பேருந்தை பத்து மணிக்கு மேல் தான் அஜ்மீருக்குள் நுழையவிடுவோம் என சொன்னதால்... ஷேர் ஆட்டோ மூலம் நாங்கள் தங்க இருந்த ஹோட்டலை அடையும் பொழுது இரவு 9.30க்கு மேலாகிவிட்டது.
இரவு உணவுக்கு நேரமில்லை. வேறு ஒரு நெருக்கடியில் ஒரு மாணவர் வர இயலவில்லை.
வெளியே வந்து ஆட்டோ பிடித்தால்.. தூரம் 8 கிமீ. ரூ. 200. "கூட வாப்பா! படம் பார்க்கலாம். திரும்ப எங்களையும் கூட்டிட்டு வந்துரு!" என சொன்னதற்கு ரூ. 500 ஒப்பந்தமானது.
இன்னும் 15 நிமிடங்கள் தான். அந்த பழைய ஆட்டோவில் "ஜல்தி! ஜல்தி பையா" என டிரைவரை விரட்ட... 10.35க்கு ஐநாக்ஸ் அடைந்தோம்.
உள்ளே நுழையும் பொழுது, கரிகாலன் வந்தியத்தேவனிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தார்.
படத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயணக் களைப்பில் கொஞ்சம் அசந்தோம். மற்றவரிடன் உதவியுடன் தெளிந்தோம். முழுதாய் பார்த்து ரசித்தது ஆட்டோ இளைஞர் தான். மொழி பிரச்சனை அவருக்கு இல்லை.
2 மணி நேரம். 50 நிமிடங்கள். படம் பார்த்துவிட்டு, வெளியே வரும் பொழுது..ஒரு ஆட்டோ கூட இல்லை. தப்பித்தோம்.
அஜ்மீர் 2 மணிக்கு எல்லாம் அடங்கியிருந்தது. வரும் பொழுது அனார் ஏரி அருகேயும், நடுத்தெருவில் அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்தோம்.
உடன் வந்த மாணவர்களில் ஒருவன். "அம்மா, அப்பாவுடன் இல்லாமல் வெளியே இரவுக் காட்சி படம் பார்த்தது முதல்முறை . இந்த நாளை என்னால் மறக்கமுடியாது" என்றான். எல்லோருக்கும் தான்.
பரந்து விரிந்த அந்த ஏரி விளக்குகளின் வெளிச்சத்துடன் ஒளிர்ந்தது!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment