இட்லரை வீழ்த்திய ரசிய சோவியத் படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆளும் கோமிங்டாங் கட்சி ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை விட்டுவிட்டு, போராடும் மக்களை ஒடுக்குவதால், அதனை எதிர்த்தும் போரிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
கோமிங்டாங் கட்சியின் தலைவராக சன்யாட்சென் இருந்தவரை ”ரசியாவுடன் ஒத்துழைப்பு, கம்யூனிஸ்ட் கட்சியினுடன் கூட்டுறவு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உதவி” என்ற கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இறந்த பிறகு கோமிங்டாங் கட்சி அப்படியே யூடர்ன் போட்டு பொதுவுடைமையாளர்களையும், போராடுகிற ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க ஆரம்பித்தது.
இப்பொழுது மக்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒருவழி – பிற்போக்காளர்களின் ஒரு கட்சி ஆட்சி அதிகாரம், கைது, ஒடுக்குமுறை. இந்த வழி போனால் சீனா மிகவும் பின்தங்கும். இன்னொரு வழி – சீன கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை, சுதந்திர சீனா. நாடு மிகப்பெரியதாக வளர்ச்சியடையும்.
சீன பொதுவுடைமை கட்சியின் கொள்கை மிக தெளிவானது. பெரும் நிலப்பிரபுக்கள் பெரும் முதலாளித்துவ வர்க்கம் – இவர்களின் சர்வாதிகாரம் கூடாது. பழைய ரக ஜனநாயக சர்வாதிகாரத்தை – சுத்த தேசிய முதலாளித்துவ அரசை நிறுவுவது அசாத்தியம். ஒரு சோசலிச அரசிற்கு அவசியமான சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகள் இன்னும் இல்லாத தற்போதைய கட்டத்தில் சோசலிச அரசை நிறுவுவதும் அசாத்தியம். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடித்த பின்னர் பெரும்பான்மை மக்களை அடித்தளமாக கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி – ஜனநாயக கூட்டணி அரசு ஒன்றை நிறுவப்படுவது தான் சரி.
பொதுவுடைமையாளர்கள் உள் ஒன்று வைத்து வெளியே ஒன்றை பேசுவதில்லை. இதில் சந்தேகம் வேண்டாம் என அப்பொழுது உலவும் வதந்திகளுக்கு தெளிவான வாதங்களை முன்வைக்கிறார்.
பொதுவுடைமையாளர்களுக்கும் தெளிவுப்படுத்துகிறார். நாம் செய்யப்போவது சோசலிச புரட்சி அல்ல! புதிய ஜனநாயக புரட்சி தான். அதற்காக கவனம் கொடுத்து உழைப்போம் என்கிறார். கட்சிக்குள் அரசியல் கல்வியை பரப்புவோம். மக்களுடன் நெருக்கமாக இருப்போம். கடந்து வந்த போராட்ட பாதையில் எத்தனையோ பொதுவுடைமையாளர்கள் தங்கள் உயிர்களை தந்திருக்கிறார்கள். மக்களை அமைப்பாக்குகிற, அரசியல்படுத்துகிற பணிக்கு நம்மிடம் பொருத்தமில்லாத குணங்களை எல்லாம் கவனமாக களைந்துகொள்வோம் என்கிறார். பெரும்பாலான மக்களை, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது அவசியம் என்பதால் ஜனநாயக வேலை பாணியை வளர்த்து கொள்வோம் என்கிறார். இதன் வழியே போராடி 1949ல் மக்கள் சீனா மலர்ந்தது என்பது வரலாறு.
நமது நாடும் பல்வேறு ஏகாதிப்பத்தியங்களாலும், தரகு முதலாளிகளாலும் கடுமையாக சுரண்டப்பட்டு வருகிறது. தங்களுக்கு அடிபணிந்து சேவை செய்ய கடந்த எட்டு வருடங்களாக காவி பாசிஸ்டுகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இந்த ஹைபிரிட் கூட்டணி இந்தியாவின் பொதுச்சொத்துக்களை கணக்கு வழக்கில்லாமல் சூறையாடுகிறார்கள். இயற்கை வளங்களை அழிக்கிறார்கள். தங்களுக்குள் பங்குப்போட்டு கொள்கிறார்கள் எதிர்த்து போராடும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும், புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்கிறார்கள். சிறையில் தள்ளுகிறார்கள். நம்முடைய நாட்டுக்கும் தேவை ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் பங்கெடுக்கும் ஒரு ஜனநாயக கூட்டரசாங்கம் தான்.
ஜனநாயக சக்திகளை எல்லாம் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய
முன்னணி கட்டி அதன் மூலம் ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவது என்று மேலிருந்து செயல்படும் அதே வேளையில், அந்த திட்டத்தை பருண்மையாக அமுல்படுத்த கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் மக்கள் முன்னணியைக் கட்டுவது, தற்காப்பு குழுக்களைக் கட்டுவது ஆகிய வேலைகளை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவேண்டியுள்ளது. இதுவே மேலிருந்து செயல்படும் ஜனநாயக கூட்டரசுக்கு குறிப்பான திட்டத்தை நிறைவேற்ற கீழிருந்து நிர்ப்பந்தத்தை கொடுக்கும்.
இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் இடைக்கால திட்டமாகவும், இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியலின் திசை வழியாகவும், ”கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்” என்ற முழக்கத்தை முன்வைக்கிறோம்.
ஒடுக்கப்படுகிற அனைவரும் ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்! நமக்கான ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!
பதிப்பகம் : கீழைக்காற்று வெளியீட்டகம்
பக்கங்கள் : 130
விலை : 110
புத்தகம் வாங்க : +91 89256 48977
0 பின்னூட்டங்கள்:
Post a Comment