தனிப்பட்ட முறையிலோ, நிறுவனத்திலோ எப்பொழுதும் புலம்புவதில்லை. புலம்புவதினால் எதாவது நன்மை கிடைக்கும் என்றால், புலம்பலாம். அதனால் துளியும் பலன் கிடையாது. இருக்கும் நம்பிக்கையை தொலைப்பதற்கு தான் பயன்படும் என்பேன். ஒரு நிறுவனத்தில் புலம்பாமல், மூன்று ஆண்டுகள் வேலை செய்து, அதற்கு பிறகு கற்றுக்கொள்ள ஏதுமில்லை என புரிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ஆனால், இதெல்லாம் வேலையா? இதெல்லாம் சம்பளமா? இதெல்லாம் ஒரு நிறுவனமா? என சொன்ன சக ஊழியர் பத்தாண்டுகளுக்கு பிறகு இன்னும் அங்கு தொடர்கிறார். இந்தப் புத்தகத்தில் புலம்பலைப் பற்றி வருகிறது. “புலம்பல் என்பது வேலையில்லாத வீணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை விரயம் ஆக்கும் ஒரு சாதனம்”.
எப்பொழுதும் அலுவலக வேலைகளில் குறிப்பெடுக்கும் வழக்கம் உண்டு. குறிப்பாக செய்யவேண்டிய வேலைகள் குறித்த பட்டியல் எப்பொழுதும் இருக்கும். அதை வைத்துக்கொண்டு தான் அடுத்தடுத்து வேலைகளை செய்வேன். ஆனால், இப்படி குறிப்பெடுப்பது குறித்து, நமக்கு கீழே வேலை செய்யும் ஊழியர்கள் அத்தனை அக்கறை கொள்வதில்லை. எல்லாவற்றையும் நினைவில் வைத்து செய்வார்கள். எவ்வளவு பெரிய நினைவாற்றல் உள்ளவராய இருந்தாலும், ஒன்றிரண்டு மறந்துதான் போகும். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னாலும், செய்யமாட்டார்கள். நமக்குத் தான் கோவம் வரும். இந்த குறிப்புகள் எத்தனை அவசியம் என்பதை ஒரு தலைப்பில் நன்றாக விளக்குகிறார்கள்.
அலுவலகம் குறித்த எந்த விசயத்திலும் என் சொந்த கையெழுத்தை பயன்படுத்தமாட்டேன். கோழிக்கிறுக்கல் என்பார்களே அப்படித்தான் இருக்கும். ஆகையால் எப்பொழுதும் தட்டச்சு செய்து தான் அறிக்கை தாக்கல் செய்வேன். இந்தப் புத்தகத்தில் அதை தெளிவாக எழுதியிருக்கிறார்கள். “மற்றவர்கள் படிப்பதற்காக நீங்கள் எழுதும் போது அதை எப்படி எழுதுகிறீர்கள் என்பது மிக முக்கியம்.”
இப்படி புத்தகம் முழுவதும் பல வழிக்காட்டல்கள் இருக்கின்றன. நமக்கு எதுப் பொருந்துகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் போலவே புத்தகத்தின் வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அத்தியாயம் துவங்குகிறது என்றால், கருப்பு, வெள்ளை பக்கத்தில் ஈர்ப்பாக துவங்குகிறது. அத்தியாயத்தில் உள்ள குட்டித் தலைப்புகள் ஒவ்வொன்றும் இரண்டு பக்கங்கள் மட்டுமே! அதைத் தாண்டி போகவேயில்லை. குட்டி எழுத்துகளாய் தந்து நம் கண்ணை சிரமப்படுத்தவில்லை.
வாங்கிப் படியுங்கள். நிச்சயம் பயன்படும்.
பக்கங்கள் : 233
விலை : ரூ. 150
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment