December 3, 2008
என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்
ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா!
அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால்.
****
அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய் பரிசீலித்து வருகின்றன.
அமெரிக்க “தேசிய பொருளாதார குழு” நிலைமையை ஆய்வு செய்து, இரண்டாம் உலகப்போருக்கு பின், 70, 80 களில் இருமுறை (சமாளிக்க கூடிய) நெருக்கடியை அமெரிக்கா சந்தித்தது. இப்பொழுது நிகழ்ந்திருக்கிற சரிவு மிகப்பெரிய சரிவு. இப்பொழுது தொடர்கிற மந்தநிலை அடுத்த ஆண்டு (2009 ) மத்தியில் வரை நீடிக்கும் என அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.
இந்த அறிக்கையை வெள்ளை மாளிகையும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. (2, டிசம். 2008)
இந்த அறிக்கை பங்குதாரர்களுக்கு ஒரு ஆறுதல் அளிப்பதற்காக தான். அடித்த கொள்ளை கொஞ்சமா! இன்னும் பல மாதங்கள் நீடிக்கும்.
****
இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என தேடுகிற பொழுது, 2001-2002ல் நிகழ்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘என்ரான் திவால்’ பின்னணி இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.
என்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளும், கணக்கீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டு வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து பல சித்து வேலைகள் செய்து நிறைய கொள்ளையடித்து தான் திவாலாக்கியிருக்கிறார்கள்.
தில்லுமுல்லு வேலைகள்
என்ரானின் நிர்வாகிகள் தங்களது துணைக் கம்பெனிகளின் வரவு செலவு அறிக்கைகளை, அடுத்தடுத்து என்ரானின் வரவு-செலவு அறிக்கையிலிருந்து நீக்கினார்கள். இதன் மூலமாக தமது பிரமாண்டமான கடன் பொறுப்புகளை மூடி மறைத்து, தமது வருவாய்களை ஊதிப் பெருக்கி காட்டினார்கள்.
அமெரிக்காவில் முதன்மையான கணக்கீட்டு (ஆடிட்டர்) நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனம் இந்த மோசடிகளை கணக்கு புத்தகங்களில் இருந்து மறைத்து சான்றிதழ் வழங்கியது. இதற்காக இவர்கள் பெற்று கொண்ட வருமானம் – வாரத்திற்கு பத்து இலட்சம் டாலர்கள்.
லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது. இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.
அமெரிக்காவின் நம்பர் ஒன் என அழைக்கப்படும் சிட்டி குரூப், நம்பர் 2 யாய் திகழ்ந்த ஜே.பி. மார்கன் சேஸ் மற்றும் மெரில் லின்ச் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த கடன்கள் 800 கோடி டாலர்கள். இந்த மிகப்பெரிய கடனை தனது கணக்கேடுகளில் கடனாக காட்டாமல் கொள்முதலாக காட்டினார்கள்.
இந்த முதலீட்டு வங்கிகள் இப்படி பல கூட்டு சதி வேலைகளை செய்ததற்காக இவர்கள் பெற்ற ‘சன்மானம்’ ரூ. 20 கோடி டாலர்கள்.
இவர்கள் செய்தது மோசடி. இதை விட மோசடி என்னவென்றால், என்ரான் வீழப்போவது மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்திருந்தால், கையில் வைத்திருந்த என்ரானின் கடன் பத்திரங்களை பெருமளவில் நல்ல விலைக்கு விற்று தள்ளிவிட்டார்கள்.
இவர்களால் இப்படி ஏமாற்றப்பட்ட பல ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் இந்த மூன்று முதலீட்டு வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றக் குழு மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
இப்படியாக 7000 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த என்ரான் என்ற நிறுவனத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவந்து கவிழ்த்துவிட்டார்கள். இதில் பல கோடி கொள்ளையடித்தவர்கள் – என்ரானின் முதன்மை நிர்வாகிகள், கணக்கீட்டு நிறுவனம், முதலீட்டு நிறுவனங்கள்.
பணத்தை இழந்து போண்டியானவர்கள் - தனது சேமிப்பு பணம், ஓய்வூதிய பணத்தையெல்லாம் பங்குகளாய் வைத்திருந்த தொழிலாளர்கள் (என்ரான் இல்லாமல் போனதால், வேலையும் இல்லை) மற்றும் இதன் பங்குகளை நம்பி வாங்கி ஏமாந்து போன பொதுமக்கள்.
இந்த மோசடிக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா! கிடைத்தது! எப்படி?
என்ரான் மோசடியில் ஈடுபட்டு பல கோடி சுருட்டிய நிர்வாகிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவிவிட்டார்கள்.
பல கோடி வருவாய் அடைந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கீட்டு நிறுவனத்தை ஊத்தி மூடிவிட்டார்கள். வேறு பெயரில் அவர்கள் புதிய நிறுவனத்தை தொடங்கி விட்டார்கள்.
பல கோடி லாபம் பார்த்த முதலீட்டு வங்கிகள் தான் இன்றைக்கு மஞ்சள் கடிதாசி கொடுத்து இருக்கின்றன. இப்படிபட்ட “நல்ல” நிறுவனங்களை கைதூக்கி விடுவதற்காக தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து 70000 கோடி டாலர் கொடுக்க ‘மக்கள் பிரதிகள்” ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்தியும் வருகிறார்கள்.
(முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக்கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன? என்று கேட்டார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கூற்றை நீருபித்துவிட்டார்கள்)
உண்மையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு.... பட்டை நாமம்.
இது அநீதி என்கிறீர்களா?
இது தான் முதலாளித்துவ நீதி.
ஆதாரம் :
ராபர்ட் பிரென்னர் – “அகெய்ன்ஸ்ட் த கரண்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய “ஊதிப் பெருக்கப்பட்ட என்ரான்: ஊழல்களும் பொருளாதாரமும்” கட்டுரையிலிருந்து.
நன்றி :
“இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற பத்திரிக்கை வெளியிடும் “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு, மும்பை.
தமிழாக்கம் – புதிய ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment