> குருத்து: அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

December 29, 2008

அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

மருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’

‘ஆம்’ என்றார்.

'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?'

‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.

‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’

‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.

****

இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.

திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்

லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.

உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.

என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.

- செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது.

இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.

Socrates said...

உலக வங்கியின் தலைவர் ஒழுங்கு நடவடிக்கை

தனது காதலிக்கு பதவிய உயர்வும் சம்பள அதிகரிப்பும் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள உலக வங்கியின் தலைவர் போல் வொல் ஃபோவிட்ஸிற்கு எதிராக ஒழங்கு நடவடிக்கை எடுக்க வங்கியின் 24 நாட்டு சபையின் தீர்மானத்திற்கு காத்திருக்கும்படி ஐரோப்பிய உதவி அமைச்சர்களுக்கு அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஹென்றி போல்ஸன் அறிவுறுத்தியுள்ளார்.

- இருந்தும் பலருடைய எதிர்ப்பால் அவரை தூக்கிவிட்டு இப்பொழுது அமெரிக்க புதிய தலைவரை நியமித்து விட்டது..