> குருத்து: அந்நிய முதலீடு – சில குறிப்புகள்!

December 17, 2008

அந்நிய முதலீடு – சில குறிப்புகள்!



முன்குறிப்பு:

அமெரிக்க திவால் தொடர்பான தேடலில் இந்த கட்டுரை ‘அந்நிய முதலீடு’ பற்றிய சிறு புரிதலை தருகிறது. படியுங்கள்.
***

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

இந்த கொள்கைகளின் அடிப்படையில்.. அந்நிய முதலீடுகளை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பல ஆண்டுகளாக வரவேற்று கொண்டிருக்கிறார்கள். இப்படி உள்ளே வருகிற அந்நிய முதலீடுகள் பல்வேறு வழிகளில் தங்களுடைய முதலீட்டை விட அதிகமாய் நாட்டை விட்டு கடத்திவிடுகின்றன.

பல நாடுகளில் இப்படி நிகழ்ந்திருப்பதை, தரவுகளுடன் தொடர்கிற கட்டுரை விளக்குகிறது.

****
இந்த கட்டுரையை லைட்லிங்க் என்ற பதிவர் எழுதியுள்ளார்.
***

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிய வல்லரசாக வேண்டுமா? வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? தொழில் நுட்பம் தரமாக வேண்டுமா? பொருளாதார முன்னேற்றம் வேண்டுமா? வேண்டும் என்றால் நீங்கள் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த வாசகத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.

முதலில் அன்னிய நேரடி முதலீடு பற்றி பார்ப்போம். ஒரு அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (FDI ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை.

எந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனவோ, அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்கின்றன.ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அரசு அந்த நிறுவனத்திற்கு மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால் உள் நாட்டில் உள்ள அன்னிய செலாவணி வெகுவாக விரைவில் கரைந்து போய்விடும். இவ்வாறு அன்னிய நேரடி முதலீட்டை காலியாக்கப்படும் அன்னிய செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமகா இருந்தால் அது நாட்டின் வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?

1995-2003 ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால், காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் முதலிய வடிவங்களில் அன்னிய செலாவணியாக வெளியேறிய மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்!

காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். தென் அமெரிக்க நாடான பிரேசிலும் இது தான் நடந்தது. அன்னிய நேரடி முதலீடு பெருக பெருக, நாட்டின் அன்னிய செலாவனி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ.148 கொடியாக இருந்தது. 1998-இல் இது ரூ.28,000 கோடியாக உயர்ந்தது.

(ஆதாரம்: UNCTAD அறிக்கை,2005)



அமெரிக்க என்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய வங்கிகளில் கடன் வாங்கியது. மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க 40% மூலதனத்தை இந்திய வங்கிகளில் கடனை வாங்கியது. அமெரிக்க பங்கு சந்தையில் நடத்திய மோசடி காரணமாக அந்த நிறுவனம் திவாலாகி போனது, அந்த நிறுவனம் இந்தியாவில் வாங்கிய கடன் இந்திய மக்களின் தலையில் விழுந்தது.

அது மட்டுமல்ல இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பே காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அந்த நிறுவனம் மாதம் தோறும் ரூ. 95 கோடியை விழுங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்பபடி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீடு நிறுவனங்களால் கிடைத்த தொகையை விட அந் நிறுவங்களுக்கு இந்திய அரசு கொடுத்த காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் அன்னிய செலவாணியே அதிகமாக உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகள் இதோடு நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டின் முதலீடு செய்த மூலதனத்தையே படிப் படியாக கடத்திச் சென்று விடுகின்றன.
பன்னாட்டு கம்பெனிகளால் ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 1,20,000 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணை நிறுவனமான எக்சான் தென் அமெரிக்க
நாடான சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்த நிறுவனம் இன்றைக்கும் லாபம் இட்டவில்லையாம் அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில் நடத்துகிறது என்ற கேள்வியெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.

அன்னிய முதலீடுகள் வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார்கள். இதுவும் அப்பட்டமான புளுகு. இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் முதலீடுகளாகவும் - பங்கு சந்தை முதலீடுகளாகவும் இருப்பதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சேவை துறையிலும், உற்பத்தி துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலை வாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமே தங்கள் வேலையை முடித்து கொள்கின்றன.

இவ்வகை அன்னிய முதலீடுகள் பங்கு சந்தையில் புள்ளிகளை ஏற்றினாலும் திடீர் ஒருநாள் சரிவதும் பின்பு ஏறுவதும் (அப்பட்டமான) சூதாட்டம் தான் என மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது. இதையும் மீறி சிலர் உடல் உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தங்கள் வாழ்க்கையை (சேமிப்பைத்) தொலைத்து விடுகின்றனர். மும்பை பங்கு சந்தை அமைந்துள்ள அதே மகாராஷ்டிராவில் விதார்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த உண்மை நிலவரங்ளையெல்லாம் மூடிமறைத்து விட்டு, நமது அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீட்டை ஆதரிக்கின்றன.

நன்றி :

from : http://lightlink.wordpress.com

0 பின்னூட்டங்கள்: