> குருத்து: ‘பந்தய ஒப்பந்தங்களின்’ தன்மை

December 9, 2008

‘பந்தய ஒப்பந்தங்களின்’ தன்மைதோழி ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஒரு நிறுவனம். அதில் கணிப்பொறி வல்லுநர்கள் 10 பேர் வேலை செய்தார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, 7 வல்லுநர்களை தூக்கி கடாசிவிட்டார்கள். குறைந்த பட்சம் 3 நபர்கள் இருந்தால் தான் நிறுவனம் இயங்கமுடியும் என்பதால், விட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த 3 பேரில் ஒருவர் காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, தன் துணைவியாரிடம் “இப்ப வேலை இருக்கு என்ற நம்பிக்கையில் கிளம்புறேன். மாலை வரும்பொழுது வேலையில்லாமல் கூட போகலாம்” என சொல்லி பதட்டத்துடன் தான் தினம் விடை பெற்று போகிறாராம்.

இப்படிப்பட்ட கதைகள் இப்பொழுது அமெரிக்காவில் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏற்கனவே தற்கொலைகள் நிறைய நிகழ்கிற பூமி. இப்பொழுது, இன்னும் பல நிகழும்.

*****

பந்தய ஒப்பந்தங்கள் என்றால் என்ன? பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா? இல்லையா எனப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக... பந்தய ஒப்பந்தங்களின் தன்மை என பார்க்கலாம்.

1900 காலத்தில் நிதி மூலதனம் தேசிய அரசுகளின் அடிப்படையில் அமைந்து, அவற்றால் வளர்க்கப்பட்ட ஒன்று.

வங்கி மூலதனம், தொழில் மூலதனம் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைப்பு.

இத்துடன், நவீன காலத்தில் பல புதிய மூலதன நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவைகள் காப்பீட்டு கம்பெனிகளின் நிதி, ஓய்வூதிய நிதிகள், நல நிதியங்கள் (Mutual Funds), வேலியிடப்பட்ட நிதியங்கள்.

இன்று, நிதி மூலதனமானது, எந்த நாட்டுக்கானது என்ற முத்திரையின்றி, ஒரு சில ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவோடு மட்டுமே இயங்குகிறது என்பதோடல்லாமல் ஒரு சர்வதேச தன்மையுடன் விளங்குகிறது.

அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிதியை தங்குதடையின்றி உறிஞ்சுகிறது. நொடிக்குள் அது உலகின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது. பிரமாண்டமான அளவுகளில் நடக்கிறது. குறுக்கும் நெடுக்கும் பரந்து விரிந்து அதிகமான ஓட்டமும் சுழற்சி கொண்டதாக, பரபரப்பும் அலைபாயும் தன்மையும் கொண்டதாக, வெள்ளப்பெருக்கு போல எதிர்வருவனற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகும் ஆற்றல் கொண்டதாக, திடீர் திடீரென ஏறி இறங்கும் இயல்பு கொண்டதாக (Volatile) இருக்கிறது.

சில தேசிய அரசுகளின் வருமானத்தை விட் அதிக தொகை கொண்டதாகவும், செயற்கைக் கோள் – கணிப்பொறி போன்ற நவீன சாதனங்களால் உலகளாவிய இணைப்பும் கொண்டதாக இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: