> குருத்து: போக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை!

December 23, 2008

போக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை!கடந்த ஆண்டில் சென்னையில் நடந்த வாகனவிபத்துகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டில் நவம்பர் மாதத்திற்குள்ளேயே வெற்றிக்கரமாக(!) எட்டிவிட்டதால்...

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என காவலர்கள் டிசம்பர் இறுதிவாரம் அறிவுரை சொல்வார்கள். ஜனவரிக்கு பிறகு கடைப்பிடிக்க வில்லையெனில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கமிசனர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (21.12.2008)

***

முன்பெல்லாம் வேலை தொடர்பாக மாதம் ஒருமுறை சென்னை வந்து போவேன். அப்பொழுதெல்லாம் சென்னை சிக்னல்களில் மக்கள் “எவ்வளவு ஒழுங்காக வரிசையாக போகிறார்கள்” என வியந்து பார்த்திருக்கிறேன்.

வேறு வழியேதும் இல்லாமல், சென்னையில் செட்டிலாக வேண்டிய ஒரு நெருக்கடி வந்தது. சென்னையிலேயே தங்கினேன். தொடர்ச்சியாக கவனித்த பின்புதான் உண்மை தெரிந்தது. போலீசு எங்கெல்லாம் நின்று கவனிக்கிறார்களோ அங்கெல்லாம் தான் மக்கள் ஒழுங்காக நிற்கிறார்கள் என புரிந்துகொண்டேன்.

***

வளர்ந்த நாடுகளில் 80% வாகனங்கள் ஓடுகிறது. ஆனால், நம்மை போன்ற வளரும் நாடுகளில் தான் 80% விபத்து ஏற்படுகிறதாம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12036 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. 11034 பேர் இறந்திருக்கிறார்கள். சென்னையின் பங்கு மட்டும் 1161 பேர். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேர். மொத்த தமிழ்நாட்டில் சென்னையின் பங்கு மட்டும் ஏறத்தாழ 10%க்கும் மேல்.

கடந்த ஆண்டுகளில், வருடம் தோறும் 1000 என உயிர் இழப்புகள் அதிகரித்திருக்கிறது.

சென்னையில் வண்டி ஓட்டுவது மிக மிக சிரமமான காரியம்.
வேக வேகமாய் பறப்பார்கள். சிக்னலில் நிற்கும் பொழுது ஒவ்வொருவரையும் கவனியுங்கள். பயங்கர டென்சனுடன் எரிச்சலுடன் நிற்பார்கள். விதிகள் எல்லாம் மற்றவர்களுக்கு. தனக்கு மட்டும் இல்லை என நினைப்பிலேயே பெரும்பான்மையோர் வண்டி ஓட்டுகிறார்கள்.போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என மஞ்சள் விளக்கு போட்டதும் வண்டியை நிறுத்தினீர்கள் என்றால்... பின்னாடி வரும் லாரியாலோ அல்லது அரசு பேருந்தாலோ நீங்கள் சட்னியாகிவிடுவீர்கள்.

மக்களுக்கு இவர்கள் சொல்கிற அறிவுரை எல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள். எல்லாம் தெரியும். பிறகு ஏன் இப்படி ஒழுங்கு இல்லாமல் இருக்கிறார்கள்

இந்த பிரச்சனை சமூக உளவியல் சார்ந்தது. சமூகப் பொறுப்பு இல்லாமல் இருப்பது தான் இவ்வளவு விபத்துக்கும் காரணம்.

சக மனிதர்களை பற்றிய அக்கறையின்மை, ஒவ்வொரு மனிதனும் சென்னையில் தனித்தனித் தீவாய் மனதளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாக பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற நெறி இல்லாமல் விரைவில் சம்பாதிக்க வேண்டும். அதுவும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை மக்களின் மனதில் பாசியாய் படர்ந்திருக்கிறது.

சென்னையில் நிலவுகிற முதலாளித்துவ சமூகம் அதற்கு நல்ல உதாரணமாய் இருக்கிறது.

‘என் தனிப்பட்ட செயல்களைப் பார்க்காதே! என் படைப்பை பார்!’ என்று கேவலமாய் வாழ்ந்தாலும், சமூகத்தில் புகழ்பெற்று வலம்வரும் இலக்கியவாதிகள்.

ஏரியாவிற்குள் கஞ்சா வித்தவன், கள்ளச்சாராயம் வித்தவன், கந்துவட்டி வாங்கியவன் எல்லாம் ஏதோவொரு ஓட்டுக்கட்சியில் சேர்ந்து கவுன்சிலர், எம்.எல்.ஏ. என வலம் வருகிறார்கள்.

சாராயம் வித்தவன், மாமா வேலை பார்த்தவனெல்லாம் தனியார் கல்லூரிகளை உருவாக்கி கோடிக்கணக்கில் கல்லாக்கட்டி சமூகத்தில் கல்வியாளராக வலம் வருகிறார்கள்.

இப்படி கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எல்லா அரங்கிலும் மக்கள் விரோதிகள் முன்னணியில் நிற்கிறார்கள். சமூக அக்கறை உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி மக்களின் மனதில் பாசியாய் படந்திருக்கிற கோளாறான சிந்தனை முறை மாற வேண்டும். சமூகமும் மாற வேண்டும்.

சிந்தனை இப்படி கோளாறாய் இருக்கும் பொழுது, சாலையில் மட்டும் சரியாக நடந்து கொள்வார்களா என்ன? ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலையில் பெரியதொரு மாற்றம் வரச் சாத்தியமில்லை.

மற்றபடி, சட்டங்களை கடுமையாக்கினால்... சரியாக போய்விடும் என்கிறார்கள். நாடு லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி திளைக்கும் பொழுது, சட்டங்களை கடுமையாக்கினால்... காவலர்களின் தொந்திகளைத் தான் இன்னும் பெருக்க வைக்கும்.

5 பின்னூட்டங்கள்:

நாகு said...

// நாடு லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி திளைக்கும் பொழுது, சட்டங்களை கடுமையாக்கினால்... காவலர்களின் தொந்திகளைத் தான் இன்னும் பெருக்க வைக்கும். //

தாங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. போக்குவரத்து ஆணையர் தங்களின் உரிமைகளை சரியாக பயன்படுத்தத் துவங்கும் நேரத்தில் இதனை அருமையாக செயல்படுத்திக் காட்ட முடியும்.

இலஞ்சம் வாங்கும் காவலர்கள் பிடிப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
தண்டனைகளை பல படிநிலைகளில் வழங்க வேண்டும். பணமாகவும், வேலைகளாவும் வழங்க வேண்டும். சஸ்பெண்டெல்லாம் செய்யகூடாது. நிரந்தரமாக வேலையை விட்டு நீக்க வேண்டும்.இந்த தண்டனை விவரங்களை செய்தியாக ஊடங்கங்களில் வலம் வரச் செய்ய வேண்டும்.

DHANS said...

எல்லாவற்றையும் பள்ளிகள்வியிலிருந்து அரம்பிக்க்க வேண்டும் அப்படி செய்தாலும் வீட்டில் பெற்றோரின் வளர்ப்பும் கண்டிப்பும், சொல்லிக்கொடுத்தாலும் மட்டுமே ஒருவரை வளர்ந்த நிலையில் விதிகளை மதிப்பது சமூக அக்கறை என்பவற்றை பற்றி சிந்திக்க தூண்டும்

மிக நல்லபதிவு, நானும் கூட இதை பற்றிய பதிவு எழுதியுள்ளேன் அனால் முதலில் வந்த பின்னூடமே போதும் என்னகாரணம் என்று அறிய

DHANS said...

try to obey traffic rules always it may help others to see and obey the rules sometimes later

Socrates said...

//இலஞ்சம் வாங்கும் காவலர்கள் பிடிப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.//

தண்டனைகள் வழங்குகிற அதிகார வர்க்கமே லஞ்ச லாவண்யத்தில் தானே திளைக்கிறது. அவர்கள் எப்படி தண்டனை தருவார்கள்?

பல மேலாதிகாரிகளின் வங்கி லாக்கர்களில் பல லட்சங்கள் கைப்பற்றப்படுவதாய் செய்திகள் வருகின்றன. பல கோடிகளில் சொத்து சேர்த்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

Socrates said...

//try to obey traffic rules always it may help others to see and obey the rules sometimes later//

சமூக அக்கறை கொண்டவர்கள் பொறுப்பாக தான் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கிறார்கள்.

பலரை பார்த்திருக்கிறேன். கன்னாபின்னாவென்று வண்டி ஓட்டி விபத்து ஏற்பட்டால் கூட, பிறகும் வேகமாக தான் வண்டி ஓட்டுகிறார்கள்.