> குருத்து: இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

December 26, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.

அமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008

****

அமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.

அதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால்...


இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)
நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)

1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு
அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.

பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து
கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.

வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.

இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,
நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)

அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

0 பின்னூட்டங்கள்: