நிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்து.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா?
ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.
பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்... இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.
(நன்றி – தினமணி கதிர் - 21.12.2008)
ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.
நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.
செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.
அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்
1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.
அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.
அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.
இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.
நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008
பின்குறிப்பு : இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடப்படும்.
December 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment