> குருத்து: கண் சிமிட்டும் நேரம் (1988) ஒரு நல்ல திரில்லர்

February 14, 2022

கண் சிமிட்டும் நேரம் (1988) ஒரு நல்ல திரில்லர்


நாயகன் கொலைவெறியோடு சென்னை வந்து சேர்கிறான். மருத்துவராக வேலை செய்யும், நாயகியின் வீட்டை நோட்டம் விடுகிறான். வீடு புகுந்து கொலை செய்கிறான். தவறுதலாக நாயகியின் அத்தையை கொன்றுவிடுகிறான். தப்பிக்கும் பொழுது, விபத்தில் மாட்டுகிறான்.

நாயகியின் மருத்துவமனைக்கே சிகிச்சைக்கு வந்து சேர்க்கிறார்கள். விபத்துக்கு முன்பு நடந்த எந்த நினைவுகளும் மறந்துபோகிறான். தொடர்ச்சியாக அவனுக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது, நாயகிக்கு நாயகனை பிடித்துப் போகிறது. எங்கே அனுப்புவது என யோசிக்கும் பொழுது யாருமில்லாமல் இருக்கும் நாயகி தான் பராமரிப்பதாக அழைத்து செல்கிறாள்.

அவனுக்கு எப்பொழுது நினைவு திரும்பினாலும், நாயகியை கொலை செய்வான் என்கிற நிலையில் படம் நகர்கிறது. நாயகன் ஏன் கொலை செய்ய நினைத்தான்? என்ன நடந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு காதல் விவகாரம். அதில் இருந்து தப்பிக்க சுயநலமாக ஒரு ஆள் மொட்டைக் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் இரண்டு குடும்பங்களை எப்படி மோசமாக பாதிக்கிறது என்பது தான் கதை. நம்மூரில் உண்மை சம்பவம் பரவுவதை விட, காட்டுத்தீ போல வதந்தி பரவுவது தான் அவலம். ஒரு ”செய்தி” வருகிறது என்றால், அந்த கடிதம் உண்மையா? பொய்யா? என யாருமே ஆராய்ந்து பார்ப்பதில்லை அடுத்தடுத்து உணர்ச்சிப்பூர்வமாகவே முடிவெடுக்கிறார்கள். நம்ம தாத்தா சொன்னது

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்பது தான் நினைவுக்கு வருகிறது. நம் நாட்டில் வதந்திகளைப் பரப்பியே கட்சி வளர்ப்பவர்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

நடைமுறையில் உள்ள ஒரு சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை சுவாரசியமான படமாக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியது கவிஞர் கண்ணதாசனுடைய மகன் கலைவாணன் கண்ணதாசன். பட தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், போலீஸ் ஆய்வாளராக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் சரத்குமார். வேறு வழக்கே இல்லாதது போல, நாயகன், நாயகி பின்னாடியே சுத்த விட்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

கார்த்திக் கொலைகாரனாகவும், எல்லாவற்றையும் மறந்து வெள்ளந்தி மனிதராகவும் நன்றாக வித்தியாசம் காண்பித்திருக்கிறார். அம்பிகாவும் சிறப்பு. சிரிப்புக்காக எஸ்.எஸ். சந்திரனும், செந்திலும் வருகிறார்கள். கடுப்பேற்றுகிறாரகள். ”விழிகளில் கோடி அபிநயம்” பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. இந்த பாடல் தான் இந்தப் படத்தையே பார்க்க தூண்டியது.

இந்தப் படத்தில் நாயகன் ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறிழைக்கிறான். அவனை மன்னித்து இருக்கலாம். அவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துவிட்டார் இயக்குநர் என நினைத்தேன். இந்தப் படத்தின் வெற்றியில் இந்தியில் மாதுரி தீட்சித்தை வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்தியில் நான் யோசித்தது போல, அவர்களும் யோசித்து இறுதி காட்சியை மாற்றி இருந்தது சிறப்பு.

யூடியூப்பில் இலவசமாகவே கிடைக்கிறது. திரில்லர் விரும்பிகள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: