> குருத்து: இளையராஜா புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையா?

February 7, 2022

இளையராஜா புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையா?


இளையராஜா சில பாடகர்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தினார். பல பாடகர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் அப்படியில்லை. பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தார் என ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

என் புரிதலில்…

இளையராஜா காலம் என்பது ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் என மிகவும் பிசியாக இசைத்து கொண்டிருந்தார். காலை 7 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை ஒரு செட்யூல். மதியத்திற்கு மேல் இது போல இன்னொரு செட்யூல்.

இளையராஜா டியூன் தயார் செய்ததும், கேசட்டில் பதிவு செய்து பாடலாசிரியருக்கு அனுப்பி பாடல் எழுதி வாங்குகிறார்கள். இது எம் எஸ் வி காலத்தில் வழக்கம் இல்லை. அவர் நேரடியாக டியூன் வாசித்து கண்ணதாசனிடம் பாடல் வாங்கியவர். கண்ணதாசன் என்றால் நேரடியாக உட்காரவேண்டும். அதனாலேயே இளையராஜா - கண்ணதாசன் இணைந்து வேலை செய்வது குறைந்தது. பாடலாசிரியர் கண்ணதாசன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இளையராஜா வைத்திருந்தார். அதை பல மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

விடிகாலையில் டைரி பார்த்து ஒரு பாடகரை அழைப்பார்களாம். அவர் ஊரில் இல்லையெனில் அடுத்த பாடகரை அழைப்பதும்... இல்லையெனில் ”விடு! நானே பாடிவிடுகிறேன்” என இளையராஜாவே பாடுவதும் என்பதாக நிலை இருந்திருக்கிறது.

பாடகரை வரவைத்து அவருக்கு டியூன் சொல்லி, தவறுகளை திருத்தி, மொத்த ஆர்கஸ்ட்ராவுடன் இணைந்து பாடுவார்கள். ஒரு பாடலுக்கு ஒரு செட்யூல் தான். கொஞ்சம் சொதப்பினாலும், அடுத்த செட்யூல் போய்விடும் என்கிற பதட்டம் அதிகம் இருந்தது. நேரமின்மையும், பட்ஜெட்டும் காரணமாக இருந்தது. ஆகையால், மிகவும் திறன் வாய்ந்த பாடகர்களுடன், இசை கலைஞர்களுடன் இளையராஜா பணியாற்றிக் கொண்டிருந்தார். புதியவர்களுக்கும் வாய்ப்பு தந்தார் என்பதும் உண்மை. உதாரணம் : ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் காலம் அப்படியில்லை. குறைவான படங்கள். பாடகரை தனித்தனியாக பாடவைத்து, ஆர்க்கெஸ்ட்ராவை தனித்தனியாக வாசிக்க வைத்து இணைக்க கூடிய தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆகையால், வெரைட்டியான குரல்களுடன் ஏ.ஆர். ரகுமான் பயணித்தார்.

இளையராஜா சின்ன சின்ன தயாரிப்பாளர்களையும் கூட ஆதரித்தார். ஏ.ஆர். ரகுமான் காலம் அப்படியில்லை.

ஆகையால், இருவரைப் பற்றி ஒப்பிடும் பொழுது, அவர்களின் காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: