> குருத்து: சென்னை வண்டலூர் : அண்ணா உயிரியல் பூங்கா – ஒரு பார்வை

February 22, 2022

சென்னை வண்டலூர் : அண்ணா உயிரியல் பூங்கா – ஒரு பார்வை








ஊரிலிருந்து வேலை சம்பந்தமாக அக்கா பையன் வந்திருந்தான். முதலில் மகாபலிபுரம் போகலாம் என சொன்னான். 70 கிமீ என்பதால், 1.15 மணி நேரத்தில் போய்விடலாம் அல்லவா? என்றான். மாபெரும் சிங்கார சென்னையை கடந்து தான் செல்லவேண்டும். ஆகையால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்றதும், பயந்துவிட்டான். ”அப்ப பைக்கிலேயே வண்டலூர் ஜூ போகலாம்” என சொல்லிவிட்டான்.


வெளியே பிரிஞ்சி வாங்கி, காலை 11 மணிக்கு உள்ளே போய்விட்டோம். பார்க்கிங் கட்டணத்தை மணிக்கு இவ்வளவு என வாங்குகிறார்கள். பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ. 90. பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவில் பரந்து இருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நெருக்கமான கான்கிரீட்டு காடுகளுக்கு மத்தியில் ஒரு ’காடு’ என்பது கொஞ்சம் ஆச்சர்யத்துக்குரியது தான்! இந்தியாவில் முதலில் துவங்கப்பட்டதும், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு பிறகு பரப்பளவில் பெரியது இது தான் என்கிறார்கள்.

வார நாட்களில் 5000 பேர் வரையும், விடுமுறை நாட்களில் 10000 பேர் வரையும் மக்கள் பார்வையிடுகிறார்கள். பரந்து இருக்கும் பூங்காவை நடந்து போய் பலரும் பார்க்கிறார்கள். நடந்து போனால், முழுவதையும் பார்க்க முடியாது. சோர்வாகி விடும். உள்ளேயே வாடகைக்கு மிதிவண்டி தருகிறார்கள். மணிக்கு ரூ.30. ஒரு வண்டிக்கு முன்பணமாக ரூ. 200 தரவேண்டும். அதே பேட்டரியால் இயங்கும் மிதிவண்டி என்றால், மணிக்கு ரூ. 90. அதற்கு முன்பணம் ரூ. 500 செலுத்தவேண்டும். இளைஞர்கள் பலரும் மிதிவண்டிகளில் சுற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

நடந்துபோக முடியாமல், மிதிவண்டி இயக்க முடியாதவர்கள், 13 பேர் வரை உட்கார்ந்து செல்லும் பேட்டரி கார்களை தேர்ந்தெடுக்கலாம். ஒரு ஆளுக்கு ரு 100 வாங்கி கொண்டு, 45 நிமிடங்களில் சுற்றிவருகிறார்கள். அவ்வளவு பெரிய பூங்காவை 45 நிமிடங்களுக்குள் எப்படி சுற்றி வந்து விலங்குகளைப் பார்ப்பது? என யோசனையாக இருந்தது. சில முக்கியமான இடங்களில் இறக்கிவிட்டு போய் 10 நிமிடத்தில் வாருங்கள்! 5 நிமிடத்தில் வாருங்கள் என சமாளித்துவிடுகிறார்கள்.

பறவைகள் பெரிய கூண்டுகளுக்குள் இருந்தன. விதவிதமான குரங்குகள் மரங்களில் அமர்ந்திருந்தன. நானெல்லாம் எவ்வளவு பெரிய ஆள்? என்னைப் போய் சிறை வைச்சிட்டிங்களேடா? என வெள்ளை நிறத்தில் வங்கப்புலி மட்டும் பார்வையாளர்களை பார்த்து முறைத்துப் பார்த்தப்படி இருந்தது. சிங்கம் ஏதும் கண்ணில்படவில்லை. முதலை ஒன்று எதையோ ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு, ஆவென வாயைப் பிளந்தபடியே நிறைய நேரம் இருந்தது,

ஓநாய்கள், கழுதைப்புலி, ஒரு சிறுத்தை, இரண்டு யானைகள், ஒரு ஒட்டகசிவிங்கி, இரண்டு காண்டாமிருகங்கள், நீர்யானை ஒன்று என பார்க்க முடிந்தது. விலங்கின் பெயர், உலகில் எங்கெங்கு வாழ்கின்றன? அதன் ஆயுள் காலம் எவ்வளவு? இனப்பெருக்க காலம் என்ன? என்கிற சில விவரங்களை ரத்தின சுருக்கமாக ஒவ்வொரு இடத்திலும் போர்டு வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் காண முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய விலங்குகள் இருந்தன. நானே பார்த்திருக்கிறேன்.. கொரானா வெளியில் ஏற்படுத்திய மோசமான விளைவுகள் அங்கும் ஏற்படுத்தியிருந்ததை பார்க்க முடிகிறது. சில விலங்குகள் இறக்க, ஊழியர்களை சோதிக்கும் பொழுது, பலருக்கும் கொரானா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுவாக நகர்ப்புறங்களில் பூங்கா போன்ற பொது இடங்களை மூடியதைப் போலவே இந்த பூங்காவையும், சில மாதங்கள் மூடி வைத்திருந்தார்கள். இணையத்தின் வழியாக சில விலங்குகளின் செயல்பாடுகளை பார்க்கலாம் என விளம்பரத்தினார்கள். அது எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என தெரியவில்லை.

ஒரு சிங்கத்தையும், ஒரு யானையையும் நடிகர் சிவகார்த்திகேயன் சில மாதங்களுக்கு தத்து எடுத்திருந்த செய்தி படித்தது நினைவுக்கு வந்தது. .அவர்களுடைய வலைத்தளத்தில் எவ்வளவு வாங்குகிறார்கள் என தேடிப்பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ.100 என போட்டிருந்தார்கள். சிவகார்த்திகேயேன் தத்தெடுத்திருந்த சிங்கம் கொரானா காலத்தில் செத்து போயிருந்தது. இப்படி தொடர்ச்சியான செய்திகளுகு பிறகு, முதல்வர் ஸ்டாலின் உள்ளே போய் பார்த்தார்

இந்திய அளவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி, ஒரிசா, இமாச்சல் பிரதேசம் என இன்னும் சில மாநிலங்களில் உயிரியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பூங்காவின் வரலாறு தேடினால், பிரிட்டன் ஆதிக்கத்தின் இந்தியா இருந்த காலத்தில், ஒரு வெள்ளைக்கார மருத்துவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட்டில் 1850களில் விலங்குகள் ஒன்றிரண்டை கூண்டில் வைத்து காட்சிக்கு வைத்துள்ளார். வெளியூரில் இருந்து கூட மக்கள் ஆர்வமாய் பார்த்திருக்கிறார்கள். 1855ல் ஒரு பூங்காவாக ஏற்படுத்தி, பல விலங்குகளை கொண்டு வந்து உயிரியல் பூங்காவாக உருவாக்கியிருக்கிறார்கள். நூறாண்டு கடந்தும் அங்கேயே இருந்திருக்கிறது. பிறகு, நகரத்தின் முக்கிய இடம் என்பதால், விரிவாக்கம் செய்ய முடியாததால் 1985ல் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தாம்பரம் அருகே வண்டலூரில் நிறுவியிருக்கிறார்கள்.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு ஒரு காட்டைப் போன்ற சூழ்நிலையில் விலங்குகளைப் பார்ப்பது என்பது சந்தோசமான விசயம் தான். வெயில் காலம் துவங்கிவிட்டது. பூங்காவை சுற்றிப் பார்த்த வரையில் எல்லா மிருங்களும் சோர்வாகத்தான் இருக்கின்றன. மனிதர்களின் முகங்களை காணப் பிடிக்காமல் எங்கோ போய் ஒளிந்துகொண்டு தான் இருக்கின்றன. சுதந்திரத்தின் அருமை நமக்கு தெரியும். காடுகளில் தன் சொந்தங்களோடு, தன் இயல்புகளோடு சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மிருகங்களை, உலகம் முழுவதும் பறந்து திரிந்த பறவைகளை ஒரு சின்ன எல்லையை வகுத்து அதற்குள் தான் எல்லா பருவ காலங்களிலும் வாழவேண்டும், பறக்கவேண்டும் என்பது அநீதியாக தான் எனக்குப்படுகிறது!

வாழ்ந்து கெட்ட பூங்காவைப் போல தான் காட்சியளிக்கிறது. அரசு ஏதோ சமாளித்து ஓட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது.. ஒழுங்காக பராமரிக்கவில்லை என சமீபத்தில் தான் கோவையில் இருந்த உயிரியல் பூங்காவை மூட உத்தரவிட்ட செய்தி நினைவுக்கு வருகிறது. இந்த பூங்காவையும் எப்பொழுது மூடுவார்கள் என தெரியவில்லை. முறையாக பரமாரிக்கப்படாமல் கண்ணெதிரே ஒவ்வொரு மிருகமும் செத்து மடிவதை விட, இழுத்து மூடிவிடுவதே கருணைமிக்க செயலாக இருக்கமுடியும் என எனக்குப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

0 பின்னூட்டங்கள்: