> குருத்து: பட்ஜெட் 22 : கழுத்தை நெறிக்கும் கடனும், வட்டியும்!

February 3, 2022

பட்ஜெட் 22 : கழுத்தை நெறிக்கும் கடனும், வட்டியும்!

படம் : உலகவங்கி


ஒரு குடும்பத்தை நடத்த‌ தினசரி தேவை ரூ. 100. ஆனால் வருமானமோ ரூ. 65 தான் வருது. மீதிக்கு என்ன செய்யிறது? தயங்காமல் கைய நீட்டவேண்டியது தான். இதில் இன்னொரு விசயம். தினசரி ரூ. 100 தேவையில் ஏற்கனவே வாங்குன கடனுக்கு வட்டி ரூ. 20 அடக்கம். "இது குடும்பமா? திவால் தான்! சீக்கிரமே தெருவுக்கு வந்துரும்!" என மோசமாக திட்ட‌ ஆரம்பிக்காதீர்கள். அந்த குடும்பமே நம்ம இந்தியா தான்!


காங்கிரசு கட்சி ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 7 ஆண்டுகளில், அது ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.

இப்படியும் சொல்லலாம்! நாடு 'விடுதலை' அடைந்தது துவங்கி, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஆண்ட‌ 7 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

வாங்குனது வாங்குனாங்க! நல்ல ஆட்களிடம் வாங்கினால் பரவாயில்லை. உலக வங்கி போன்ற ஆட்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். உலக வங்கியிடம் உள்ள பணம் யாருடையது? அமெரிக்கா ஒரு பெரும் பங்கு போட்டிருக்கிறது. அமெரிக்கா தவிர, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்காளிகள்.

கடன் கொடுத்தோமா? வட்டியை வாங்கினோமா? என இருக்கமாட்டார்கள். உலக வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிற நாடுகளின் நிறுவனங்கள் நம்மை போன்ற கடன் வழங்கிய நாடுகளுக்கு உள்ளே புகுந்து உள்புற கட்டுமான வேலைகளை அவர்களே செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் கொடுத்த கடன், லாபம் என்ற பெயரில் வளர்ந்த நாடுகளுக்கே சென்றுவிடும். ஆனால் கடன் மட்டும் குறையவே குறையாது. அதன் மூலம் கழுத்தில் துண்டைப் போட்டு தனக்கு சாதகமான அரசியல், ஆதிக்க விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

உதாரணமாய், நம் நாட்டில் உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டதற்கு உலக வங்கி தான் காரணம். சாலைப்பயன்பாட்டை சமூக நோக்கில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என உலக வங்கி உத்தரவிட்டதை தான் ஒன்றிய அரசு நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது.

இப்படி வளர்கின்ற, பின்தங்கிய நாடுகளை உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற அமைப்புகள் கடன்களை வாங்க உற்சாகப்படுத்தும். கடன் வாங்க மறுப்பவர்களை குறைந்தபட்சம் "சாத்வீகமான" முறையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்குவார்கள். முடியலையா? அதிகப்பட்சம் கொன்றுவிடுவார்கள். (பார்க்க : ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்”)

இது சம்பந்தமாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ "இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதன்மூலம் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஓரளவு முன்னேற்றம் பெறுவதும், பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதுமாகத்தான் சுழற்சியாக இருக்கிறது" என்கிறார்.

இவ்வளவு கடனை வாங்கி வைத்திருக்கிறார்களே? அந்த கடனை எல்லாம் உபயோகமான மக்கள் திட்டங்களுக்கு பயன்படுத்துனாங்களா? அதெல்லாம் ஆய்ந்தால், ஆட்சியாளர்கள் பலரும் உள்ளே தான் இருப்பார்கள்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை எல்லாம் கன்னாபின்னாவென்று விலை ஏற்றினார்கள். இத்தனை கோடி மக்களுக்கு இலவசமா தடுப்பூசி போட்டோமே? என பதில் சொன்னார்கள்.

அப்ப ஏன் இவ்வளவு கடன் ஆச்சு? பதில் சொல்லுங்க கோபால்!

0 பின்னூட்டங்கள்: