நாயகன் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர். தன் பண்ணை வீட்டிற்குள் ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து, தோல் குறித்தான தன் ஆய்வுக்கு பயன்படுத்தி வருகிறார். அந்த வீட்டில் மருத்துவருக்கு நம்பிக்கையான ஒரு வயதான பெண்மணி தான் அந்த பெண்ணுக்கு தேவையானதை எல்லாம் தருகிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தப்பிக்க முயல்கிறாள்.
இப்படி போய்க்கொண்டிருக்கும் பொழுது, அந்த அம்மாவின் மகன் ஒரு திருட்டை செய்துவிட்டு, ஒளிந்துகொள்ள அந்த பண்ணை வீட்டிற்கு வருகிறான். அந்த அம்மா அனுமதிக்க மறுத்தாலும், நைசாக பேசி உள்ளே வந்துவிடுகிறான். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணைப் பார்த்ததும் பலாத்காரம் செய்கிறான். அங்கு வரும் மருத்துவர் அவனை சுட்டுக்கொல்கிறார்.
அந்த மருத்துவரின் குடும்பத்திற்கு என்ன ஆச்சு? அந்த பெண்ணுக்கு பின்னால் உள்ள கதை என்ன? அந்த பெண் எப்படி வந்து சேர்ந்தாள்? இறுதியில் என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
****
குறைந்த கதாப்பாத்திரங்கள் தான். அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை கதை முன்னும் பின்னுமாய் கொஞ்சம் குழப்பமாகவும், அதிர்ச்சியாகவும் சொல்லி செல்கிறது. இப்படி மனிதர்களுக்குள் நிறைய புதிர்களை சுவாரசியமாகவும், அதிர்ச்சிகரமாகவும் சொல்வதில் இந்த இயக்குநர் சிறப்புமிக்கவர் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பெட்ரோ அல்மதோவர் ”சண்டைக் காட்சிகளும், அலறல் சத்தமும் இல்லாத ஹாரர் திரைப்படம் இது” என்று சொன்னாராம்.
மாட்டிக்கொண்ட அந்த ‘பெண்” செய்த தவறு என்ன? அதற்கு கிடைக்கும் தண்டனை மிகவும் பெரியது. இன்னும் சொல்லலாம். ஆனால், ஸ்பாய்லராகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறது.
எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. வித்தியாசமான திரில்லர் விரும்பிகள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment