> குருத்து: Hawkeye (2021) ஒரு தொடரில் ஆறு அத்தியாயங்கள்.

February 25, 2022

Hawkeye (2021) ஒரு தொடரில் ஆறு அத்தியாயங்கள்.


அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முடிந்த ஒரு வருடத்தில் கதை துவங்குகிறது. ஏலியன்களுடன் அவெஞ்சர்ஸ் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த பொழுது, அவெஞ்சர்களில் வில்வித்தை வீரரான‌ ஹாக்ஐப் பார்த்து, சிறுமியான கேட் பிசப் தன் ரோல் மாடலாக நினைத்து வளர்கிறாள். அதற்காக வில்வித்தைகளை உற்சாகத்துடன் கற்கிறாள்.


கேட் இப்பொழுது வளர்ந்துவிடுகிறாள். வில்வித்தையில் நல்ல தேர்ச்சியுடன் இருக்கிறாள். கேட்டின் அப்பா இறந்து, சில வருடங்கள் கழித்து, கேட்டின் அம்மா இப்பொழுது மீண்டும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். இந்த சமயத்தில் ஒரு ஹோட்டலில் ரகசிய ஏலம் நடக்கிறது. அதில் "ரோனின்" ஆடை ஏலத்திற்கு வருகிறது. அங்கு நடக்கும் களேபேரத்தில் ரேனின் ஆடைகள் கேட்டிற்கு கிடைக்கிறது.

அவெஞ்சர்ஸ் முதல்பாகத்திற்கு பிறகு தானோஸ் செய்த கலவரத்தால், பிரபஞ்சத்தில் பாதிப்பேர் காணாமல் போய்விடுகிறார்கள் அல்லவா! அதில் ஹாக்ஐயின் மூன்று பிள்ளைகளுமே காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஹாக்ஐ ஏக‌ வெறியாகி ஏகப்பட்ட கெட்டவர்களை தேடித்தேடி கொன்று குவிக்கிறார்.

இதனால் ரோனின் சிக்கினால் போட்டுத்தள்ள ஏகப்பட்ட பேர்கள் கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முன்கதை எல்லாம் அறியாமல் கேட் விளையாட்டுத்தனமாய் ரோனின் ஆடைகளை அணிய, அவளை கொல்ல துரத்துகிறார்கள். இதில் ஹாக்ஐ தான் ரோனின் என்பதை அவளிடம் சொல்லாமல், அந்த பிரச்சனைகளிலிருந்து வெளிவர தலையிடுகிறார்.

’ஐந்து வருடங்கள்’ காணாமல் போய் உயிரோடு வரும் நடாஷாவின் தங்கை ஹாக்ஐ தான் நடாஷாவின் இறப்புக்கு காரணம் என தவறாக‌ புரிந்துகொண்டு ஹாக்ஐ கொல்ல வருகிறாள். என்ன ஆனது என்பதை சில சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

அவெஞ்சர்களில் ஒருவரான ஹாக்ஐ கொஞ்சம் ஆரவாரம் இல்லாமல், அலட்டிக்காமல் வருகிற ஆள். ஹாக்ஐ ரோல் மாடலாக நினைக்கும் கேட்டிற்கு அதில் வருத்தம். அவர் இன்னும் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டும் என வாதிக்கிறாள். அதெல்லாம் தேவையேயில்லை என உறுதியாய் மறுக்கிறார்.

ஹாக்ஐ போலவே தானும் உருவாகவேண்டும் என்பது அவளது இலக்கு. அவெஞ்சராய் வாழ்வதில் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. ஏகப்பட்ட இழப்புகள் இருக்கின்றன. அது ஒன்றும் எளிதில்லை என சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

ரோனினை கொல்ல வரும் எதிரிகளை இருவரும் இணைந்து எதிர்கொள்வது தான் ஆறு எபிசோட்களும்! ஆறு அத்தியாயங்களையும் போராடிக்காமல் எடுத்திருக்கிறார்கள். நடித்திருப்பவர்களும் சிறப்பு.

சூப்பர் ஹீரோ கதை பிடிக்கும் என்பவர்களும், சண்டை பிரியர்களும் பார்க்கலாம். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: