> குருத்து: பட்ஜெட் 2022: அரசின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு இடமில்லையா?

February 3, 2022

பட்ஜெட் 2022: அரசின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு இடமில்லையா?


 - கெள்சல்யா, விகடன் 2022

"பட்ஜெட் பற்றிய அவருடைய உரையில் `பெண்கள்' என்ற வார்த்தை ஆறு முறைதான் உச்சரிக்கப்பட்டுள்ளது"
*****

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பட்ஜெட் சுருங்கியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-2023 வருடத்திற்கான பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பட்ஜெட் சுருங்கியுள்ளது. சென்ற ஆண்டு 4.4% ஆக இருந்த அதன் பங்கு, இந்த வருடம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் (AIDWA) ஆய்வறிக்கை, 2021-22ம் ஆண்டிற்கான GDP-ல் (Gross domestic product) பாலின பட்ஜெட் 0.71% ஆக இருந்தது என்றும், அது இந்த வருடம் 0.66% ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் பெண்களுக்கு என புதிதாக நலத் திட்டங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. பட்ஜெட் பற்றிய அவருடைய உரையில் `பெண்கள்' என்ற வார்த்தை ஆறு முறைதான் உச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய பட்ஜெட்டில், ஏறக்குறைய இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்றும், புதியதாக உருவாக்கப்படும் அங்கன்வாடிகள் சிறந்த உள்கட்டமைப்பு, ஆடியோ காட்சியமைப்புகள், மற்றும் தூய்மையான சுற்றுப்புறத்துடன் குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சூழலை வழங்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

இந்த அங்கன்வாடிப் பணிகளை, சச்சாம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் (Poshan 2.0 scheme) கீழ்தான் செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு 0.7% என்ற மிகக் குறைந்த அளவு உயர்வே கிடைத்துள்ளது. குழந்தைகளின் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கேட்டு வரும் குறைந்தபட்ச நிர்ணய ஊதியம் போன்றவற்றுக்கோ ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பெண்களின் பாதுகாப்பிற்காக நடைமுறையில் இருக்கும் `பேடி பச்சவோ பேட்டி படாவோ', ஒன் ஸ்டாப் சென்டர்கள், நாரி அதாலத், மகிளா போலீஸ் தன்னார்வலர் மற்றும் மகளிர் ஹெல்ப்லைன் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ₹587 கோடியில் இருந்து ₹562 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரம், குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை உள்ளடக்கிய மிஷன் வத்சலயா திட்டத்திற்கு 63.5% நிதி ஒதுக்கீடு உயர்ந்து ₹900 கோடியாக உள்ளது.

``மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் SC, ST, சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கான நலனுக்கான திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் பயனாளிகள் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த செலவு 2021-22 பட்ஜெட் ஒதுக்கீட்டில் 3.2% என்று இருந்து, இப்போது 2022-2023 பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2.5% ஆகக் குறைந்துள்ளது. அரசின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது” என தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்.

0 பின்னூட்டங்கள்: