திருடன் போலீசு விளையாட்டு தான் கதை. அதை எடுத்த விதத்தில் அசத்தி இருக்கிறார்கள். பக்காவாக திட்டமிட்டு, திறமையாக திருடுகிற ஒரு குழு. ஒரு போலீசு வண்டியை மடக்கி சில பத்திரங்களை (Bearer Bonds) கொள்ளையடிக்கிறார்கள். குழுவில் புதிதாக சேர்ந்த ஒருவன் செய்த கோளாறால், மூன்று போலீசுகாரர்கள் கொல்லப்படுகிறார்கள். குழுத் தலைவன் அவன் செய்த பெரிய தவறுக்காக கொல்லப் பார்க்கிறான். அவன் நைசாக நழுவிவிடுகிறான்.
போலீசு தரப்பில் ஒரு திறமையான குழு மெல்ல மெல்ல அந்த குழுவை நெருங்குகிறார்கள். இரு தரப்பும் திறமையாக செயல்படுகிறார்கள். ஒரு வங்கி கொள்ளையை நடத்திவிட்டு, செட்டிலாகிவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****
போலீசு குழுவில் ஒரு அதிகாரி. திருடன்களுக்கு பின்னாடியே சின்சியாராக ஓடிக்கொண்டிருப்பதால், குடும்பத்திற்குள் பொருந்த முடியாமல், இரண்டு முறை விவாகரத்தாகி, மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அவரோடும் உறவு சிக்கலாகி கொண்டு இருக்கிறது.
திருடன் குழுவில் தலைமை ஏற்றிருக்கும் வில்லன் (?) ”ஒரு நெருக்கடியில் உடனே வெளியேறவேண்டும் என்றால், 30 நொடிகளில் பிரியமுடியாத எந்த உறவையும் வாழ்வில் இணைத்துக்கொள்ளாதே” என சொந்த தம்பிக்கு புத்திமதி சொல்கிற ஆள். பிறகு இறுதிக்காட்சிகளில் அவருக்கே அந்த நிலைமை வருகிறது.
படம் பார்க்கும் பொழுது, இவ்வளவு திறன் கொண்ட குழு, ஏன் வெளிப்படையான வங்கி கொள்ளைக்கு திட்டமிடுகிறார்கள் என்கிற கேள்வி வந்தது. இப்படி, திருடன் போலீசு விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், இரு தரப்பிலும் உள்ள ஆட்களிடம் உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுபூர்வமான காட்சிகளும் படம் நெடுகிலும் உண்டு. படம் பார்க்கும் பொழுது, பல காட்சிகள் ”காக்க காக்க” (2003) நினைவுக்கு வந்தது.
பெரும்பாலான படங்களில் நாயகனுக்கு சமமான வில்லன் எப்பொழுதுமே பஞ்சம் தான். சட்டென்று நினைவுக்கு வருவது வெற்றிவிழாவில் கமல் – ஜிந்தா இணையான ஜோடி. சமீபத்தில் தனியொருவன், இரும்புதிரை படங்கள். இந்தப் படத்தில் அப்படி ஒரு வலுவான ஜோடியாக அல்பாசினோவும், ராபார்ட் டி நீரோவும்! படத்தில் நடித்த பலரும்
அருமையாக
பொருந்தியிருக்கிறார்கள்.பார்க்கவேண்டிய படம். நெட்பிளிக்சில், அமேசான் பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. யூடியூப்பிலும் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment