> குருத்து: Bro Daddy (2022) மலையாளம்

February 5, 2022

Bro Daddy (2022) மலையாளம்


நாயகனும் நாயகியும் பெங்களூருவில் வேலை செய்கிறார்கள். இருவரும் நான்கு ஆண்டுகளாய் இணைந்து வாழ்கிறார்கள். இதன் விளைவால், நாயகி கர்ப்பமாகிறாள். அவன் கலைத்துவிடலாம் என்கிறான். அவள் மறுக்கிறாள்.


நாயகனின் அப்பா அவசரமாய் ஊருக்கு அழைக்கிறார். என்னவென்று போய் கேட்டால், நாயகனின் அம்மாவும் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை சொல்கிறார்கள். மெல்ல தன் விவகாரத்தையும் சொல்கிறான்.

நாயகனின் அப்பாவும், நாயகியின் அப்பாவும் நீண்ட கால நண்பர்கள். இந்த விசயத்தை நாயகியின் வீட்டில் சொல்லாமலே, கல்யாணத்திற்கு நகர்த்துகிறார்கள். இடையில் நடக்கும் சில குழப்பங்கள், அதனால் வரும் கலாட்டக்களுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

சமூகத்தில் பல தட்டுக்களில் மக்கள் இருப்பதால், சமூக, பொருளாதார, பண்பாட்டு அளவில் ஒவ்வொரு வர்க்கமும் ஒரு பிரச்சனையை அதற்குரிய தன்மைகளுடன் எதிர்கொள்கிறார்கள்.

அது ஒரு நடுத்தர குடும்பம். ஒரு வயதான அம்மா கர்ப்பமாகிவிடுவார். சுற்றி இருப்பவர்களின் பேச்சால், அவர் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகுவார். அவருடைய மகன் அதை எப்படி பக்குவமாக கையாள்கிறார் என்பதை ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன்.

இந்தியில் இதே போல நாயகனின் அம்மா கர்ப்பமாகுவார். அதனால் எழும் பிரச்சனைகளை ”பதாய் ஹோ” படத்தில் எதார்த்தமாக கையாண்டிருப்பார்கள். நாயகியின் அம்மா "அந்த பிள்ளையையும் நீ தான் வளர்க்கவேண்டியிருக்கும். ஆகையால் நாயகனை திருமணம் செய்யவேண்டாம்" என எதிர்ப்பு தெரிவிப்பார். இது ஒரு மிடில் கிளாஸ் படம் என்பதால், இப்படி நகரும்.

இந்தப் படம் இரு பணக்கார குடும்பங்களின் கதை என்பதால், பீல் குட் மூவி என்ற முடிவோடு எடுத்திருக்கிறார்கள். அதனால் சீரியசாக எதையும் பேசவில்லை. நாயகியின் அப்பா மருமகன் தன் நிறுவனத்தை பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற நிபந்தனையோடு முடித்துக்கொள்வார்.

ஒவ்வொரு தரப்பு மக்களும், ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. இதே தான் “இணைந்து வாழ்தல்” விசயமும்!

மற்றபடி, ”லூசிபர்” என்ற பெரிய வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தையும் இயக்கி, நடித்திருக்கிறார், மோகன்லால், மீனா, கல்யாணி, கனிகா எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: