> குருத்து: Hridayam (2022) மலையாளம்

February 15, 2022

Hridayam (2022) மலையாளம்



காலம் 2006. நாயகன் இன்ஜினியரிங் படிக்க சென்னைக்கு வருகிறார். புதிய சூழல், புதிய நண்பர்கள், சீனியர்களின் ராகிங், பார்த்ததும் காதல், கலாட்டக்கள் என நகர்கிறது. நாயகன் செய்த ஒரு தவறால், காதல் முறிகிறது. நண்பர்களுடன் குடி, ஏகப்பட்ட அரியர்ஸ், பிறகு கொஞ்சம் சுதாரித்து, படிக்கிற பசங்களுடன் இணைந்து, எல்லா தாள்களிலும் தேர்கிறார்.


ஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடித்து, பல்வேறு திசைகளில் பிரிகிறார்கள். எதைச்சையாக பார்த்த ஒரு புகைப்படக்காரருடன் இணைந்து தொழில் செய்கிறார். ஒரு புதுகாதலுடன் வாழ்க்கையை துவக்குகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
****

”என்னை ஒரு ஆளுமையாக உருவாக்கியதற்கு நன்றி” என கல்லூரியின் சுவற்றில் எழுதுவது படத்தின் ஒன் லைன். உள்ளம் கேட்குமே, பிரேமம் வரிசையில் இன்னுமொரு படம் எனலாம். அந்த படங்களில் உள்ள இளமை துள்ளல், கல்லூரி வாழ்க்கை, நல்ல பாடல்கள், பளிச் ஒளிப்பதிவு இந்தப் படத்திலும்!

படம் பீல் குட் மூவி என முடிவெடுத்துவிட்டதால், அதன் திசைவழியிலேயே ‘நல்ல’ அம்சங்களுடனேயே நகர்கிறது. இடையில் நாயகன் ஏன் திருந்தினான்? சொல்லவில்லை. நாயகன், நாயகிக்குமான உறவு பூமிக்கும், சூரியனுக்கும் உறவு போல தான்! ஈர்ப்பும் இருக்கிறது, விலகலும் இருக்கிறது. இறுதிவரை நண்பர்களாக இருப்பது பெரிய ஆறுதல்.

”இங்கிலீஷை கண்டால் மலையாளிக்கு கொஞ்சம் பயம்.” “எல்லாத்தையும் கணக்குப் போட்டு காதலிக்கிறதுக்கு நான் என்ன மலையாளியா? தமிழன்டா!” என சுய எள்ளல் ரசிக்க வைத்தது. படம் சென்னையில் தான் பாதிக்கும் மேலாக நகர்கிறது. சென்னையை, சென்னை மனிதர்களை பாசிட்டிவாகவும் காண்பித்திருக்கிறார்கள். தான் மட்டும் வளராமல் தன்னைப் போல அனைவரையும் தன்னோடு அழைத்து செல்லும் செல்வா கதாப்பாத்திரம் சிறப்பு.

மோகன்லாலின் பையன் பிரணவ் தான் நாயகன். தர்சனா, கல்யாணி இருவரும் நாயகிகள் என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ”தட்டத்தின் மறயத்து” இயக்கிய வினீத் சீனிவாசன் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

திரையரங்குகளில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: