> குருத்து: பட்ஜெட் – சில குறிப்புகள்

February 2, 2022

பட்ஜெட் – சில குறிப்புகள்


பொதுவாக இந்திய பட்ஜெட்டோ, தமிழக பட்ஜெட்டோ வாசிக்கும் பொழுதும் பெரும்பாலான மக்கள் அசுவராசியமாக இருக்கிறார்கள். ஊடகங்கள் தரும் சில செய்திகளை மட்டும் மேலோட்டமாக கேட்டுக்கொண்டு, அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுகிறார்கள். மத்தியதர வர்க்கமும், அதற்கு மேற்பட்ட வர்க்கங்களும் பட்ஜெட் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதால் ஆர்வமாய் கவனிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். அதில் வினையாற்ற முயல்கிறார்கள்.
 
ஒரு குடும்பத்தின் வரவு, செலவை வைத்து அந்த குடும்பம் ஆரோக்கியமாய் இருக்கிறதா?. நெருக்கடியில் இருக்கிறதா, நோய்வாய்ப்பட்டு இருக்கிறதா? என தெரிந்துகொள்ளலாம். குடும்பத்தின் பட்ஜெட்டை கவனித்து வருபவர் பட்ஜெட் நெருக்கடியில் இருந்தால், மிகுந்த மன உளைச்சலில் இருப்பார். நோய்வாய்ப்பட்டு இருந்தால், அவர் இன்னும் நோய்வாய்ப்பட்டுவிடுவார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு இந்த நெருக்கடியை ஒன்று சொல்லமட்டார் அல்லது சொல்லவேண்டும் என்ற உணர்வின்றி இருப்பார். அதனால் ஒவ்வொரு உறுப்பினரும் செல்லம் கொஞ்சி செலவை அதிகப்படுத்தி குடும்ப பட்ஜெட்டை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவார்கள்.
 
ஒரு குடும்பத்திற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்றால், ஒரு நாட்டிற்கு ஒப்பிட்டு பாருங்கள். இதன் தீவிரம் புரியும். வேறு எந்த சமூக காரணிகளையும் விட, பட்ஜெட்டை கொஞ்சம் உரசிப் பார்த்தால், ஆள்கிறவர்களின் லட்சணத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
 
இந்த பட்ஜெட் யாருக்கு ஆதரவாக போடப்படுகிறது? யாரை அதிகம் பாதிக்கப்போகிறது? என தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை அல்லவா? பெரும்பான்மை மக்களின் அறியாமையில் தான் சிறுபான்மை கும்பல் இதில் குளிர்காய்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது?
 
ஆளும் வர்க்கம் தனக்கான ஆட்களை ஆட்சியில் வைத்துக்கொள்ளும். நம் நாட்டில் இதற்கு எல்லாம் பெரிதாக யோசித்து குழம்ப தேவையில்லை. நமது ஒன்றிய பிரதமர் கடந்த ஏழு ஆண்டுகளில் தூக்கிவிட்ட தரகு முதலாளிகளின், கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பை கவனித்தாலே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
 
ஆகையால், நமக்கு தெரிந்தவரையில் பட்ஜெட்டை அறிந்துகொள்ள முயல்வோம். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: