> குருத்து: August Rush (2007) இசையால் ஒரு படம்

August 12, 2022

August Rush (2007) இசையால் ஒரு படம்


அவன் ஒரு பாப் பாடகன். அவள் இசைக்கருவி (cellist) வாசிக்கும் கலைஞர். ஒரு விருந்தில் தற்செயலாக சந்திக்கும் இருவரும் இசை ரசனையால் பேசத்துவங்குகிறார்கள். இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.


இருவரும் காலையில் பிரிந்து செல்பவர்கள், வாழ்க்கை வேறு வேறு திசைகளில் பிரிந்து செல்கிறார்கள். அவள் கர்ப்பமாகிறாள். கலைக்க சொல்லி அப்பா கட்டாயப்படுத்துகிறார். அவள் உறுதியாய் மறுத்துவிடுகிறார். குழந்தை இறந்தே பிறந்தது என அப்பா மறைத்துவிடுகிறார்.

அவன் ஒரு அனாதை ஆசிரமத்தில் வாழ்கிறான். எங்கும் இசை. எதிலும் இசை என உணர்ந்து வளர்கிறான். 11 வயதில் அங்கிருந்து நகர்கிறான். பெரு நகரத்தில் பசங்களுக்கு இசைக்க பயிற்சி அளித்து மக்கள் கூடும் இடங்களில் வாசிக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் ஒருவனிடம் வந்து சேர்கிறான். அவனின் இசை மேதைமை கண்டு வியக்கிறான். அவனை விற்று பெரும் பணம் திரட்ட திட்டமிடுகிறான்.

அங்கிருந்து தப்பித்து, ஒரு சர்ச்சுக்கு வந்து சேர்கிறான். அங்கிருக்கும் இசைக்குழுவிற்கு அறிமுகமாகிறான். அங்கும் அவனின் இசை அறிவு கண்டு வியந்து, புதியவர்களுக்கான மேடையில் அவனை ஏற்ற பயிற்சி அளிக்கிறார்கள்.

பிறகு அந்த பையன் என்ன ஆனான் என்பதை இசையால் சொல்லியிருக்கிறார்கள்.
***

”இசையை கேட்க முடியுமா? எல்லா இடங்களிலும் கேட்க முடியும். காற்றில்... வெளிச்சத்தில். அது நம்மைச் சுற்றி இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களைத் திறக்க வேண்டும். கேளுங்கள்.” என்ற வசனங்களுடன் தான் படமே திறக்கிறது.

இசைக்கலைஞர் இருவருக்கு பிறந்த குழந்தை எத்தனை மேதைமையுடன் இருக்கிறான் என்பதை இசையாலும், உணர்வுபூர்வமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

கதை இயல்பாக தெரிந்தாலும், ஒரு பேண்டசி வகை பீல் குட் மூவி தான். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். பெருநகரத்தில் வாழும் நமக்கு எல்லாம் சத்தமாக தெரிகிறது. அவனுக்கு எல்லாம் இனிய இசையாக தெரிகிறது. படத்தில் இசையை அவன் உணரும் விசயத்தை, நம்மையும் உணர வைத்திருப்பது அழகு.

படத்தில் நடித்திருக்கிற அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த பையன், பையனின் அம்மா, அப்பா மூவரும். நான் இங்கிலீசில் பார்த்தேன். ஆப்பிள் தொலைக்காட்சியில் இருப்பதாக இணையம் சொல்கிறது. நல்ல படம். பாருங்கள்.

”The music is all around US, all you have to do is listen.”

0 பின்னூட்டங்கள்: