அன்றைக்கு வேலை முடிந்து வீட்டுக்கு போனதும், தன்னுடைய பாடப்புத்தகத்தில் ‘யானை டாக்டர்” கதை இருப்பதை என் மகள் இலக்கியா சொன்னாள்.
அவள் எப்பொழுதும் கட கடவென பேசுவதில்லை. “இந்தக் கதையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? யார் எழுதியது?” என மெதுவாய் துவங்குவாள்..
அந்த சிறுகதை பாடப்புத்தகத்தில் நான்கு பக்கங்களை தாண்டவில்லை. அதுவும் கொட்டெழுத்துக்களில் இருந்தது.
”ஜெயமோகன் இயல்பில் நிறைய எழுதுகிறவர். இவ்வளவு சின்னதாய் எழுத வாய்ப்பே இல்லை இலக்கியா” என்றேன்.
உடனே புத்தகத்தை எடுத்து பார்த்தால், இறுதி வார்த்தையாக சுருக்கப்பட்ட வடிவம் என எழுதப்பட்டிருந்தது. ஜெயமோகன் நம்ம நம்பிக்கையை பொய்த்துபோய்விட செய்யவில்லை.
வீட்டு நூலத்தில் இருந்த ஜெயமோகனின் ஒரு சிலப்புத்தகங்களில் இதுவும் இருந்தது. அன்றிரவு படிக்க துவங்கிவிட்டேன். இலக்கியாவிற்கு படிக்க சொன்னால், தேர்வு என தப்பிப்பாள்.
இணையத்தில் தேடினேன். நிறைய பேர் அந்த கதையை வாசித்து யூடியூப்பில் வைத்திருந்தார்கள். அதில் பவா செல்லத்துரை 45 நிமிடம் இந்தக் கதையை ஒரு அரங்கில் பேசியிருந்தார். இருவரும் கேட்டோம்.
டாக்டர் K என செல்லமாய் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி. கதையை படிக்க படிக்க ’யானை டாக்டர்’ மனதில் ஆழமாய் பதிந்துவிட்டார். காட்டின் மீதான பிரியமும் கூடிவிட்டது. படிக்க படிக்க…. இப்பொழுது அவர் இல்லை. அவர் இடத்தை யாரால் நிரப்பமுடியும்? வாய்ப்பே இல்லையே என கவலை மிகுந்துவிட்டது.
விலங்குகளுக்கான மருத்துவராய், வீட்டு விலங்குகள் அல்ல! காட்டு விலங்குகளுக்கான மருத்துவராய் வாழ்ந்திருக்கிறார். அவருடைய வாழ்வில் தொடர்ந்து செயல்பட்டதில் யானைகளுக்கான பிரத்யேக மருத்துவராய் மாறிவிட்டிருக்கிறார்.
அவருடைய மருத்துவ அனுபவமும், காட்டின் அனுபவமும் நீண்ட நெடியது. நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பரிந்துரைகளில் ஒன்று தான் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை வருடத்திற்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு என்கிறார்கள். அவரைப் பற்றி இன்னும் நிறைய தேடி தெரிந்துகொள்ளவேண்டும்.
அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவர். படியுங்கள். பவா செல்லத்துரை உரையை கீழே சுட்டியில் தருகிறேன். நிச்சயம் கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=ZR_Xmckmet8
0 பின்னூட்டங்கள்:
Post a Comment