கொரானா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவிகளில் தடை என்பதால், குளிக்க முடியவில்லை. இந்த முறை ஜூனில் அருவிகளில் தண்ணீர் குறைவாக இருந்தது. ஆடி பிறந்ததும் அருமையாக தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
மதுரையில் இருந்து அண்ணன் குடும்பமும், சென்னையிலிருந்து எங்க குடும்பமும் குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தோம்.
வழக்கமாக மூன்று நாட்களில் ஒரு நாள் திருநெல்வேலி அகஸ்தியர் அருவியிலும், தாமிரபணியிலும் குளித்துவிட்டு வருவோம். இந்தமுறை அருவிக்கு அருகே கட்டுமான வேலைகள் வேலை நடைபெறுவதால், ஒரு குறிப்பிட்ட தேதி வரை அனுமதியில்லை என அரசு அறிவித்துவிட்டது.
ஆகையால், இந்த முறை குற்றாலத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் இருக்கும் பாலருவி போகலாம் என முடிவெடுத்தோம். பாலருவி கேரளாவிற்குள் இருக்கிறது. கடந்த வருடங்களிலேயே போகலாம் என யோசித்தோம். மதுரையில் இருந்து வரும் வேனுக்கு கேரளா பர்மிட் இல்லை என சொன்னதால் போகாமல் இருந்தோம். இப்பொழுது பர்மிட் வாங்கிய படியால், அந்த சிக்கல் இல்லை.
செங்கோட்டையை தாண்டி கொஞ்சம் மலைப்பாதை ஏற துவங்கியதுமே சிலு சிலுவென காத்தும், குளுமையும்
அருமையாக
இருந்தது. பாலருவியின் முகப்பிற்கு போய்விட்டோம்.அங்கிருந்து கேரளா அரசு உள்ளே அருவியை அடைய பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறது. 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் பயணம். தலைக்கு ரூ. 60 என வசூலிக்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்காமல் நிறைய பேருந்துகள் வந்தும் போயும் கொண்டே இருக்கின்றன.
உள்ளே போய் இறக்கிவிட்ட பிறகு சில நிமிடங்கள் நாம் நடக்கவேண்டும். தூரத்தில் இருந்தே அருவி ஆர்ப்பரித்து விழும் சத்தம் கேட்கிறோம். நல்ல உயரத்தில் இருந்து விழுகிறது. அங்கு நம்மால் நேரடியாக குளிக்க வாய்ப்பில்லை. விழும் தண்ணீர் இரண்டு வழிகளில் பிரிந்து வருகிறது. அதில் ஆண்கள், பெண்கள் என பிரித்துவிடுகிறார்கள்.
நாங்கள் மதியத்திற்கு மேல் போயிருந்ததால் நிறைய கூட்டம் இல்லை. அவசரம் இல்லாமல் குளிக்கு முடிந்தது. மீண்டும் வண்டி ஏறி எங்கள் வண்டி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
குற்றாலம் போகிறவர்கள் பாலருவியையும் பார்த்து வாருங்கள். நல்ல அனுபவம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment