> குருத்து: "உலகில் இருப்பது ஒரே கதைதான். மிகவும் பழைய கதை. இருளுக்கும் ஒளிக்குமான மோதல்"

August 8, 2022

"உலகில் இருப்பது ஒரே கதைதான். மிகவும் பழைய கதை. இருளுக்கும் ஒளிக்குமான மோதல்"


ட்ரூ டிடக்டிவ்ஸ் தொடரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். ரஸ்டின் கோலை எனக்குமே மிகவும் பிடிக்கும். அவனுடைய நிதானத்தில் அமைதிக்குப் பதிலாக அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்திருக்கிறேன். எதையும் எதிர்மறையாகவே சிந்திப்பவன். மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவன் என்பதால் யாருடனும் பெரிய ஒட்டுதல் இல்லாதவன். ஆனால், தீர்க்கமானவன். தீவிரமான மன இயல்புகளை உடையவன். பகுத்தறிவுவாதி. அப்பேர்பட்டவன் அத்தொடரின் உச்சகாட்சியில் சொல்கிற வசனத்தை நினைக்கிற போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கும்.


ரஸ்டினும் அவனுடைய உற்ற நண்பனான மார்டினும் மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார்கள். நிசப்தமான இருள் சூழ்ந்திருக்கிறது. ஒரு வழக்கின் முடிவு அவனது மனதைக் கொஞ்சம் அசைத்திருக்கிறது. பல்லாண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதால் ரஸ்டின் சற்று நெகிழ்வான மனநிலையில் இருக்கிறான். அவனது கண்கள் கலங்கியிருக்கின்றன. கொடூரமான குற்றவாளி அவன். எதற்கும் அஞ்சாதவன். ஒரு விஷ முள்ளைப் பிடுங்கியாயிற்று. அவனைப் பிடிக்க முயன்றபோதுதான் ரஸ்டின் சுடப்பட்டு தன்னுணர்வை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

மயக்கமடைவதற்கு மைக்ரோ நொடி முன்பு தன் விழிப்புநிலை தவறி அடர்த்தியான இருட்டை ரஸ்டின் உணர்கிறான். தான் இறுகப் பற்றியிருந்த எண்ணங்களைக் கைவிட்டு, அந்த விடுதலையினுள் அமிழ்ந்துபோகத் தன் உயிரை அனுமதிக்கிறான். அந்தக் காலமின்மையில் அப்போது அவனுக்குள் ஒரு விடுவிப்பு நிகழ்கிறது. இருளில் தன் இறந்துபோன மகளை, தன் தந்தையை எனத் தனது அன்புக்குரியோரின் அருவ இருப்பை அவனால் அறிய முடிகிறது. அங்கே, அந்த இருட்டில், அந்தக் காலமின்மையில், எல்லாம் ஒன்றே, புனிதம் பாவம் போன்ற இருமைகள் ஏதுமில்லை எனத் தெளிகிறான். அவன் விழித்த பிறகு உலகம் மறுபடியும் இரண்டாகிவிடுகிறது.

மார்டினிடம் ரஸ்டின் சொல்வான். "உலகில் இருப்பது ஒரே கதைதான். மிகவும் பழைய கதை. இருளுக்கும் ஒளிக்குமான மோதல்."

வானத்தை அண்ணாந்து நோக்கும் மார்ட்டின், "இருக்கலாம். ஆனால், இருள்தான் எப்போதும் கூடுதலாக ஆக்கிரமித்திருக்கும்" என்பான்.

அதற்கு ரஸ்டின், "உண்மைதான். ஆனால், நீ இந்த விஷயத்தைத் தவறான கோணத்தில் அணுகுகிறாய். ஒரு காலத்தில் இருள் மட்டுமே இருந்தது. அதோடு ஒப்பிட்டால் இப்போது ஒளி வென்றுகொண்டிருக்கிறது” என நட்சத்திரங்களைச் சுட்டிக்காட்டுவான்.

Yes, let the light win.

- Gokul Prasad

0 பின்னூட்டங்கள்: