> குருத்து: Commitment

August 8, 2022

Commitment


கதை எழுதுவதைப் போலவே கட்டுரை எழுதுவதும் கடும் உழைப்பைக் கோரும் பணி. அதிலும் வாரந்தோறும் பத்தி எழுதுதல் தீவிரமான ஒழுங்கையும் நிர்ப்பந்திப்பது. 'அருஞ்சொல்' இதழில் திங்கள்தோறும் வெளியாகும் கட்டுரையை வெள்ளிக்கிழமை காலை 9-11 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்பிடுவார் அரசியலர் ப.சிதம்பரம். கூடவே செல்பேசிக்கு, கட்டுரை அனுப்ப்பப்பட்டதான குறுஞ்செய்தியும் வரும். ஒரு வாரம்கூட இந்த ஒழுங்கு மாறியது இல்லை. இடையில் அமலாக்கத் துறையினர் அவர் வீட்டில் சோதனையிட்ட நாட்களிலும்கூட.


நீதிநாயகம் கே.சந்துருவிடம் ஒரு கட்டுரை கேட்டால், அவருக்கு அப்போது வேறு வேலை இல்லை என்றால், அடுத்த 2 மணி நேரங்களில் கட்டுரை வந்துவிடும் அல்லது அவர் சொல்லும் நேரத்தில்.

டாக்டர் கு.கணேசனும் அப்படித்தான். இரவு கேட்டால் அதிகாலையில் கட்டுரை வந்துவிடும். தன்னுடைய ஞாயிறு பத்திக்கான கட்டுரைகளை வியாழன் அன்று அனுப்பிடுவது வழக்கம். சில சமயங்களில் இரண்டு வாரங்களுக்கு சேர்த்தும் அனுப்பிவிடுவார்.

இந்த வாரம் சனி இரவு 10 மணி வரை கட்டுரை வரவில்லை. சந்தேகத்துடன் அழைத்தால், வெளியூரில் சிக்கியிருந்தார்; அப்போதுதான் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். "ஒன்றும் பிரச்சினை இல்லை. கையில் ஏராளமான கட்டுரைகள் நிற்கின்றன. அடுத்த வாரம் தரலாம். இரவு 12 மணிக்கு மேல் ஊர் திரும்பும் அசதியோடு நீங்கள் எழுத உட்கார வேண்டாம்!" என்று சொன்னேன் (இதய சிகிச்சையும் செய்துகொண்டவர் அவர்).

ஞாயிறு காலையில் வழக்கம்போல் கட்டுரை பிரசுரமாகி இருந்தது. அலுவலக மின்னஞ்சலைப் பார்த்தால், 2.30 மணிக்கு எழுதி அனுப்பியிருந்தார்.
கட்டுரை அவ்வளவு புள்ளிவிவரங்களுடன் நேர்த்தியாக இருந்தது. "ஏன் டாக்டர் இப்படி?" என்றால், "வாசகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் இல்லையா? நாம கொடுத்த கமிட்மென்ட்டை நாமளே காப்பத்தலைன்னா எப்படி?" என்கிறார்.

விஷயம் என்னவென்றால், இவர்கள் யாரும் தொழில்முறை எழுத்தாளர்கள் கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம்!
- சமஸ்

0 பின்னூட்டங்கள்: