> குருத்து: இறுதி தேதி முடிந்ததால், தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இனி குறைந்தபட்சம் ரூ. 1000மும், அதிகபட்சம் ரூ. 5000யும் தண்டமாக செலுத்தவேண்டும்.

August 3, 2022

இறுதி தேதி முடிந்ததால், தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இனி குறைந்தபட்சம் ரூ. 1000மும், அதிகபட்சம் ரூ. 5000யும் தண்டமாக செலுத்தவேண்டும்.




இந்தியாவில் 2021 – 2022 ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேல் (10,43,26,489). ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படவேண்டிய கடைசி தேதி 31 ஜூலை 2022 என அரசு அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு காரணங்களால், கடைசி தேதியை தள்ளிவைப்பார்கள். கடந்த ஆண்டு கொரானா என்பதால் 31, டிசம்பர் 2021 என்பதாக இருந்தது.


ஒவ்வொரு ஆண்டும் தொழில் ரீதியாக கணக்கை இந்தியாவில் ஏப்ரல் 1 துவங்கி மார்ச் 31 வரை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்திருப்போம். நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமானால், வருமானத்தில் வரிப் பிடித்தம் செய்கிறார்கள், அதே போல நிறுவனங்களுக்காக வெவ்வேறு வேலைகள் செய்யும் தனிநபர்களுக்கும் டிடிஎஸ் (Tax Deducted at Source) என்ற பெயரில் வரிப்பிடித்தம் செய்கிறார்கள். இந்த வரி என்பது ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்டு, அதை நான்கு காலாண்டுகளில் அரசுக்கு கணக்கை தாக்கல் செய்கிறார்கள்.

இதில் நான்காவது காலாண்டு என்பது ஜனவரி – மார்ச் காலத்திற்கான பிடித்தம் செய்த வரியை 31 ஜூன் மாதம் 2022க்கு தாக்கல் செய்ய அரசு, நிறுவனங்களுக்கு கால அவகாசம் தருகிறது. ஆனால், அதற்கு பிறகு தனிநபர் வருமானம் தாக்கல் செய்பவர்கள் ஒரு மாதத்திற்குள் தங்கள் கணக்கை தாக்கல் செய்யவேண்டும்.

இது வழக்கமான நடைமுறை. ஆனால், கொரானாவிற்கு பிறகு பல்வேறு தொழில் நெருக்கடியில் நிறுவனங்கள் இருப்பதால் தொழிலாளர்களிடமும், தங்களிடம் வெவ்வேறு வேலைகள் செய்த தனிநபர்களிடமும் பிடித்தம் செய்யப்பட்ட வரியை உரிய காலத்தில் அரசுக்கு செலுத்துவதில்லை. அதனால் உரிய காலத்தில் ஜூன் 30க்குள் கணக்கை தாக்கலும் செய்வதில்லை. ஆகையால் பிடித்தம் செய்யப்பட்ட வரி தனிநபர் கணக்கில் வரவும் வந்தும் சேராது. பிடித்த வரிப் பணம் கணக்கில் வராமல், தனிநபர்களால் வரித்தாக்கல் செய்யவும் முடியாது. இந்த நடைமுறை பிரச்சனைகளை எல்லாம் அரசு கண்டுக்கொள்வதே இல்லை.

ஜூனில் பள்ளித் திறக்கப்பட்டதால், ஒரு பெருந்தொகையை கல்விக்காக செலுத்தி இருக்கிற காலம் இது. இப்பொழுது அடுத்து தனிநபர் வருமான வரியை கட்டி, தாக்கல் செய்யவேண்டிய நெருக்கடி.
இந்தியாவில் தனிநபர் வருமானம் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 10.5 கோடி. ஜூலை 25 தேதி வரை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடி தான். மீதி உள்ள ஆறு நாட்களில் 7 கோடி பேர் தாக்கல் செய்யவேண்டும். கடந்த பத்து நாட்களாக தணிக்கையாளர்களும், மற்ற வரி ஆலோசகர்களும் தூக்கமே இல்லாமல் வேலை செய்தார்கள். இதில் அவ்வப்பொழுது வருமான வரி தளம் வேலை செய்யாமல் நொண்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. வேலை செய்து கொண்டே ஒரு மாதம் தள்ளிவைத்தால் வசதியாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் #Extend_Date_Immediately என கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.

இறுதி தேதியான நேற்றிரவு வரை 5.8 கோடி பேருக்கு வரித்தாக்கல் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான தணிக்கையாளர்களும், வரி ஆலோசகர்களும் வைத்த கோரிக்கையை அரசு மதிக்கவேயில்லை. ஆக இன்னும் 4.7 கோடி பேர் வரித்தாக்கல் செய்யவேண்டும். இவர்களில் 5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் இருந்தால், ரூ. 1000 தாமதக்கட்டணமாக செலுத்தவேண்டும். ஐந்து லட்சத்திற்கு மேலாக வருமானம் இருந்தால், ரூ. 5000 தாமதக் கட்டணமாக செலுத்தவேண்டும். தாமதமாக தாக்கல் செய்வதால் உள்ள மற்ற சிக்கல்களையும் எதிர்கொள்ளவேண்டும். ஆக குறைந்தபட்சம் ஒருவரிடம் ரூ. 1000 என வைத்துக்கொண்டாலும், 4.7 கோடி பேரிடம் தண்ட தொகையாக ரூ. 4700 கோடியை அரசு கல்லாக் கட்டப்போகிறது.

மக்களிடம் இப்படி வரியை கறாராக வசூல் செய்பவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. பெட்ரோல், கேஸ் விலை என எல்லாவற்றையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறார் மோடி. அரிசி, தயிறுக்கு கூட வரி போட்டு மக்களை பிழிகிறார். ஆனால் மோடி தன் நண்பர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறார். சொத்துக்குவிப்பில் மோடியின் நண்பர் அதானி பில்கேட்சை தாண்டிவிட்டார் என்கிறார்கள். நடப்பது கார்ப்பரேட்டுக்களுக்கான அரசு என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: