காலையில் "கன்னியாகுமரி" என தெலுங்கு பாடலை கேட்டேன். நல்ல ஜாலியான பாட்டு. இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அந்த பாட்டின் இடையே வரும் ஒரு இசையை தமிழில் எங்கோ கேட்டிருக்கிறேன் என நினைவு சொல்லியது. அது மாதிரி வந்து, பிறகு வேறு ஒன்றானதாக மாறியது போலவும் இருந்தது.
ஒரு கட்டுரை எழுதுகிறோம். போன வருடம் ஒரு கட்டுரையில் என்ன வார்த்தைகள் எழுதினோம், மூன்று வருடங்களுக்கு முன்பு என்ன எழுதினோம் என்பதும் மறந்துவிடுகிறது. இன்று எழுதும் பொழுது, ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்து எழுதும் பொழுது பழைய வார்த்தைகளோ, ஒரு பத்தியோ கூட வரலாம்.
இளையராஜா 40 வருடங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். இயக்குநர் சுகா இளையராஜாவோடு நெருங்கி பழகுகிறவர். சுகா இளையராஜாவுடன் பேசும் பொழுது, ஒரு ராகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி பாடல் இசைத்து இருக்கிறீர்கள் என சில பாடல்களை சொல்லும் பொழுது, அப்படியா? என கூலாக கேட்டிருக்கிறார்.
மறக்காமல் இருந்தால், அதை தவிர்த்து விட்டு வேறு மாதிரி இசையமைத்துவிடலாம். அல்லது அதற்கென ரிக்கார்ட் செய்து வைத்திருந்தால், சரிப்பார்த்து கொள்ளலாம். மறந்து போனால், பழைய ரிக்கார்டை கேட்காமல் போனால் ஏற்கனவே இசையமைத்து போலவே இசையமைத்து விடக்கூடும் அல்லவா! இப்படி நேராமல் எப்படி சரி செய்து கொள்கிறார்கள்?
போன வருடம் இசையமைத்து, பாடல் ஹிட்டாகி, அடுத்த வருடமே அதே டூயூனை இசையமைக்கிற ஆட்களும் நம்மிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை இந்த கேள்வியில் இருந்து தவிர்த்துவிடலாம்.
***
முகநூலில் இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு, ஒருவர் பதில் கீழ்க்கண்டவாறு பதில் அளித்து இருந்தார். பொருத்தமான பதில் தான்.
இல்லை...அவர் மறந்துவிடுகிறார் (அதுதான் இயல்பு) என்பதை, அவருடன் பழகிய பலரும் கூறியிருக்கினறனர். கங்கை அமரன் அவர்களும் இதைக் குறிப்பிட்டதுண்டு. அமர் அவர்களுடைய இசையமைப்பில் வெளியான பல பாடல்களைத் தன்னுடையதுதானோ என்று கேட்டு, அமர் அவர்கள் அதை மறுத்து அவருக்கு விளக்கம் தந்த சூழல்களும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே போட்ட சில இசைத்துணுக்குகளின் சாயல் பலபாடல்களில் நாமே கேட்டிருப்போம். அது ஆயிரக்கணக்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைப்பில் ஈடுபட்டுள்ளவருக்கு இயல்பானதுதான். ஹாலிவுட் படங்களில் கவனித்துப்பார்த்தால், எல்லாப் படங்களின் பின்னணி இசையும், பல காட்சிகளில், கிட்டத்தட்ட ஒன்றுபோலவே தோன்றும். இத்தனைக்கும் அங்கு ஒரு இசையமைப்பாளர் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களைத்தான் செய்கின்றனர். இசைஞானிக்கு அடுத்து நான் பெரிதும் விரும்பும் பின்னணி இசை ஜேம்ஸ் ஹா(ர்)னர் அவர்களுடயது. தீம் இசையில் மன்னன். கேட்டவுடன் என்ன படம் என்பதைக் கூறிவிடலாம். படங்களின் எண்ணிக்கையோ இசைஞானியுடன் ஒப்பிடுகையில் வெகுசொற்பம். ஆனாலும் இந்த ரிப்பிட்டிஷன் நன்றாகத் தெரியும். இத்தனைக்கும் பெரிய இசைமேதை. அத்துடன் ஒப்பிடுகையில் இசைஞானியின் படங்களின் எண்ணிக்கை மற்றும் இந்த ரிப்பிட்டிஷனின் விகிதம் (ரேஷியோ) மிகமிகக் குறைவு என்றுதான் கொள்ளவேண்டும்.
இசைஞானியே குறிப்பிட்டதுபோல, "ஏழு ஸ்வரங்களுக்குள்ளாகத்தான் நாங்கள் பயணப்படமுடியும். அவற்றை வெவ்வேறு காம்பினேஷன்களில் புதிதாக உருவானதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கி உங்களை ஏமாற்றுகிறோம்" என்பதுதான் யதார்த்தமும்கூட. உதாரணத்துக்கு எம்எஸ்வி மற்றும் தான் இசையமைத்த பழைய பாடல்கள் எப்படி வேறொரு பாடலாக உருக்கொண்டன என்பதை விளக்கியும் இருக்கிறார்.
இந்த "மறந்துவிடுவது" என்கிற அம்சத்தை வலுவாக்கும் விதமாக இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். 80களின் ராஜா திரும்ப வரமாட்டாரா எனும் ஏக்கம் நான் உட்பட அவரது ரசிகர்களில் பலருக்கும் உண்டு. நான் முதலில் நினைத்திருந்தது, ட்ரெண்ட் மாறி இசையமைத்தாலும் 70, 80, மற்றும் 90களின் ராஜா வெர்ஷன் அவருக்குள் அப்படியே இருக்கும் என்றே. ஆனால் அது உண்மையில்லை என்பதை அவருடைய இசையமப்பில் வெளியான "Gundello Gothaari" (Telugu) திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நிறூபித்தன. 80களின் கதையம்சம். ஆனால் இசை அவரது 80களின் சாயலில் அமையவில்லை. அவரே பின்னாளில் ஒரு பேட்டியில் இதைக் குறிப்பிட்டிருந்தார் "அந்த காலகட்ட இசை போனது போனதுதான். திரும்ப வராது. கிடைக்காது".
- Chandrasekar
0 பின்னூட்டங்கள்:
Post a Comment