> குருத்து: அத்தை மகள்கள்

August 8, 2022

அத்தை மகள்கள்


அத்தை மகள்கள்

வெறும் பெண்கள் அல்ல;
காலமாணிகள்.

நாற்பதுகளின் அத்தை மகள்கள்
கை சூப்புவதை மறந்ததும்
தாலி கட்டிக் கொண்டார்கள்.
முதல் விடாய் முடிந்ததுமே
கர்ப்பமானார்கள்.
பாதிப் பேர் ஏதோ ஒரு பிரசவத்தில்
செத்துப் போனார்கள்.
மீதிப் பேர்
வெள்ளைச் சேலை உடுத்தி
நம் கண்பார்வை படாத
மூலைகளில் முடங்கிக் கிடந்தார்கள்.

அறுபதுகளில் ,
அத்தை மகள்களுக்கும்
நமக்கும் இடையே
ஒரு கதவு இருந்தது.
அவர்களின்
கோபம்
சம்மதம்
வெட்கம்
எல்லாமே
அந்தப் பக்கம்தான்.
எழுதப்படாத கவிதைகளுக்கு
நாம் இங்கிருந்து விரிவுரை எழுதினோம்.

எழுபதுகளில்
அந்தக் கதவை யாரோ திறந்து விட்டார்கள்.
அதே அத்தை மகள்கள்
நாம் பார்க்க வெட்கப்பட்டார்கள்
கோபப்பட்டார்கள்
நமக்குத் தெரியாமல் கண்ணீர் விட்டார்கள்.

எண்பதுகளில்,
கிணற்றடியில்
மரத்தடியில்
ஆற்றங்கரையில்
அத்தை மகள்கள்
காதலர்களோடு
கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.

தொண்ணூறுகளில்,
சித்தி வீட்டுக்குப் போவதைப் போலவே
அத்தை வீடுகளுக்கும் போனோம்.
கூட வந்து போகும்
நண்பர்களில் ஒருத்தனையே
ரூட் விட்ட அத்தை மகள்கள்
தைரியமாய்
நம்மிடமே கடிதம் கொடுத்தனுப்பினார்கள்.
சம்பந்தமில்லாத வேறொருவன்
தாலி கட்டி கூட்டிப் போகையில்
'அவனை அழாமப் பாத்துக்க'என்று சொல்லி நம்மை அழ வைத்தார்கள்.

இரண்டாயிரங்களுக்குப் பிறகு
எல்லாம் மாறி விட்டது.
நேற்றிரவின் கனவில் ,
காதலைச் சொன்னமுறைப் பையனை
குழந்தையாக்கித் தொட்டிலில் போட்டு
ஓர் அத்தை மகள்
'இன்செஸ்ட்டெல்லாம் தப்பு ப்ரோ '
என்று மெல்லிய குரலில்
தாலாட்டிக் கொண்டிருக்கிறாள்.

- * மானசீகன் *

0 பின்னூட்டங்கள்: