> குருத்து: 2025

September 26, 2025

Let me in (2010) ஆங்கிலம்


1983. எங்கும் வெள்ளைப் பனி.   குளிர் வாட்டி வதைக்கிற ஊர். பள்ளி செல்லும் ஒரு 12 வயது பையன்.  அம்மாவும் அப்பாவும் பிரிகிற முடிவில் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் வீட்டுச் சூழல் இயல்பானதாக இல்லை.   பள்ளியிலும் இவன் கொஞ்சம் நோஞ்சான் பையனாக இருப்பதால், மூன்று மாணவர்கள் இவனை டார்ச்சர் செய்துகொண்டு இருக்கிறார்கள். மனதளவில் தனிமையில் வாடுகிறான்.


பக்கத்து வீட்டுக்கு ஒரு வயதானவரும் 12 வயது பெண்ணுமாய் புதிதாய் குடியேறுகிறார்கள்.  தனிமையில் இருப்பதால், ஒரு பைனாகுலரை வைத்துக்கொண்டு சுற்றி உள்ளவர்களை நோட்டமிடுவது இவனது வழக்கம்.  அந்த பழக்கத்தில் அந்த பெண்ணையும் நோட்டமிடுகிறான்.


அவள் அத்தனை கடும் பனியிலும் வெறும் காலில் நடக்கிறாள். அவளைச் சுற்றிய நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. இருவரும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள்.


சில நாட்களிலேயே அவள் ஒரு ரத்தம் குடிக்கும் காட்டேரி என தெரிந்துவிடுகிறது. அவளுக்கு பல காலமாகவே 12 வயது தான் ஆகிறது.   அவள் உயிர் வாழ்வதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது.  ஊரில் ஆங்காங்கே சிலர் காணாமல் போகிறார்கள். போலீசு துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.

அவர்களுடைய நட்பு வளர்ந்ததா? போலீசு கைது செய்ததா?  பிறகு என்ன நடந்தது என்பதை  விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 ****


Let the right one என்ற பெயரில் 2004ல் ஒரு நாவல் எழுதி, புகழ் பெறுகிறது.  அதை ஸ்வீடிசு மொழியில் 2008ல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்து படம் வெற்றி பெறுகிறது.  பிறகு 2010ல் ஹாலிவுட்டில் இந்த படத்தை எடுக்கிறார்கள்.  இந்தப் படத்தின் உத்வேகத்தில் தான் நம்மூருக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்து லோகா (2015) என மலையாளத்தில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் திரைமொழி அத்தனை அடர்த்தியாய் இருந்தது.   கேமிரா கோணங்கள், மிகவும் குறைவான வசனங்கள், ஒன்றை காட்சியில் காண்பிக்காமலே அதன் தீவிரத்தை உணர்த்துவது என சிறப்பாய் இருந்தன.  இயக்குநர் யார் என தேடினால்… Matt Reeves. இவர் Planet of apes சம்பந்தமான இரண்டு பாகங்களை எடுத்தவர்.

கதைக்கு தேவை என்றால் கூட அத்தனை குளிர் பனியில் அந்த பெண்ணை எப்படி வெறும் காலில் எடுத்தார்கள் என ஆச்சர்யமாய் இருக்கிறது. தொழில்நுட்பம் உதவியிருக்குமோ! எல்லா மக்களும் அத்தனை கனத்த ஆடைகளுடன் சுத்தும் பொழுது, ஷூ இல்லாமல் எப்படி உலாவுகிறாள். பார்க்கிறவர்களுக்கு பட்டென்று சந்தேகம் வந்துவிடும் அல்லவா!

அந்த பையனும், பெண்ணும் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். காட்டேரியாக இருந்தாலும், அந்த பெண் தன் புன்னகையால் அத்தனை ஈர்க்கிறாள்.  படத்தைப் பார்த்து முடிக்கும் பொழுது, அவளுடன் வரும் பெரியவரின் இன்னொரு பாத்திரம் தான் அந்த பையன் என உணரமுடிந்தது.

காட்டேரிகளின் கதைகள் Originals,  Vanhelsing பல இருந்தாலும், இளம் பருவத்தின் நட்பு என்ற கதைக்களன் புதிதாக இருந்தது.

வாம்பயர் கதை பிடிக்கும் என்பவர்கள் பாருங்கள். இப்பொழுது எந்த ஓடிடியிலும் இல்லை. தமிழில் இல்லை.  வேறு வழிகளில் முயலுங்கள்.

September 25, 2025

Su from So (2025) கன்னடம்


ஒரு சிறிய கிராமம். நிறைய மூடநம்பிக்கைகளுடன் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். 

 

ஒரு துக்க காரியத்தில் சொந்தங்கள் கூடும் பொழுது, ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் கண்ணாலேயே பேசிக்கொள்கிறார்கள். இரவு வீடு திரும்பும் பொழுது, அந்த பெண்ணின் வீட்டு ஜன்னலில் எட்டிப் பார்க்க, அங்கு ஒரு பாட்டி அலறுகிறது.

 

அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், பேய் தன் மீது இறங்கியதாக ஆடுகிறான்.  அந்த ஊர் முழுவதும் தீயாக பரவுகிறது.  தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் சாமியார் பேய் விரட்ட அழைக்கப்படுகிறார்.

 

அந்த இளைஞனுக்கு பேயை விரட்டுவதற்கான “சடங்குகளை” செய்த பிறகு கிராமமே நிம்மதியாகிறது. ஆனாலும், அடுத்தடுத்து இயல்பாய் நடக்கும் சமாச்சரங்கள், “பேய்” இன்னும் அவனை விட்டு விலகவில்லை என நம்புகிறார்கள்.

 

அடுத்தடுத்து நடக்கிற கலாட்டாக்களும், உணர்வுப்பூர்வமாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

***


செயற்கை கிராமமாக இல்லாமல், ஒரு சின்ன கிராமத்தை இயல்புக்கு நெருக்கமாய் எடுத்திருப்பது சிறப்பு.  அவர்களுடைய நம்பிக்கைகள், ஒரு விசயத்தை எப்படி சிக்கலாக்குகிறது என்பதை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள்.  ”பேயா” இருந்தா கூட விரட்டியிருவார். நடிக்கிறவன்கிட்ட சிக்கிகிட்டு, அந்த சாமியார் உண்மையிலேயே அழுவது நகைச்சுவை தான்.

ரவியண்ணா ஊருக்கு ஒன்றென்றால் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது ஆச்சர்யம் தான். எனக்கென்னமோ கதைக்கு தேவை என்பதால், இயக்குநர் அப்படி ஒரு பாத்திரமாக எழுதியிருக்கிறார் எனப் பட்டது.

முன்பு ஆண்களை விட பெண்களுக்கு நிறைய பேய் பிடிக்கும். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் ”பேய் பிடிப்பது” குறைந்திருக்கிறது. இப்பொழுது பெண்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படையாக பேசுவதால், குறைந்திருக்கலாம் என தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

படத்தில் இளைஞனாய் வருபவர் தான் இயக்குநர் துமினாட். முதல் படத்திலேயே ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். வசூலிலும் பெரிய வெற்றிப்படமாகியிருக்கிறது.  இப்பொழுது கன்னட உலகில் வில்லனாக, நாயகனாக, இயக்குநராக என புகழ்பெற்றவராக வரும் ராஜ் பி ஷெட்டி தான் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர். சாமியாராக வந்து கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நபராகவும் சிரிக்கவைக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.  ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. தெலுங்கிலும், மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வெளியாகவில்லை. யாரோ தமிழில் படம் எடுப்பதற்காக அனுமதி வாங்கியிருப்பதால், மொழி மாற்றம் செய்யவில்லை என காரணம் சொல்கிறார்கள்.

 

பாலருவி – புதிய மாற்றங்கள்


வருடம் தோறும் அண்ணன் குடும்பம், இன்னும் சில சொந்தங்களுடன் குற்றாலம் செல்வது வழக்கம். சில சமயங்களில் அருவிகளில் அதிகம் நீர்வரத்து இருந்தாலோ, மிக குறைவான நீர் வரத்து இருந்தாலோ, திட்டமிட்ட பயணத்தை குலைத்துப் போட்டுவிடும்.


இப்படித்தான் கடந்த மாதம் திட்டமிட்ட நாட்களில் அதிகம் நீர் கொட்டி ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது. நண்பர்கள் இருவருடனும் கடந்த ஞாயிறிலிருந்து மூன்று நாட்கள் குற்றாலத்தில் தான் இருந்தோம்.


பேரரருவியிலும், ஐந்தருவியிலும் குளிக்கும் அளவிற்கு குறைவாகவே நீர்வரத்து இருந்தது. மற்றவை இன்னும் சுமார். குற்றாலத்தில் எப்பொழுதும் மக்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, இப்பொழுது குறைவான ஆட்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருந்தது.


இரண்டாம் நாள் பாலருவிக்கு சென்றோம். குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை (6 கிமீ – கட்டணம் ரூ. 10) பேருந்தில் சென்றோம். மீண்டும் கேரளா பேருந்து ஏறி, தென்காசி மாவட்டத்தின் எல்லையான புளியரையை தாண்டினால், கேரளாவின் ஆர்யங்காவிற்குள் கொஞ்சம் உயரமான சாலைகளில் போகும் பொழுது, குளிர்ச்சியை நன்றாகவே உணரமுடிகிறது.


பாலருவியின் வாயிலில் இறங்கினோம். (18 கி.மீ – கட்டணம் ரூ. 36) காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டோம். திங்கள்கிழமை வார நாள் என்பதால், மிக மிக குறைவாக கூட்டம் இருந்தது.

ஒரு நபருக்கு ரூ. 70 வசூலிக்கிறார்கள். ஏர்டெல் நெட் வொர்க் சுத்தமாக வரவில்லை. அவர்களே வைபை நமக்கு தருகிறார்கள். காட்டிற்குள் நான்கு கிமீ தூரத்தை அவர்களே பேருந்து வைத்து அழைத்து செல்கிறார்கள்.


அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து அதற்கு பிறகு அருவையைத் தொட ஒரு கிமீ நடந்து செல்லவேண்டும். முன்பு இதன் பாதை நிறைய ஈரத்துடன், மேடும் பள்ளமுமாய் இருந்ததை இப்பொழுது பதப்படுத்தி, நடந்த செல்ல வசதி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


அருவியை அடையும் பொழுது அதன் சத்தம் மட்டும் தனியாக கேட்கிறது. சீசன் காலத்தில் நேரடியாக குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழும் பொழுது, அதன் வழியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும், குட்டி அருவிகளில் நாம் குளிக்கலாம். இப்பொழுது செப்டம்பர் என்பதால், நேரடியாக அருவி கொட்டும் இடத்திலேயே ஆண்கள் குளிக்க அனுமதிக்கிறார்கள்.

மக்கள் கூட்டமும் குறைவு. ஆகையால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அருவியோடு மல்லுக்கட்டி குளியல் போட்டோம்.


மீண்டும் அவர்களுடைய பேருந்து இடத்திற்கு வந்தால், குளித்ததற்கு இதமாக, அவர்களே தேநீர், கொழுக்கட்டை, பழம்பொரி, முட்டைப் போண்டா சுடச்சுட விற்கிறார்கள். விலையும் கட்டுப்படியானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் வாயிலுக்கு வந்து, கேரள பேருந்தில் ஏறி செங்கோட்டை வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து குற்றாலம் வந்து சேர்ந்தோம்.

நல்ல அனுபவம்.

September 15, 2025

The map that leads to you (2025) பயணமும் காதலும்


நாயகி தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு, ஐரோப்பாவை வலம் வரவேண்டும் என தன் இரு தோழிகளுடன் பயணம் கிளம்புகிறாள்.  நாயகன் எதைச்சையாய் ஒரு ரயில் பயணத்தில், ஹெமிங்வேயின் புத்தகத்தை வைத்து பேச துவங்குகிறார்கள்.

அவன் தனது கொள்ளுத் தாத்தாவின் குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதே தடத்தில் பயணித்துக்கொண்டிருப்பவன்.

அடுத்தடுத்த சந்திப்புகளும், உரையாடல்களும் நெருக்கத்தைத் தந்து, காதலிக்க துவங்குகிறார்கள். அவள் வாழ்வில் எல்லாமே திட்டமிட்டவை. ஒழுங்குடன் கூடியவை. அவனோ அந்த நிமிடத்தில் வாழவேண்டும். அப்படியே ஒரு பறவை போல பயணம் செய்து கொண்டே வாழவேண்டும் என நினைக்கிறவன்.

 

இருவரும் பயணம் செய்வது ஓக்கே. இருவரும் இணைந்து வாழவேண்டும் என நினைக்கிற பொழுது… அவர்களுக்குள் விவாதம் எழுகிறது. முரண்பாடு முளைக்கிறது.  பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.


****


ஒரு நாவல் எழுதி, புகழ்பெற்று, அதையே படமாக்கலாம் என எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மிகவும் மேலோட்டமாக இருந்தது. முடிவு இது தான் என நாம் கணிக்கிற ஒன்றை முடிவாக கொண்ட கதை. காட்சிகளில் கூட புதுமையோ, ட்விஸ்டோ ஏதுமில்லை.

பயணம் தொடர்பான படம் என்பதாலும், பிரைமில் தமிழில் இருந்ததாலும் பார்த்தேன். குறிப்பாக நாயகியின் இயல்பான நடிப்பு பிடித்திருந்தது.

September 13, 2025

Colombiana (2011) பழிவாங்கும் படலம்


கொலாம்பியா. மாபியா உலகம். ஏதோ ஒரு பிசகில், சிறுமியாய் இருக்கும் நாயகியின் கண் முன்னாலேயே பெற்றோர்களை போட்டுத்தள்ளுகிறார்கள்.

 

அமெரிக்காவிற்கு வந்து சேர்கிறாள். தன் மாமாவிற்கு உதவியாய் சில இரகசிய வேலைகளை செய்து வந்தாலும், பெற்றோரை கொன்றவர்களை விடக்கூடாது என்கிற உணர்வு மாறவில்லை.

 

வில்லன் தொடர்பான ஆட்களை ஒவ்வொருவராய் கொலை செய்ய துவங்குகிறாள். அதற்கு அடையாளமாக கொலம்பியாவின் புகழ்பெற்ற மலரான கேட்டாலியா மலரை அடையாளமிடுகிறாள். அவள் பெயரும் அதுதான்.

 

அவள் தான் என எதிரி புரிந்துகொள்கிறான். அவர்கள் இவளைச் சார்ந்தவர்களை வேட்டையாட ஆரம்பிக்கிறார்கள். வரிசையாய் கொலைகள் என்பதால் ஒருபக்கம் FBI துப்பறிய ஆரம்பிக்கிறது.

 

பிறகு என்ன ஆனது என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

Ballerina வில் உள்ள போதாமைகளைப் பார்த்து வருத்தத்தில் இருந்தவனுக்கு இந்தப் படத்தை சக பதிவரான Muthuvel அறிமுகப்படுத்தினார்.

 

துவக்கத்தில் இருந்து இறுதி வரை, கிரிப்பாக இருந்தது.  லாஜிக் இருந்தது. சண்டைக் காட்சிகளும் அருமை.


மாபியா உலகம் என்கிறார்கள்.  பொல்லாதவன் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. “தொழிலுக்காக செய்கிறியா! செய்” என்பது இவர்களுக்கு பொருந்தாதா என்ன? மற்றபடி வெற்றிப்பட எளிய பார்முலாவாக பழிவாங்கல் இருப்பது என்பதால் எடுக்கிறார்கள் போல.

 

நாயகி அவதாரில் நேத்ரிக்கு உருவம் தந்த Zoe Saldana தான் படம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தார். மொத்தப் படத்தையும் தாங்கியிருந்தார். இயக்குநர் Oliver Megaton. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் புகழ்பெற்ற Taken2, 3 படங்களை இயக்கியிருக்கிறார்.

 

தமிழிலும் கிடைக்கிறது. ஒரு நல்ல பழிவாங்கல் படம் பார்க்கவேண்டும் ஆவல் இருப்பவர்கள் பார்க்கலாம். என்னைப் போல Ballarina பார்த்து வருத்தப்பட்டவர்களும் பார்க்கலாம். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வழிகளில் முயலுங்கள்.

Ballerina – from the world of John Wick (2025)


நாயகி சிறுமியாக தன் தந்தையுடன் பாதுகாப்பாக இருக்கிறார். குழுவின் விதிமுறையை மீறிவிட்டார் என  ஒரு கொலைகார குழு வந்து, நாயகியின் அப்பாவை கொன்றுவிட்டு, நாயகியை தூக்கி செல்கிறார்கள்.  அந்த கொலை அவளை மிகவும் பாதிக்கிறது.

 

இன்னொரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பாலே நடனம், துப்பாக்கி, சண்டை என கடுமையான பயிற்சி தருகிறார்கள்.  பாதுகாக்கும் வேலையா? கொலையா? என தேர்ந்தெடுப்பதில், பாதுகாப்பது என முடிவெடுக்கிறாள்.

 

பெரிய மனிதர்களை கொலைகாரர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் பிரதான வேலை. அந்த வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்பாவை கொன்ற குழு அடையாளத்தில் ஒருவன் சிக்குகிறான். தன் குழுவிடம் விசாரிக்கும் பொழுது, ”அது மோசமான கொலைகார குழு. ஆகையால் அதில் தலையிடாதே! உன் உயிருக்கும் உத்தரவாதமில்லை!” என எச்சரிக்கிறார்கள்.

 

மீறி அந்த கொலைகார கும்பலை தேடிச் செல்கிறாள். போகும் வழியெல்லாம் ரணகளம் தான்.  இதில் மோசமான சூழ்நிலையில்; ஜான்விக் (கெளரவ வேடத்தில்) வந்து தலையிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

***

கதைக்காக எல்லாம் அவர்கள் பெரிதாக மெனக்கெடவில்லை.  அது எதுக்கு தேவையில்லாமல் என்பதாக தான் அவர்களுடைய அணுகுமுறை இருக்கிறது.



ஜான்விக் தான் செத்துப்போயிட்டாரே! எப்படி என கேள்வி கேட்டால், மூன்றாம் பாகத்திற்கும், நான்காம் பாகத்திற்கும் இடையில் இந்த கதை நடக்கிறது என்கிறார்கள்.

 

பாதுகாப்பது அல்லது கொலை என்பதற்கு பயிற்சி ஓக்கே. அதில் என்ன பாலே நடனம் எதற்கு வருகிறது. பயிற்சி தருகிறார்கள். எதில் சிறந்து விளங்குகிறார்களே அதில் தேத்திவிடுகிறார்கள் போல!

 

Ballerina என்ற பெயரில் 2023ல் ஒரு கொரியப் படம் வந்திருக்கிறது. அதில் தன் தோழியை கொன்றுவிட்டார்கள் என அந்த படத்து நாயகி பழிவாங்குகிறாள் என கதை சொல்கிறார்கள்.

 

Ana de Armas தான் நாயகி. 37 வயது. ஆனால் 25 வயது போல சண்டைப் போடுகிறார். கொஞ்சம் நெருக்கமாய் கேமரா போனால் மட்டும் வயது தெரிகிறது. (நம்மூர் ஷ்ரத்தா கபூர் சாயலோடு இருக்கிறார்.) மற்றபடி சண்டை போடும் பொழுது, அடி வாங்கி, அடி கொடுத்து, உயிர் பிழைக்கிறார்.

 

சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.  பாருங்கள். பிரைமில் தமிழிலும் கிடைக்கிறது.

September 8, 2025

தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்



நானொரு நத்தை 

தயவுசெய்து 

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

அதோ அந்த செர்ரி மரங்களை நோக்கி 

நான் மெல்ல நகர்கிறேன்

நான் சென்றடையவேண்டிய 

இடம்  ஒன்றுமில்லை

செய்தே தீரவேண்டிய 

வேலைகளும் கிடையாது 

இந்த வேகமே எனக்கு உவப்பு.

நான் மெதுவாகப் 

போகவே விரும்புகிறேன்

இது எனக்கு 

நான் கடந்து செல்லும் 

பூக்கள் அனைத்தையும்

புல்லின் இதழ்கள் 

ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்கு

வேண்டிய நேரத்தைத் தருகிறது

 

நான் ஒரு நத்தை

இது என் பாதை

தயவு காட்டுங்கள் 

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

எனக்கு இந்நாள் முழுவதும் 

இன்னும் மீதமிருக்கிறது.

 

-   பார்பரா வான்ஸ்,

அமெரிக்கப் பெண் கவிஞர்

 

தமிழில்.மோகனரங்கன்

Hridayapoorvam (2025) மலையாளம்


நாயகன் கொச்சியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். முதல் காட்சியிலேயே அவருக்கு இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது. அது பூனேவில் இருந்த, ஒரு விபத்தில் மரணமடைந்த ஒரு இராணுவ அதிகாரியின் இதயம். மெல்ல மெல்ல தேறிவருகிறார். நாயகன் கொஞ்சம் சிடு சிடு பேர்வழி. உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் கண்டிப்புடன் நடத்துகிறார்.


இதயம் கூட உடலில் உறுப்பு தான். அது வந்ததால், எதுவும் மாறிவிடப்போவதில்லை என வாய்விட்டே சொல்கிறார். மண நாளில் மணமகள் தன் காதலனுடன் போனதால், திருமணம் தடைபடுகிறது. அதற்கு பிறகு, இதயம் தந்த தொந்தரவு திருமணத்தை தள்ளிப் போட்டு, இப்பொழுது நடுத்தர வயதில் இருக்கிறார்.

இந்த வேளையில், இதயம் தந்த இராணுவ அதிகாரியின் மகள் தன் திருமணத்திற்கு உணர்வுப்பூர்வமாக அழைக்கிறாள். முதலில் தன் இயல்பில் மறுக்கும் நாயகன், நாயகியின் அழைப்பில் செல்கிறார். அங்கு போனால், திருமணம் ஒரு பிரச்சனையில் நின்றுபோகிறது. அங்கு நடந்த களேபரத்தால், நாயகனுக்கு கொஞ்சம் முதுகு பிரச்சனையால், சில நாட்கள் அங்கு தங்க நேரிடுகிறது.

அங்கு இருக்கும் நாளில் அவன் இயல்பில் மாற்றம் நடைபெறுகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதை மெல்ல மெல்ல உணர்வுப்பூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
***


பழைய கதை. இந்த இயல்பில் சில கதைகள் நினைவுக்கு வந்து போகின்றன. அதே பழைய டெம்ளட்டிலேயே காட்சிகளும் நகர்வதால், அத்தனை ஈர்ப்பில்லை.

கதை பெரும்பாலும் பூனே என்பதால் புதிய இடங்களாக இருந்தன. மற்றபடி நாயகன் மோகன்லால், நாயகியாக மாளவிகா மோகன், பூவே உனக்காக சங்கீதா என கதையை நகர்த்துவதில் துணைநின்றிருக்கிறார்கள்.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு பழைய ஆள். அவருடைய மகன் எழுதிய கதை என்கிறார்கள். ஆனால் ஈர்ப்பில்லை.

சுமாரான படம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Lokah – Chapter 1 - மலையாளம் (2025)


ஸ்வீடனில் ஆக்சன் காட்சியுடன் அறிமுகமாகும் நாயகி, ஒரு தேவைக்காக முதல் காட்சியில் பெங்களூருக்கு அழைக்கப்படுகிறார். ஒரு வீடு எடுத்து தங்குகிறார். ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு தேவையானவை எல்லாம் அவரிடத்திற்கு வந்து சேர்கின்றன.


எதிர்வீட்டில் பிளாட்டில், படித்துவிட்டு, ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்களில் ஒருவர் நாயகன். எதிர் பிளாட்டில் தனித்து வாழும் நாயகியை தொடர்ந்து கவனிக்கிறார். அவளுக்கு பின்னால் ஒரு மர்மம் இருப்பதை அறிகிறார்.

நாயகியை தொடர்ந்து செல்லும் பொழுது, அவளைப் பற்றிய மர்மம் விலகுவதும், அதற்கு பிறகு ஏற்படும் கலாட்டாக்களும், அதிரடிகளும் தான் மீதி மொத்தப்படமே!
****


மலையாளத்தில் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், கதை எழுதும் திறனிலும் சூப்பர் மேன் கதைகளில் உள்ளெ நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே மின்னல் முரளியில் (2021) வெற்றிக்கண்டவர்கள், இப்பொழுது அடுத்தடுத்து சூப்பர் நாயகர்களின் கதையை தொட்டு வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.

நாயகி கதாப்பாத்திரத்தின் வார்ப்பு ஏற்கனவே புகழ்பெற்ற ஒண்டர் வுமன், வேம்பயர் பாத்திரங்களை நினைவூட்டினாலும், இந்திய தன்மையுடன் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.

கதையில் கொஞ்சம் இடையிடையே லேசான தொய்வு இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அதில் இருந்து காப்பாற்றுவதில் துணை நின்றிருக்கின்றன.

கல்யாணி பிரியதர்சன் நாயகியாக பொருந்தியிருக்கிறார். நஸ்லன் பயந்து போன நாயகனாக பொருத்தமாக இருக்கிறார். அதைப் போலவே அவர்களுடைய நண்பர்களும். லியோவில் சிறிது நேரமே வந்தாலும், மாஸ்டர் சாண்டி ஈர்த்து, இந்தப் படத்தில் பொருத்தியிருக்கிறார்கள்.

இனி ஆண்டிற்கு ஒரு படம் இந்த சீரிசில் அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன். படம் முடிந்துவிட்டது என கிளம்பினால், அவெஞ்சர் படம் போல படத்தின் இறுதியில் அடுத்தப் பாகத்திற்கான காட்சிகளை சிலவற்றை தருகிறார்கள்.

ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அவெஞ்சர் சீரிஸ் படங்கள் பிடிக்காதவர்களுக்கு, லோகாவும் பிடிக்காது. ஓணம் திருவிழாவிற்கு வந்த படங்களில் முதல் இடம் என்கிறார்கள்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்ருக்கிறது.

September 4, 2025

கேட்டால் கிடைக்கும். கேட்க தான் பெரும் தயக்கம்….!


பெரிய நிறுவனங்களில் ஆண்டு முழுவதும் என்னென்ன நாட்கள் விடுமுறை என்பதை ஆண்டு துவங்கும் பொழுதே தெரியப்படுத்திவிடுகிறார்கள். அரசும் அதை ஒரு விதிமுறையாக வைத்திருக்கிறது.


ஆனால், வளர்ந்து வரும் நிறுவனங்களில் அப்படி அறிவிக்கப்படுவதில்லை. ஒரு வரி ஆலோசகராக அந்த நிறுவனம் விடுமுறையா இல்லையா என தெரிந்துகொண்டு போவது வழக்கம். அப்படி ஒரு சில நிறுவனங்களில் முதல் நாள் வரைக்குமே தெரியாது என்பார்கள்.

இதெல்லாம் அடிப்படையான விசயங்கள். வெளியூரில் வேலை செய்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரயிலோ, பேருந்தோ புக் செய்தால் தான் ஊருக்கு கிளம்பமுடியும். கடைசி நேரத்தில் கிளம்பினால், கூடுதலாக பணமும் செலவாகும். அலைச்சலுக்குள்ளவோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் இதை கேட்பது சரியானது. கேளுங்கள் என வலியுறுத்தினாலும், கேட்க தயங்கிக்கொண்டே பல மாதங்களை கடந்து செல்வார்கள்.

யாராவது, இதன் நியாயத்தை நிர்வாகத்திடம் பேசி, புரியவைத்து, அல்லது தைரியமாய் கேட்கும் அந்த பணியாளருக்காக அவர்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

***

நேற்று ஒரு நண்பரிடம் இது குறித்து பேசும் பொழுது, பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டம் நடைபெறும் பொழுது, கூட்டம் துவங்கும் வரைக்கும், பள்ளியில் அடிப்படை பிரச்சனைகள், வேறு வேறு விசயங்களை பெற்றோர்களுக்குள் விவாதிப்பார்கள். ஆனால், கூட்டம் துவங்கியதும் பெரும்பாலோர் அமைதியாய் இருப்பார்கள். ஏதாவது கேட்டால், பிள்ளைகளின் வாழ்வை பாதிக்கும் என பயந்துகொண்டு அமைதி காப்பார்கள்.

நிர்வாகத் தரப்பில் சில விசயங்களை அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமுல்படுத்திக்கொண்டே இருப்பார்கள். மாணவர்கள் தரப்பில், பெற்றோர்கள் தரப்பில் நாம் நடைமுறை சிக்கல்களை சொல்லும் பொழுது தான் அவர்களே புரிந்துகொள்வார்கள்.

இப்படி பெற்றோர்கள் கூட்டம் கூட்டியே பேசாதவர்கள், எப்படி தனித்தனியாய் கேட்க போகிறார்கள்? இப்படி நியாயமான அம்சங்களை கேட்டால் தான் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அறிந்தும், கேட்கும் தைரியமான பெற்றோர் கேட்கும் வரை அமைதியாய் இருப்பார்கள்.
****

ஒரு வரி ஆலோசகர்களுக்கான, கணக்காளர்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். அனுபவ அறிவு கொண்டவர்கள். அது இலவச சேவையும் கூட அல்ல. எல்லோரும் வருடச் சந்தா செலுத்துபவர்கள்.

அந்த அமைப்பு இணைய வழியில் ஜூம் கூட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் நடத்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அதன் பல உறுப்பினர்கள் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள். அதனால், கூட்டங்களில் அவர்களால் பங்கேற்கமுடியவில்லை.

அந்தக் கூட்டத்தை பதிவு செய்து அவர்கள் வைத்திருக்கும் சானலில் வலையேற்றினால், கலந்துகொள்ள இயலாத உறுப்பினர்களும் பயன்பெறுவார்கள். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது, பேசும் பொழுது, அதன் தேவையை பேசுகிறார்கள். பரஸ்பரம் வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்க தயங்குகிறார்கள். அப்படி யாராவது ஒருவர் தொடர்ந்து கேட்டால், அவர் வேண்டுமென்றே கேட்கிறார் என நிர்வாகத்தினர் கோபப்படுகிறார்கள். யார் தேவை என உணர்கிறார்களோ பலரும் கேட்க துவங்கினால், அந்த வேலை இயல்பாக நடந்துவிடும். ஆனால் கேட்க தயங்குகிறார்கள். அந்த அமைப்பில் இணைவதே அந்த கூட்டங்களுக்கு தான். அதையே இழப்பது என்பது பெரிய இழப்பு. அதைக் கேட்காமல் அதில் ஏன் நாம் உறுப்பினராக இருக்கவேண்டும்? புரியவில்லை.

என் வாழ்வில் கேட்டால் தான் கிடைக்கும் என உணர்ந்தே இருக்கிறேன். நமது உரிமைகள் அப்படித்தான். வரலாறு நமக்கு கற்றுத் தந்ததும் அப்படித்தான். கேட்டால் கிடைக்கும். கேட்கவில்லை என்றால் இழப்பு நமக்கு தான்.

September 3, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : புதிய மாற்றங்களும், விண்ணப்பங்களும்!


பணியாளரை பதிவு செய்வதில் புதிய மாற்றம்

 

இந்த புதிய மாற்றம் ஏன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், 01/08/2025 காலம் துவங்கி 31/07/2025 காலம் வரைக்கும் ரூ. 15000த்தை பி.எப். உதவித் தொகையாக இரண்டு தவணைகளில் பணியாளர்களுக்கு வழங்க இருக்கிறது.

 

முதன்முறையாக பணிக்கு சேர்பவர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கும்.  ஆகையால், நிறுவனத்தில் தங்களுக்கு பி.எப். தொகையைப்  பிடித்தம் செய்தால், தங்களது குடும்பத்தின் அடிப்படை செலவுகளுக்கு போதுமான சம்பளம் கிடைக்காது. ஆகையால் சம்பளத்தில் பி.எப். பிடிக்காதீர்கள் என பணியாளர்களே நிறுவனத்திடம் சொல்வதை இயல்பாக நாம் கேட்டிருப்போம்.  ஆகையால், அவர்களுக்கு சம்பளத்தில் குறையாக கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என புரிந்துகொள்ளலாம்.

 

புதிய மாற்றத்தை புரிந்துகொள்வதற்கு முன்பு பணியாளரை பதிவு செய்வதற்கு ஜூலை 2025 வரை என்ன நடைமுறை இருந்தது என தெரிந்துகொள்வது அவசியம்.

 

பழைய பதிவு செய்யும் முறை

 

நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளரை நிறுவனத்திற்கென இயங்கும் தளத்தில், பணியாளரின் அடிப்படை விவரங்களான, ஆதாரின் அடிப்படையில், அவருடைய பெயர், பிறந்தநாள், தந்தை/கணவரின் பெயர், ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, எந்த தேதியில் பணிக்கு இணைந்தார் போன்ற விவரங்களை கொடுத்தால், பி.எப். தளம் ஆதார் தளத்தில் ஒப்பிட்டு, சரி என சொன்ன பிறகு, பி.எப். தளம் அந்த பணியாளருக்கென அடையாள எண் (Universal Account No.) ஒன்றை உருவாக்கித்தந்தது.

 

ஒரு வேளை அவர் ஏற்கனவே முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த பொழுது, அவருக்கென அடையாள எண்ணை உருவாக்கியிருந்தால், அந்த எண் அந்த பணியாளரிடம் இல்லையென்றால் கூட,  பணியாளரின் ஆதார் எண்ணின் அடிப்படையில் தளமே அவருடைய அடையாள எண்ணை தெரியப்படுத்தியது.


இப்பொழுது புதிய முறை

 

புதிதாக பணிக்கு சேர்ந்திருக்கும் பணியாளர் தன்னுடைய செல்போனில் அல்லது நிறுவனம் உதவும் செல்போனில் இரண்டு ஆப்களை பிளே ஸ்டோரில் (Play Store) தரவிறக்கம் செய்யவேண்டும்.

 

1.       Aadhar FaceRD

2.       Umang App

 

இரண்டையும் தரவிறக்கம் செய்த பிறகு,  இரண்டாவது ஆப்பான உமாங் ஆப்பில் சம்பந்தப்பட்ட பணியாளரின் ஆதார் லிங்க் மொபைல் எண்ணையும், என்ன மாநிலம் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.  ஒரு ஓடிபி (One Time Password) வரும். அதையும் உள்ளீடாக கொடுத்தால், MPIN ஒன்றை உருவாக்கச் சொல்லும். இப்படி கொடுத்துவிட்டால், ஒவ்வொருமுறையும் உள்ளே நுழைவதற்கு இந்த MPIN போதுமானது.

 


இப்பொழுது நமது மொபைல் எண், MPIN உதவியுடன், உமாங் ஆப்பில் மீண்டும் உள்ளே நுழையவேண்டும்.  இந்த உமாங் ஆப் என்பது  மத்திய மாநில அரசுகளின் குடிமக்கள் தொடர்பான பிறந்த சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ரேசன் அட்டை, MSME,  போன்ற பல விசயங்கள் உள்ளே இருக்கின்றன.  அதில் ஒரு அம்சம் தான் நமக்கு தேவையான EPFO சம்பந்தப்பட்டது.  தேடு (Search in Umang) என்கிற மேலே இருப்பதில் EPFO என்பதை தட்டச்சு  செய்தால், வந்துவிடும். அதைக் கிளிக் செய்தால், உள்ளே வரிசையாக பல அம்சங்கள் இருக்கின்றன். அதில் அடையாள எண் உருவாக்கம் (UAN Allotment and Activation)  என்பதை கிளிக் செய்தால், ஆதார் எண் கேட்கும். ஆதார் லிங்க் மொபைல் எண் கேட்கும். இரண்டையும் கொடுத்தால், ஒரு ஓடிபி மொபைலுக்கு வரும். அதையும் அதில் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பணியாளருக்கான ஒரு அடையாள எண்ணை கொடுத்துவிடும்.

 

அடுத்து Aadhar face RD யைக் காட்டும். முகத்தை தெளிவாக வெளிச்சம்படும் இடத்தில் காண்பித்தால், நம் முகம் தெளிவாக இல்லையென்றால் சிவப்பு நிறம் வட்டத்தில் காண்பிக்கும்.  வெளிச்சம் சரியாகப் பட்டு, முகம் தெளிவாக இருந்தால், பச்சை நிறம் வட்டத்தில் காண்பிக்கும்.  அதற்கு பிறகு உங்களுடைய ஆதார் அடிப்படை விவரங்களை வரிசையாகக் காட்டும். அதற்கு ஒரு ஓடிபி வந்து அதையும் கொடுத்தால், அடையாள எண்ணை நமக்கு காட்டும்.  அடையாள எண்ணையும், அதற்குரிய கடவுச்சொல்லையும் (Password)  சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கும். அந்த எண்ணை நிறுவனத்திடம் கொடுத்துவிட்டால், அதைக் கொண்டு பணியாளராக பதிந்துகொள்ளமுடியும்.

 

அடையாள எண் ஏற்கனவே இருக்கிறது. முகத்தைப் பதிவு (Face Authenticattion) செய்யவில்லை என்றால், அதைச் செய்வதற்கு ஏற்கனவே சொன்னது படி, உமாங் ஆப்பில் உள்ளே நுழைந்து, சம்பந்தப்பட்ட EPFO என்ற இடத்திற்கு சென்று அடையாள எண் செயலாக்கம் (UAN Activation)  என்பதை கிளிக் செய்தால், மேலே சொன்னது போல ஆதார், மொபைல் எண் கொடுத்து செயல்படவேண்டும்.

 

EPFO விண்ணப்பங்கள்

 

EPFO குறித்த விண்ணப்பங்கள் குறித்த ஒரு அறிமுகத்தைத் தாருங்கள் என நமது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் போனில் தெரிவித்தார். ஆகையால் விண்ணப்ப

 

பி.எப் விண்ணப்பங்கள் :  31, 19, 10C & 10D

 

Form 31  - முன்பணம் மற்றும் கடன் படிவம் (PF Part Withdrawal)

 


நாம் செலுத்திய பி.எப். பணத்தில் இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றன.  அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களையும், விதிகளையும் விதித்திருக்கிறது.

 

கொரானாவினால் அரசு  ஊரடங்கு அறிவித்த பொழுது பலருக்கும் வேலையில்லை. சம்பளம் இல்லை. யாரிடமும் கடனும் பெற முடியாத நிலை என்னும் பொழுது, கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு  எந்தவித ஆவணத்தையும் நிர்பந்தம் செய்யாமல் கடன் வழங்கியது. திரும்ப செலுத்த தேவையில்லை. நமது நிதியில் இருந்து கழித்துக்கொண்டார்கள்.

 

கடந்த ஆண்டு ஜூனிலிருந்து மீண்டும் கடன் தருவதற்கு புதிய நிபந்தனைகளை உருவாக்கியுள்ளார்கள். (விரிவாக 17வது அத்தியாயத்தில் எழுதியிருந்தேன். இப்பொழுது சுருக்கமாக தருகிறேன்.)

பி.எப். உறுப்பினருக்கான தளத்தில்  Online service என்ற பகுதியில்  Claim என காண்பிக்கும்.  அதில் முன்பணம் (Advance)  என்ற (Form 31)   விண்ணப்பத்தை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.    அதில் நாம் வேலை செய்த நிறுவனங்களை வரிசையாக காட்டும்.  முந்தைய கணக்குகளை இப்பொழுதோ அல்லது கடைசியாக வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது.  

 

பிறகு என்ன காரணங்களுக்காக முன்பணம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.  அதில் வரிசையாக இப்படி காண்பிக்கும்.

 

இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை.  (Non receipt of wages > 2months)

இயற்கை பேரிடர் (Natural Calamites)

உடல்நலக்குறைவு (Illness)

மின்சாரம் துண்டிப்பு (Power Cut)

மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வாங்குதல் (Purchase of Handicap Equipment)

வீடு வாங்குவது/கட்டுவது/ மராமத்து செய்வது

 

இன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன.    ஒவ்வொரு தலைப்பிற்கும் உரிய நிபந்தனைகளும் சில ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எவ்வளவு நிதி கொடுக்கப்படும் என்பதற்கும், பட்டியலில் உள்ள அம்சங்களுக்கு தகுந்தவாறு நிபந்தனைகள் இருக்கின்றன.  மொத்தத்தையும் எடுத்துவிட முடியாது.

 

 

உதாரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை என்றால், நாம் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறியதை (Exit) பதிந்திருக்கவேண்டும்.

 

 

சம்பந்தப்பட்ட  பணியாளருக்கோ, குடும்பத்தினருக்கோ உடல்நலக்குறைவு என்றால்… நிறுனத்தின் பொறுப்பாளரும் , மருத்துவரும் சான்றிதழ் சி வழங்கவேண்டும்.

 

 

வீடு வாங்குவது என்றால்… வீட்டை யார் தொழிலாளிக்கு விற்பவர் என்கிற விவரத்தை கொடுக்கவேண்டும். முன்பணம் நமக்கு வராது. கவனம்.  சம்பந்தப்பட்டவருக்கே சென்றுவிடும். வீடு வாங்குவது குறித்து நிறைய வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறார்கள். படித்து விண்ணப்பியுங்கள்.

 

 

ஆகையால் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கவனமாக படித்து முன்பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். இல்லையெனில், விண்ணப்பத்தை பி.எப். ஏற்காது. திருப்பி (Reject) அனுப்பிவிடும்.

 

 

பி.எப் முன்பணம் குறித்த விதிகளும், வழிகாட்டுதல்களும் (INSTRUCTIONS AND GUIDELINES FOR THE ADVANCES TO BE CLAIMED THROUGH FORM 31) இணையத்தில் மூன்று பக்கங்களில் PDF பைலாக எளிதாக கிடைக்கின்றன. 

 

 

Form 19 – மொத்தப் பணத்தையும் திரும்ப பெறும் விண்ணப்பம்

 

இந்த விண்ணப்பம் என்பது பணியாளரின் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பமாகும்.

 

முழுமையாக திரும்ப பெறுவது என்பது இரண்டு சமயங்களில் சாத்தியப்படும். 

1.பணியாளர் தன்னுடைய பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு பிறகு விண்ணப்பித்து வாங்குவது. 

 

2. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவது.

 

இந்த திட்டம் ஓய்வு பெறும் காலத்தில் பணியாளருக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற தொலைநோக்கு திட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், பல பணியாளர்கள்,  ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் பணத்தை திரும்ப பெறுகிறார்கள்.

 

ஆரோக்கியமாகவும், வருமானம்  இருக்கும் காலத்திலேயே நிதியை பெற்றோம் என்றால், ஆரோக்கியம் குறைவாக, வருமானம் இல்லாத ஓய்வு பெறும் வயதில் என்ன செய்வோம் என நிதானமாக யோசிக்கவேண்டும்.

 

விண்ணப்பிப்பதற்கான தேவையான அம்சங்கள்.

 

1.  பணியாளரின் ஆதார் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

2.       தொழிலாளியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.  அதுவும்  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

(அப்பா/கணவர்/மனைவி என இணைப்பு (Joint Account) கணக்காக இருக்க கூடாது.   தனியாக கணக்கு இருக்கவேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முதல் எழுத்து எல்லாம் வங்கியில் உள்ள பெயரோடு 100% ஒத்துப்போகவேண்டும். அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால் சரி செய்துகொள்ளவேண்டும்.

 

3.       நிறுவனத்தில் இருந்து விலகிய (Exit) தேதியை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.  இதை நிறுவனமும் செய்யலாம்.  பணியாளரும் செய்யலாம்.

 

4.       ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், இக்கட்டுரையின் படி செய்தால் போதுமானது.  அவரே இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை செய்தவராய் இருந்தால்,  கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு முந்தைய கணக்குகளை முறையாக (Transfer) விண்ணப்பித்து ஒரு கணக்காக மாற்றவேண்டும். அவசியம்.

 

5.       பணியாளரின் பான்கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நிறுவனத்தினரால்,  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

விண்ணப்பத்தை திறந்ததும் வங்கி விவரத்தை சரி செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.  அதை நிரப்பவேண்டும்.

 

அடுத்து, தேவைப்படும், 15G/15H படிவத்தை நிரப்பி, பதிவேற்றவேண்டும்.  இணையத்தில் கிடைக்கின்றன.

 

இறுதியில்  பணியாளருடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் (OTP). அதை நிரப்பும் பொழுது, விண்ணப்பம் பூர்த்தியடையும்.

 

மேற்சொன்ன எல்லா அம்சங்களும் சரியான பொருந்தும் பட்சத்தில், ஒரு மாதத்திற்குள் பணம் வங்கிக்கு வந்துவிடும்.  இல்லையெனில், நிராகரித்து உரிய காரணத்தையும் பணியாளரின் பாஸ்புக் தளத்தின் உள்ளே போய் பார்த்தால், குறிப்பிடுகிறது.  சரி செய்து, மீண்டும் விண்ணப்பித்தால், பணம் வந்துவிடும்.

 

இன்னும் உள்ள பிற விண்ணப்பங்களை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721