> குருத்து: Let me in (2010) ஆங்கிலம்

September 26, 2025

Let me in (2010) ஆங்கிலம்


1983. எங்கும் வெள்ளைப் பனி.   குளிர் வாட்டி வதைக்கிற ஊர். பள்ளி செல்லும் ஒரு 12 வயது பையன்.  அம்மாவும் அப்பாவும் பிரிகிற முடிவில் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் வீட்டுச் சூழல் இயல்பானதாக இல்லை.   பள்ளியிலும் இவன் கொஞ்சம் நோஞ்சான் பையனாக இருப்பதால், மூன்று மாணவர்கள் இவனை டார்ச்சர் செய்துகொண்டு இருக்கிறார்கள். மனதளவில் தனிமையில் வாடுகிறான்.


பக்கத்து வீட்டுக்கு ஒரு வயதானவரும் 12 வயது பெண்ணுமாய் புதிதாய் குடியேறுகிறார்கள்.  தனிமையில் இருப்பதால், ஒரு பைனாகுலரை வைத்துக்கொண்டு சுற்றி உள்ளவர்களை நோட்டமிடுவது இவனது வழக்கம்.  அந்த பழக்கத்தில் அந்த பெண்ணையும் நோட்டமிடுகிறான்.


அவள் அத்தனை கடும் பனியிலும் வெறும் காலில் நடக்கிறாள். அவளைச் சுற்றிய நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. இருவரும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள்.


சில நாட்களிலேயே அவள் ஒரு ரத்தம் குடிக்கும் காட்டேரி என தெரிந்துவிடுகிறது. அவளுக்கு பல காலமாகவே 12 வயது தான் ஆகிறது.   அவள் உயிர் வாழ்வதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது.  ஊரில் ஆங்காங்கே சிலர் காணாமல் போகிறார்கள். போலீசு துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.

அவர்களுடைய நட்பு வளர்ந்ததா? போலீசு கைது செய்ததா?  பிறகு என்ன நடந்தது என்பதை  விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 ****


Let the right one என்ற பெயரில் 2004ல் ஒரு நாவல் எழுதி, புகழ் பெறுகிறது.  அதை ஸ்வீடிசு மொழியில் 2008ல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்து படம் வெற்றி பெறுகிறது.  பிறகு 2010ல் ஹாலிவுட்டில் இந்த படத்தை எடுக்கிறார்கள்.  இந்தப் படத்தின் உத்வேகத்தில் தான் நம்மூருக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்து லோகா (2015) என மலையாளத்தில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் திரைமொழி அத்தனை அடர்த்தியாய் இருந்தது.   கேமிரா கோணங்கள், மிகவும் குறைவான வசனங்கள், ஒன்றை காட்சியில் காண்பிக்காமலே அதன் தீவிரத்தை உணர்த்துவது என சிறப்பாய் இருந்தன.  இயக்குநர் யார் என தேடினால்… Matt Reeves. இவர் Planet of apes சம்பந்தமான இரண்டு பாகங்களை எடுத்தவர்.

கதைக்கு தேவை என்றால் கூட அத்தனை குளிர் பனியில் அந்த பெண்ணை எப்படி வெறும் காலில் எடுத்தார்கள் என ஆச்சர்யமாய் இருக்கிறது. தொழில்நுட்பம் உதவியிருக்குமோ! எல்லா மக்களும் அத்தனை கனத்த ஆடைகளுடன் சுத்தும் பொழுது, ஷூ இல்லாமல் எப்படி உலாவுகிறாள். பார்க்கிறவர்களுக்கு பட்டென்று சந்தேகம் வந்துவிடும் அல்லவா!

அந்த பையனும், பெண்ணும் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். காட்டேரியாக இருந்தாலும், அந்த பெண் தன் புன்னகையால் அத்தனை ஈர்க்கிறாள்.  படத்தைப் பார்த்து முடிக்கும் பொழுது, அவளுடன் வரும் பெரியவரின் இன்னொரு பாத்திரம் தான் அந்த பையன் என உணரமுடிந்தது.

காட்டேரிகளின் கதைகள் Originals,  Vanhelsing பல இருந்தாலும், இளம் பருவத்தின் நட்பு என்ற கதைக்களன் புதிதாக இருந்தது.

வாம்பயர் கதை பிடிக்கும் என்பவர்கள் பாருங்கள். இப்பொழுது எந்த ஓடிடியிலும் இல்லை. தமிழில் இல்லை.  வேறு வழிகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: