> குருத்து: Lokah – Chapter 1 - மலையாளம் (2025)

September 8, 2025

Lokah – Chapter 1 - மலையாளம் (2025)


ஸ்வீடனில் ஆக்சன் காட்சியுடன் அறிமுகமாகும் நாயகி, ஒரு தேவைக்காக முதல் காட்சியில் பெங்களூருக்கு அழைக்கப்படுகிறார். ஒரு வீடு எடுத்து தங்குகிறார். ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு தேவையானவை எல்லாம் அவரிடத்திற்கு வந்து சேர்கின்றன.


எதிர்வீட்டில் பிளாட்டில், படித்துவிட்டு, ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்களில் ஒருவர் நாயகன். எதிர் பிளாட்டில் தனித்து வாழும் நாயகியை தொடர்ந்து கவனிக்கிறார். அவளுக்கு பின்னால் ஒரு மர்மம் இருப்பதை அறிகிறார்.

நாயகியை தொடர்ந்து செல்லும் பொழுது, அவளைப் பற்றிய மர்மம் விலகுவதும், அதற்கு பிறகு ஏற்படும் கலாட்டாக்களும், அதிரடிகளும் தான் மீதி மொத்தப்படமே!
****


மலையாளத்தில் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், கதை எழுதும் திறனிலும் சூப்பர் மேன் கதைகளில் உள்ளெ நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே மின்னல் முரளியில் (2021) வெற்றிக்கண்டவர்கள், இப்பொழுது அடுத்தடுத்து சூப்பர் நாயகர்களின் கதையை தொட்டு வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.

நாயகி கதாப்பாத்திரத்தின் வார்ப்பு ஏற்கனவே புகழ்பெற்ற ஒண்டர் வுமன், வேம்பயர் பாத்திரங்களை நினைவூட்டினாலும், இந்திய தன்மையுடன் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.

கதையில் கொஞ்சம் இடையிடையே லேசான தொய்வு இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அதில் இருந்து காப்பாற்றுவதில் துணை நின்றிருக்கின்றன.

கல்யாணி பிரியதர்சன் நாயகியாக பொருந்தியிருக்கிறார். நஸ்லன் பயந்து போன நாயகனாக பொருத்தமாக இருக்கிறார். அதைப் போலவே அவர்களுடைய நண்பர்களும். லியோவில் சிறிது நேரமே வந்தாலும், மாஸ்டர் சாண்டி ஈர்த்து, இந்தப் படத்தில் பொருத்தியிருக்கிறார்கள்.

இனி ஆண்டிற்கு ஒரு படம் இந்த சீரிசில் அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன். படம் முடிந்துவிட்டது என கிளம்பினால், அவெஞ்சர் படம் போல படத்தின் இறுதியில் அடுத்தப் பாகத்திற்கான காட்சிகளை சிலவற்றை தருகிறார்கள்.

ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அவெஞ்சர் சீரிஸ் படங்கள் பிடிக்காதவர்களுக்கு, லோகாவும் பிடிக்காது. ஓணம் திருவிழாவிற்கு வந்த படங்களில் முதல் இடம் என்கிறார்கள்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்ருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: