ஒன்றிய அரசு ஜூலை 2017ல் ”ஒரே தேசம்! ஒரே வரி” என பந்தாவாக முழங்கி ஜி.எஸ்.டியை அவசரகதியில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசிற்கே ஜி.எஸ்.டியில் தெளிவில்லாத பொழுது, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியில் தெளிவில்லை என்பது இயல்பானது. அப்போதே, ஜி.எஸ்.டி வரித் திட்டத்தை அமுல்படுத்தினால், உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வரி இழப்பால் பாதிக்கப்படும் என்றார்கள் வரி ஆலோசகர்கள். அது உண்மையும் கூட!
வரி இழப்பு ஒரு பக்கம் என்றாலும், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வசூலித்த பணத்தை மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துத்தான் தங்கள் பங்குகளை பெறுகிறார்கள். அதை வாங்கித்தான் மாநிலத்தில் அவர்களது திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.
இதில் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சேர்ப்பதில் ஒன்றிய அரசு “நாங்க ஒண்ணும் எதிர்க்கலை. மாநிலங்கள் தங்களுக்கு வரி வருவாய் குறையும் என்று தான் எதிர்க்கின்றன” என நல்லபிள்ளை போல பேசுகிறார்கள்.
ஏனென்றால், ஒன்றிய அரசு பெட்ரொல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டியில் சேர்த்து, ஒன்றிய அரசிற்கான வரியையும், கூடுதலான பிற வரிகளையும் தங்கள் விருப்பத்திற்கு போட்டு வசூல் செய்துகொள்ளும். ஆனால், மாநிலங்கள் ஏற்கனவே தங்களுக்கு வருமானத்திற்கான வழிகள் வேறு இல்லாத பொழுது, பெட்ரோல், டீசல், எரிவாயுவிலும் வருமானத்தை இழந்தால் என்ன செய்வது? ஆகையால் தான் மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.
ரிலையன்ஸ் இந்தியா முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து, பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில் போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் நஷ்டமாகி, எல்லா விற்பனை நிலையங்களையும் சில ஆண்டுகளுக்கு முன்பு இழுத்துமூடினார்கள் என்பது நமக்கு நினைவிருக்கும். அதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியமும், இந்தியன் ஆயிலும் அரசின் மானியத்தால் ரிலையன்சைவிட குறைவான விலைக்கு விற்க முடிந்ததுதான்.
அதானால்தான், இந்த தொழிலில் இருக்கும் பெட்ரோலிய, இந்திய, உலக முதலாளிகள் ஒன்றிய அரசை வேறுவகையில் நெருக்குகிறார்கள். பெட்ரோலிய பொருட்களுக்கு ஒன்றிய அரசு தரும் மானியங்களை முழுவதுமாக வெட்டு என்கிறார்கள். தங்களது கொள்ளைக்கு திறந்துவிட கேட்கிறார்கள். ஒன்றிய அரசும் இந்திய தரகு முதலாளிகள், கார்ப்பரேட்டு முதலாளிகள் சொல்வதைதானே உடனே செயல்படுத்தும். அது போல இந்த பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தை கணிசமாக வெட்டியது.
ஆக, முழுவதுமாக பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தை வெட்டுவது! ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 100ஐ தாண்டுவது எல்லாம், முதலாளிகளுக்கு மகிழ்ச்சி. மக்களுக்கு பெரும்சுமை. ஆனால், பெரும்பான்மை மக்கள் துன்பப்படுவதை பற்றி மோடி கவலைப்படுவாரா என்ன?
பெட்ரொலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வருகிற 11ந்தேதி நாடு தழுவிய அளவில் அடையாள போராட்டம் நடத்துவோம் என காங்கிரசு கட்சி அறிவித்துள்ளது. எதிர்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு, மக்களைத் திரட்டி நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராடுவது தான் மாட்டுத்தோல் கொண்டவர்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? - மூன்றாவது அத்தியாயம்.