> குருத்து: March 2022

March 27, 2022

விலங்கு (2022) ஒரு நல்ல திரில்லர் வெப் சீரிஸ்



திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமம். நாயகன் எஸ்.ஐயாக இருக்கிறார். காட்டின் ஒரு பகுதியில் ஒரு உடம்பும், தலையும் தனித்தனியாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. படையோடு போகிறார்கள். மோசமான நிலையில் இருக்கிறது. ஆகையால், ஆள் யார் என கண்டுபிடிக்க முடியாது திணறுகிறார்கள். கொஞ்சம் அசமந்தமாக இருக்கும் பொழுது, தலை காணாமல் போகிறது. பதட்டமாகிறார்கள். காணாமல் போனது தெரிந்தால், வேலைக்கு ஆபத்து என்பதால், உயரதிகாரியிடம் சில நாட்கள் கெஞ்சி கூத்தாடி வாங்குகிறார்.


இந்த கொலையை துப்பறியும் பொழுது, இன்னொரு கொலையை கண்டுபிடிக்கிறார்கள். காணாமல் போனவர்களை எல்லாம் பட்டியல் எடுக்கிறார்கள். மெல்ல மெல்ல நூல்பிடித்து கொலையாளி யார் என தெரிய வரும் பொழுது அனைவருமே அதிர்ந்து போகிறார்கள்.

கொலையாளியை கண்டுபிடித்தாலும், ஆதாரம் இல்லாமல் தண்டனையை வாங்கித்தர முடியாது என்பதால், ஆதாரங்களை தேடுவது சவாலாக இருக்கிறது. அதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

***

திரைப்படத்தை விட வெப் சீரிஸில் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்கிறது என்பதால், படத்தில் நிறைய விசயங்களை சொல்ல முடிவது நல்ல விசயம். தலை காணாமல் போவதால், அதை மறைப்பதற்கு எஸ்.ஐயாக இருக்கும் நாயகனே துறை சார்ந்த அனைவருக்கும் லஞ்சம் தருகிறார். பின்னால் எல்லோருமே தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

தன் வீட்டில் நகைகள் காணாமல் போய் ஒருவர் புகார் தருகிறார்., அந்த நகைகள் கிடைக்காமல், வேறு நகைகள் கிடைக்கும் பொழுது, தன் பொண்ணுக்கு கல்யாணம் வைத்திருப்பதால், உதவ சொல்லி கேட்கிறார். ஆகையால், மனிதாபிமான அடிப்படையில் அதற்காக மாற்றுகிறார்கள்.

அதே போல, ஒரு வழக்கில் சந்தேகப்படுபவர்களை எல்லாம் அழைத்து வைத்து அடித்து துவைத்துவிடுகிறார்கள். கொடூரமாக இருக்கிறது. விசாரணையை ”நேர்வழியில்” போகும் பொழுது பார்வையாளர்களுக்கு இப்படி அடிப்பது உறுத்துமே தவிர, “தப்பாக” தெரியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் நேர்வழியில் செல்வதில்லை. செல்வாக்கு கொண்டவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக போலீசு அப்பாவிகளை பலி கொடுக்கிறார்கள். அப்படித்தான் ஜெய்பீம் சம்பவமும், சாத்தான்குளம் என நிறைய போலீசு ஸ்டேசன் கொலைகளும் நடந்துகொண்டே இருக்கின்றன. கைது செய்கிற போலீசே நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் இருப்பதால், அடித்து, துவைத்து ”நிரூபிக்க” துடிக்கிறார்கள். அடிப்பதை எந்த நிலையிலும் நியாயப்படுத்தவே கூடாது.

வெப் சீரிசுக்கு சென்சார் இல்லை என நன்றாகவே தெரிகிறது. ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். இப்படியே போனால், சென்சாரை கொண்டுவந்துவிடுவார்கள். மதுரை வட்டார பேச்சில் பேசுகிறார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் என வைத்தார்கள் என தெரியவில்லை. முழுவதும் சீரியசாக கொண்டு செல்லாமல், கொஞ்சம் இயல்பாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

மற்றபடி, நாயகனாக விமல், (பெயரியல் ஜோதிடர் சொல்லியிருப்பார் போல! Vemal என எழுத்துப்போடுகிறார்கள்.) இதுவரை காமெடியில் வந்த பாலசரவணனுக்கு இந்தப் படத்தில் சீரியசான பாத்திரம். அதையும் நன்றாக செய்திருக்கிறார். முனீஸ்காந்த், இனியா என பலரும் வருகிறார்கள். எல்லா கதாப்பாத்திரங்களுமே அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் நிற்பது ஆச்சர்யம். ’ப்ரூஸ்லீ’ என படம் எடுத்து தோல்வியடைந்து, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

நல்ல திரில்லர் வெப் சீரிஸ். Zee 5ல் இருக்கிறது. ஒரு சீரிஸ். 7 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் அரை மணி நேரம் ஓடுகிறது. பாருங்கள்.

March 25, 2022

The Kashmir files (2022) இந்தி



தில்லியில் பேரனுடன் வாழ்கிறார் பண்டிட் தாத்தா. பேரன் ஜேன்யூ கல்லூரியில் படிக்கிறார். தாத்தா உடல்நலமில்லாமல் இறக்கிறார். அவருடைய இறுதி ஆசையான அவருடைய அஸ்தியை காஷ்மீரில் கரைக்க செல்கிறார்.


தாத்தாவினுடைய பால்ய கால நண்பர்கள் காஷ்மீரில் காத்திருக்கிறார்கள். காஷ்மீரில் 1990 நடந்தவற்றை சொல்கிறார்கள். ஆயுதம் தாங்கிய குழுவால் இந்து பண்டிட்டுகள் எவ்வாறு துரத்தப்பட்டனர்? கொல்லப்பட்டனர் என்பதை என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும், வானரப் படைகளும் பயங்கர உற்சாகத்துடன் இருக்கிறார்கள். கலவரம் செய்வதற்கு ஒரு சரக்கு கிடைத்துவிட்டதென குதூகலிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் உண்மை தேவைப்பட்டதேயில்லை. பொய்கள் தான் வதந்திகளை பரப்புவதற்கு, கலவரங்களுக்கு தோதானவை. இந்தப் படம் கொஞ்சூண்டு உண்மை, ஏகப்பட்ட பொய், புளுகுகளுடன், வன்மத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் 100% வரிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் வரிவிலக்கு கொடுக்க நச்சரிக்கிறார்கள். தில்லியில் கெஜ்ரிவால் “வரிவிலக்கு எல்லாம் கொடுக்கமுடியாது. அப்படி பலரும் பார்க்கனும்னா, யூடியூப்பில் படத்தை போடு!” என கடுப்பாய் பேசியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு தருகிறார்கள். கட்டாயமாக படம் பார்க்க உத்தரவிடுகிறார்கள். முசுலீம் வெறுப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள். பார்க்காமல் போய்விடுவார்களோ என பதறி அவர்களே திரையரங்கை வாடகைக்கு வாங்கி, இலவசமாக பார்க்க வைக்கிறார்கள்.

ஆனால், பா.ஜனதா எவ்வளவோ திட்டமிட்டு, பல திரையரங்குகளில் வெளியிட்டாலும், திரையரங்குகள் காத்து வாங்குகின்றன. முந்தாநாள் அம்பத்தூர் முருகன் திரையரங்கில் இணையத்தில் பார்த்தால், மாலை 6.20 வரைக்கும் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. தனியாய் பார்க்க பயமில்லை தான். ஆனால், குறைவான டிக்கெட்கள் என்றால், காட்சியை ரத்துசெய்துவிடுவார்கள். ஆகையால், கோயம்பேடு ரோகிணி போனால், மாலை 7.30 காட்சி. மொத்தமே எட்டு பேர்தான். இதில் இரண்டு காதல் ஜோடிகள் வேறு. எட்டு பேர் என்பதால், ஏசி குளிரைத் தான் தாங்கமுடியவில்லை.

படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை காஷ்மீரத்து சிறுவன் முதல் வயதான ஆள் வரை கொடூர வில்லனாக்கி வைத்திருக்கிறார்கள். அதனாலேயே நம்பகத்தன்மை இல்லாமல் படம் பல் இளித்துவிடுகிறது.

காஷ்மீரத்து மக்கள் எப்பொழுதும் பாகிஸ்தானோடும் இருக்க விரும்பியதில்லை. இந்தியாவோடும் இருக்கவிரும்பியதில்லை. அதனால் தான், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், பல ஆயிரம் மக்களை பலி கொடுத்தும், அவர்கள் தங்கள் இறையாண்மைக்கு தான், தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள்.

1990களில் காஷ்மீரத்து மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் கொள்கை அறிக்கையை படித்துப் பாருங்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தம். ஏகப்பட்ட நிலங்களை பிரித்து தந்தார்கள். அப்பொழுது ஆண்ட இந்திய தலைவர்களுக்கு எல்லாம் வயிறு எரிந்தது. மதசார்பற்ற தன்மையை கடைப்பிடித்தார்கள். பாகிஸ்தானோடு இணைந்தால் அது சாத்தியமே இல்லை என்பதால் தான், இந்தியாவோடு கொஞ்சம் இணக்கமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மக்களை போய், இப்படி அவதூறுகள் செய்கிறார்கள்.

1990களில் பண்டிட்டுகள் துரத்தப்பட்டது, கொல்லப்பட்டது உண்மை என்றால், இந்துக்களின் ”காவலனான” இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பாபர் மஸ்ஜித்தை கையில் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கலவரம் செய்துகொண்டிருந்தார்களே! பண்டிட்டுகளுக்கு ஏன் நியாயம் கேட்கவில்லை?

இவர்களுக்கு காஷ்மீர் மக்கள் மீதும் அக்கறையில்லை. பண்டிட்டுகள் மீதும் அக்கறையில்லை. அவர்களுக்கு ஒரு ‘ இந்து ராஷ்டிர கனவு’ இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்ற என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். அவர்களின் வரலாறு அப்படி! அவர்களின் கனவு நிறைவேறினால், பெரும்பாலான உழைக்கும் மக்களை கனத்த இருட்டிற்குள் தள்ளிவிடும். அவர்களின் கனவை கலைத்துப் போடுவோம்!

March 21, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)


செல்போன் கடையில் விற்பனை பிரதிநிதியாக நாயகன். தன்னுடன் வேலை செய்யும் பெண்ணையே காதலித்து, திருமணமும் நிச்சயித்து இருக்கிறார்கள். நாயகன் அப்பா மீது அன்புடன் இருந்தாலும், கடிந்து, கடிந்து தான் அணுகுகிறார். அப்பா மகனை புரிந்துகொண்டு, நடந்துகொள்கிறார்.


நிறைய நாட்கள் இருக்கின்றன. அதனால் பிறகு கொடுக்கலாம் என்று சொன்ன மகனின் பேச்சை மீறி, நல்லநாள் என்பதால், பத்திரிக்கைகளை கொடுக்க கிளம்புகிறார். அன்று இரவு வீடு திரும்பும் பொழுது, சாலையில் விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார்.

இன்னும் சில நாளில் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் கணிப்பொறி இன்ஜினியர்… எப்பொழுதும் பகட்டாக பேசுகிறார். நடந்தும் கொள்கிறார். அவரோடு முரண்படும் அவருடைய மனைவி.

தமிழ் திரையுலகில் செண்டிமென்ட் இயக்குநர் என புகழ்பெற்ற இயக்குநர் அவர். அப்பா வழியில் இல்லாமல் வெளிநாட்டில் படித்துவிட்டு, புதிய முறை சினிமா எடுக்க முனையும் மகன். அதனால் இரண்டு பேரும் முரண்படுகிறார்கள்.

ஒரு பெரிய ஓய்வு விடுதியில் (Resort) ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் ஒரு இளைஞன். அடுத்தடுத்து மேலே செல்ல முயலும் பொழுது கிடைக்கும் தோல்விகளால் மனம் வெதும்பும் ஒரு பாத்திரம்.

அந்த சாலை விபத்தில் இவர்கள் அனைவரும் ஏதோ வகையில் சம்பந்தப்படுகிறார்கள். அந்த சாவு அவர்களின் வாழ்வினை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அழுத்தமாக பதிந்திருக்கிறார்கள்.

***

செய்தித்தாள்களில் தினசரி விபத்து செய்திகளைப் பார்த்து எளிதாய் கடந்துபோகிறோம். சாகின்ற ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாலும் இப்படி நிறைய கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு கதையை எடுத்துக்கொண்டு மனித உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு இயக்குநரைப் பாராட்டுவோம்.

ஒரு விபத்தோ, ஒரு உலுக்கும் சம்பவமோ சம்பந்தப்பட்டவர்களிடம் அழுத்தமாக சில உணர்வுகளை தூண்டிவிடும். படத்தில் காண்பிப்பது போல அது ஆழப் பாதித்து, யூடர்ன் எல்லாம் மனிதர்கள் இயல்பாக எடுத்துவிடுவதில்லை. (விதி விலக்குகள் இருக்கலாம்) சில தீர்மானங்களை எடுப்பார்கள். மெல்ல மெல்ல மங்கும். சில நாட்களிலேயே தன் இயல்புக்கு மாறிவிடுவார்கள். இவ்வளவு காலம் மனிதர்களை உற்றுப் பார்த்ததில் நான் கற்றுக்கொண்ட விசயங்களில் இதுவும் ஒன்று.

அதே போல, ஒரு வேலையில் உள்ள அலுப்பு, சலிப்பு என்பதை கோட்பாட்டு அளவில் சொன்னால் “அந்நியமாதல்” எனலாம். பெரும்பாலான மனிதர்களிடம் சில சமயங்களிலோ அல்லது தொடர்ச்சியாகவோ இது வெளிப்படும். அவர்களது உழைப்புக்கு கிடைக்கும் தொகை என்பது, உயிர் வாழ்வதற்கு தான் தரப்படுகிறது. ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியம் கிடைப்பதில்லை. அதைப் பெற்றுக்கொண்டு, வேலையை எல்லாம் ரசித்து செய்துவிட முடியாது. ஆனால், உழைப்பின் பலனோ அல்லது அதைவிட பன்மடங்கோ திரும்ப கிடைப்பவர்களான ஒரு சிறு முதலாளியோ, பெரு முதலாளியோ எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை. முதலில் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

படத்தில் இப்படி இன்னும் நிறைய பேசலாம். நீண்டு போவதால், இத்துடன் நிறுத்திக்கொள்வோம். மற்றபடி, அப்பாவாக வரும் நாசர், நாயகன் அசோக் செல்வன், புதிய முகமான நாயகி, ஜெய்பீம் மணிகண்டன் (வசனமும் இவர் தான்), ரித்விகா என நிறைய பழகிய முகங்கள். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படம் Zee5ல் இருக்கிறது. பாருங்கள்.

March 18, 2022

Turning Red (2022) Pixer Animation Movie



கனடா. 13 வயது சிறுமி தான் கதையின் நாயகி. அவளுடைய குடும்பம் தங்களுடைய பரம்பரை பழங்கால கோவில் ஒன்றை பராமரிக்கிறார்கள். சுற்றுலாவாசிகள் வருகைதருகிறார்கள். அவளின் அம்மா அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறாள்.

அவள் பள்ளிச் சென்றுவிட்டால், தனது சக மாணவிகளுடன் பாடலும், ஆட்டமுமாய் ஜாலியாய் இருக்கிற ஆள். ஒருநாள் இரவு திகில் கனவு அவளை அச்சமூட்டுகிறது. காலையில் எழும் பொழுது அவள் சிவப்பு நிற பாண்டா கரடியாய் மாறிவிடுகிறாள். பயந்துவிடுகிறாள். பிறகு வழக்கமான ஆளாகிவிடுகிறாள்.

அவளுக்கு ஏதாவது ஒரு உணர்ச்சி அதிகமானாலே, தான் பாண்டா கரடியாய் மாறிவிடுவதை கண்டுபிடிக்கிறாள். அவள் அம்மா, இது நம்முடைய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு நடப்பது வழக்கம். அதற்கு காரணம் முன்கதையும் சொல்கிறார். இதற்கு ஒரு சடங்கு செய்தால் போதும்! கட்டுப்படுத்திவிடலாம் என ஆறுதல் சொல்கிறாள்.

அவளுக்கும் சக தோழிகளுக்கும் பிடித்த பதின் பருவத்து இளைஞர்களின் இசைக்குழு அந்த நகரத்திற்கு வருகை தருவதாக அறிவிப்பு வருகிறது. அந்த நாளை அவளும் அவளது தோழிகளும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நுழைவு சீட்டு விலையோ ஒரு ஆளுக்கு 200 டாலர் கேட்கிறார்கள். வீட்டில் கேட்கமுடியாத சூழல். நிகழ்ச்சியும், சடங்கு செய்கிற முக்கியமான நாளும் ஒரே நாளில் வருகிறது.

என்ன நடந்தது என்பதை ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள்.
****

கொஞ்சம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், சந்தோஷ் சுப்பிரமணியன் கதை தான். வீட்டில் அடக்க ஒடக்கமான ஆள். வெளியே ஜாலியான ஆள். உண்மை தெரியும் பொழுது ஏக கலாட்டா. அவ்வளவு தான் இந்தக் கதையும்.

பதிமூன்று வயது பெண்ணுக்குரிய சிந்தனை, அவளுக்குரிய உடல், உள சிக்கல்கள் என்பதையும் படம் பேசியிருக்கிறது. பீரியட் என்பதை தான் சிவப்பு வண்ண கரடியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

மற்றபடி அந்த சிவப்பு பாண்டா கரடி வருமிடங்கள் எல்லாம் ஜாலி தான். Inside out போன்ற அனிமேசன் படங்களில் வேலை செய்த பெண் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய ஒரு குட்டி அனிமேசன் படம் ஆஸ்காரை வென்றிருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளிவந்திருக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. குழந்தைகளோடு பாருங்கள்.

Lord of War (2005) – போரின் கடவுள்!






 ”நான் அமெரிக்க எதிரிகளிடம் ஒன்றும் ஆயுதம் விற்கவில்லை. அமெரிக்கா உலகம் முழுவதும் பொம்மை அரசுகளாக இருக்கும் அமெரிக்க கூட்டாளிகளான அரசுகளிடம் தான் ஆயுதங்கள் விற்கிறேன்."

****

1980களில் உக்ரைனிலிருந்து அகதியாக இடம் பெயர்ந்து தாய், தந்தை, தம்பியுடன் அமெரிக்காவில் யூரி வாழ்கிறான். அவனுக்கு ”வழக்கமான” வாழ்க்கையை வாழ விருப்பமில்லை. ஒரு சம்பவத்திற்கு பிறகு உலகில் உணவு, தண்ணீர் போல ஆயுதமும் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது என புரிந்துகொள்கிறான். ஆயுதம் விற்க துவங்குகிறான். மெல்ல மெல்ல ஆயுத வியாபாரியாக வளர்கிறான். நம்பிக்கையான கையாள் வேண்டும் என்பதற்காக தன் தம்பியையே துணைக்கு வைத்துக்கொள்கிறான்.

1982ல் லெபனான் போரின் பொழுது, இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் ஆயுதங்கள் விற்கிறான். போரில் இரு தரப்பிலும் இவன் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவன் மீது சந்தேகம் வந்து அமெரிக்க அதிகாரி இவனை பின்தொடர்கிறான். கொலம்பியாவில் மாபியா ஒருவனுக்கு ஆயுதங்கள் விற்கும் பொழுது, அதற்கு பதிலாக கொக்கையின் தருகிறான். அடுத்து வந்தநாட்களில் தம்பி கொக்கையினுக்கு அடிமையாகிவிடுகிறான். அவனை அதிலிருந்து மீட்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனியாளாகவே தொழிலில் தொடர்கிறான்.

தனக்கு பிடித்த ஒரு விளம்பர மாடல் நடிகையை ஒரு புகைப்பட ஷூட்டிங் என பொய்யாய் வரவழைத்து, அவளிடம் பழகி, அவளேயே திருமணம் செய்துகொள்கிறான்.  கப்பல் வியாபாரி என சொல்லிக்கொள்கிறான். தான் செய்யும் சட்ட விரோத ஆயுத தொழிலை அவளிடமிருந்து மறைக்கிறான். இப்படியும் சொல்லலாம். அதற்கு மேல் அவள் ஆராய விரும்பவில்லை.

சோவியத் கூட்டமைப்பு சிதைந்த செய்தியைப் பார்த்து யூரி குதூகலிக்கிறான். ஊர் ரெண்டுபட்டால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் தானே! அங்கே உடனடியாக போய், ரசிய ஆயுதங்களை உக்ரைன் இராணுவ அதிகாரியாக இருக்கும் தன் மாமா மூலம் வாங்கி விற்கிறான். பிறகு தனது ஆயுத தொழிலை ஆப்பிரிக்காவிற்கு விரிவு செய்கிறான். லைபீரியா சர்வாதிகாரிக்கு ஆயுதங்கள் விற்கிறான். பதிலுக்கு வைரங்களாக வாங்கிகொள்கிறான்.

இதற்கிடையில் அமெரிக்க அதிகாரி யூரி செய்யும் தொழிலை அவனின் மனைவியிடம் சொல்லிவிடுகிறான்.  அவள் கடுமையாக எதிர்க்கிறாள்.  அவளுக்காக தன் தொழிலை சில மாதங்கள் நிறுத்திவைக்கிறான். லைப்பீரியா சர்வாதிகாரி இவனிடம் மீண்டும் ஆயுதங்கள் கேட்கிறான். எளிதாய் கோடிகளில் சம்பாதித்த ருசி விட்டுவிடுமா? மீண்டும் துவங்குகிறான். இந்தமுறை போதையின் பிடியிலிருந்து மீண்டு வாழும் தம்பியை மீண்டும் அழைக்கிறான். முதலில் மறுப்பவன் பிறகு வந்துவிடுகிறான்.

இந்தமுறை மேற்கு ஆப்பிரிக்காவில் சியாராவிற்கு (Sierra Leone) போனால், அங்கு மக்கள் குருவி போல சுடப்படுவதை தம்பி பார்த்து அதிர்ந்து போகிறான். சிறுவர்கள் கையில் எல்லாம் ஆயுதங்கள் இருக்கின்றன.  ”கொலைகாரர்களுக்கு ஆயுதம் விற்காதே” என அண்ணனிடம் சண்டை போடுகிறான். யூரி இத்தனை வருடங்களில் எவன் செத்தா எனக்கு என்ன?  ஆயுதம் விற்கணும்! நாலு காசு பார்க்கணும்னு ஒரு தேர்ந்த வியாபாரியாய் உருமாறிவிட்டதை தம்பியால் உணரமுடியவில்லை.  மனம் கசந்து ஆயுதலாரி ஒன்றை வெடிக்க வைக்கிறான்.  தம்பியை சுட்டுக்கொல்கிறார்கள்.

தம்பியின் உடலை வாங்கிக்கொண்டு அமெரிக்கா திரும்புகிறான்.  மனைவி அவன் செய்கிற கடத்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, பிள்ளையோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.  பெற்றோர்கள் யூரியை வெறுக்கிறார்கள்.

வெற்றிகரமாய் ஆதாரத்தோடு யூரியை கைது செய்துவிட்டோம் என்ற பெருமிதத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிகாரி.  அவரிடம் யூரி வெளிப்படையாக பேசுகிறான். ”நான் அமெரிக்க எதிரிகளிடம் ஒன்றும் ஆயுதம் விற்கவில்லை. அமெரிக்கா உலகம் முழுவதும் பொம்மை அரசுகளாக இருக்கும் அமெரிக்க கூட்டாளிகளான அரசுகளிடம் தான் ஆயுதங்கள் விற்கிறேன். அமெரிக்க அரசு நேரடியாக ஆயுதங்களை கொடுக்க முடியாது. என்னை போன்றவர்கள் தான் அமெரிக்காவிற்கு மறைமுகமாக உதவுகிறோம்.  இந்த அரசுக்கு மிகவும் தேவையானவன். பார்த்துக்கொண்டெ இரு! என்னை விடுவித்துவிடும்!” என தெளிவாக பேசுகிறான்.  அவன் சொன்னது போலவே ஒரு உயரதிகாரி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அவனை விடுவிக்கிறான்.

யூரி தனது ஆயுத தொழிலில் “உற்சாகமாக” செயல்பட துவங்குகிறான்.  ஏனென்றால், உலகின் ஐந்து மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்கள் தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரசியா, சீனா) என்ற செய்தியை சொல்வதோடு படம் நிறைவடைகிறது.

படம் கற்பனைக் கதை இல்லை.  ஆயுத வியாபாரிகளின் பின்னணியை ஆய்ந்து எடுக்கப்பட்ட படம் தான் இது! ஆயுத விற்பனையில் ஏகாதிபத்தியங்களின் பங்கை பளிச்சென சொன்ன படம் தான் இது!  உலகில் ஆயுத சப்ளையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு 54%ல் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா 13%.  இங்கிலாந்து 7.1% மூன்றாமிடம். ரசியா, பிரான்ஸ் நான்காம், ஐந்தாமிடம். 2021 வரைக்கும் நிலவரம் இது தான்! உலகம் அமைதியாய் இருந்தால், அமெரிக்க செனட்டில் உள்ள ஆயுத வியாபாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.  போர்கள் வெடித்தால் படத்தில் யூரியைப் போல குதூகலிப்பார்கள்.

20ம் நூற்றாண்டின் மத்தியில் காலனி ஆட்சிகளுக்கு எதிராக போராடிய பொழுது, இனி நேரடியாக காலனி ஆட்சி சாத்தியம் இல்லை என்பதை ஏகாதிபத்தியங்கள் புரிந்துகொண்டன. மறைமுகமாக தான் ஆட்சி செய்யமுடியும் என்பதை முடிவு செய்தன.  உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மூலம், காட், டங்கல் திட்டம் மூலம் உலகை மீண்டும் பங்கு போட கிளம்பின. மேல்நிலை வல்லரசு நாடுகளும், மேல்நிலை வல்லரசுகளாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளும் தங்களுக்குள்  நாடு பிடிக்கும் போட்டியை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவாக தான்  கடந்த பல நாடுகளில் போர்கள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். தங்களுக்கு எதிரான ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள். தங்களுக்கு சாதகமான பொம்மை அரசுகளை நியமித்துக்கொள்கிறார்கள்.  இதன் தொடர்ச்சியில் தான் இன்று நடந்துவரும் ரசியா – உக்ரைன் போர் ரத்தச் சாட்சியாக இருக்கிறது. எவ்வளவு உயிர்கள்? நாடுவிட்டு நாடு அகதிகளாக பல லட்சம் பேர் இடம் பெயர்கிறார்கள்.

இவர்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவையும் ஏகாதிபத்தியத்தின் காலடியில் இணைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான், தன் குடிமக்களுக்கு 70 ஆண்டுகளாகியும் அடிப்படை கல்வியான எட்டாவது வரைக்குமான கல்வி கொடுக்கமுடியவில்லை. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அரசு அறிவிக்கிறது.  இந்த பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி மட்டுமே கல்விக்கு ஒதுக்குகிறது. கொரானா அலை அலையாய் மக்களை தாக்கினால் கூட சுகாதாரத்திற்கு 86000 கோடி தான் ஒதுக்குகிறது. ஆனால் இராணுவத்திற்கு 5 லட்சம் கோடிக்கும் மேல் தாராளமாய் ஒதுக்குகிறது.

மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல, ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்! ஏகாதிபத்தியதற்கு பணிந்து சேவை செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து போர் தொடுத்தாலோ போதும்! போரையும் ஒழித்துவிடலாம்.  தங்களுக்கான விடியலையும் சாதித்துவிடலாம்.







March 13, 2022

விஜி அம்மாவிற்கு அஞ்சலி!



கடந்த வாரம் மதுரையிலிருந்து தோழர் இராஜேந்திரன் தொலைபேசியில் அழைத்தார். திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியை நடத்திவரும் தோழர் தங்கராசு அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி உடல்நலமில்லாமல் கடந்த பொங்கலை ஒட்டி, இறந்த தகவலை சொன்ன பொழுது, அதிர்ந்து போனேன். அன்பானவர்கள், நம்முடைய பிரியத்துக்குரியமானவர்கள் எல்லோரும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் என அப்பாவியாய் நம்புகிறோம். ஆனால், காலம் கருணையற்றதாக இருக்கிறது. அப்படி அனுமதிப்பதில்லை.


திருப்பூரில் இருந்த அந்த ஒரு ஆண்டு நினைவுகள் மெலெழும்புகின்றன. ஆண்டுகள் பல கடந்ததால். திருப்பூர் நகரத்தின் நினைவுகள் என் நினைவில் இருந்து, மெல்ல மெல்ல மங்கிவருகின்றன. ஆனால், தாய்த்தமிழ் பள்ளியின் நினைவுகளும், அங்கு பழகிய மனிதர்கள் மட்டும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறார்கள். விஜியம்மா இன்னும் பசுமையாக இருக்கிறார்.

1998ல் இளநிலை வணிகவியல் படித்துவிட்டு, மதுரையில் ஏதும் பொருத்தமான வேலை அமையாமல் வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வெளியூர் போகலாமா? தலைநகருக்கு போகலாமா? என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, தோழர் இராஜேந்திரன் திருப்பூரில் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் தோழர் தங்கராசு இருக்கிறார் என நம்பிக்கை தந்தார்.

தமிழகம் தழுவிய அளவில் ஆங்காங்கே தமிழ் மீதான பற்றால், தாய்த்தமிழ் பள்ளிகள் துவங்கப்பட்டு கொண்டிருந்த நேரம். திருப்பூரில் சிறப்பாக நடத்திவருகிறார்கள் என தோழர்கள் வழியாக கேள்விப்பட்டிருந்தேன். சுபயோகம், சுப தினம் என்றெல்லாம் எதுவும் பார்க்காமல், ஒரு விடிகாலையில் அங்கு போய் சேர்ந்தேன்.

தோழர் தங்கராசு, விஜி அம்மா, ஜீவா, தமிழினி என அளவான, அழகான குடும்பம். அந்த குடும்பத்தின் உறுப்பினராக என்னையும் ஒருவனாக எளிதில் ஏற்றுக்கொண்டார்கள். தோழர் தங்கராசு தொழிலாளியாக இருந்து, சிபிஐ அமைப்பில் தொழிற்சங்க செயற்பாட்டாளராக இருந்து தான் பிறகு தான் பள்ளி ஆரம்பித்தார் என கேள்விப்பட்டிருந்தேன்.

அந்த ஓராண்டில் அருகில் இருந்து பள்ளியை பார்த்ததில், தாய்த்தமிழ் பள்ளியை ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் மீது அளவில்லா பற்றுக்கொண்டவர்கள், தமிழ் பற்றாளர்கள் என பலரும் அந்த பள்ளியை ஊர் கூடி தேர் இழுப்பது போல இழுத்து சென்றார்கள் என்றால், தங்கராசு குடும்பம் அதன் அச்சாணியாய் இருந்தார்கள் என்பேன். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை பள்ளியை நடத்துவதிலும், அதன் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதிலும், உழைப்பிலும் முதன்மையானவராய் இருந்தாலும், எல்லா ஆசிரியர்களும் சம்பளம் பெற்றுக்கொண்ட பிறகு தான் ஊதியமாய் பெற்றதை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தினார். அதே போல தான் விஜி அம்மாவும்! வீட்டில் தேவையான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு, பள்ளியில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணியையும் செய்து வந்தார்.

அந்த வீட்டில், அவர்களோடு வாழ்ந்ததால், உணவு, மருத்துவம் என அடிப்படைத் தேவைகளுக்கு கூட அந்த குடும்பத்தில் பற்றாக்குறை இருப்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. சில நூறு பிள்ளைகள் படிக்கும் பள்ளியை இயக்குவது என்பது எளிதான பணியல்ல! ஆனால், எடுத்துக்கொண்ட பணி பெரிது என்பதால், வறுமையை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தமிழினி சிறியவள். அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஜீவா கல்லூரியில் நுழையும் பதின்ம வயதில் இருந்தான். ஒரு குடும்பத்து தலைவன் தான் கொண்ட கொள்கைக்காக கடினமான பாதையை தேர்ந்தெடுக்கலாம். குடும்பத்து உறுப்பினர்கள் அந்த வழியை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அந்த மனிதன் தன் குடும்பத்தையும் அதன் வழியில் பண்படுத்தியிருக்கிறான் அல்லது அந்த குடும்ப உறுப்பினர்கள் பண்பட்டு இருக்கிறார்கள் என்று தான் புரிந்துகொள்கிறேன்.

தங்கராசு தோழர் ஆழ்கடலை போல அமைதியானவர். எல்லா துன்பங்களையும், நெருக்கடிகளையும் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக்கொள்வார். தேவைக்கு மட்டும் பேசுவார். விஜி அம்மா அவருக்கு நேர் எதிர். கலகலப்பானவர். மதுரையில் தூக்கத்திலிருந்து எழுப்புவதை “உசுப்புவது” என்போம். அதை ஒருமுறை நான் சொன்னதும், விஜி அம்மா விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளந்தியான மனுசிகளால் மட்டுமே அப்படி சிரிக்கமுடியும். திருப்பூர் வட்டார தமிழில், என் பெயரை வித்தியாசமாக அழைப்பது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

நான் அங்கிருந்த காலத்தில், பள்ளி கூரை கட்டிடமாக இருந்தது. அதன் பிறகு, கட்டிடத்திற்கு மாறியது. இப்பொழுதும் தோழர் தங்கராசு குடும்பம் பள்ளிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். அப்பொழுது இருந்த நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுடன் தான் பள்ளி இப்பொழுதும் பயணிக்கிறது என்பதை தோழர்கள் வழியாக கேள்விப்படுகிறேன். இவை எல்லாம் தங்கராசு தோழருக்கு இத்தனை ஆண்டுகளாய் நீடிப்பதால், வழக்கமான ஒன்றாக பழகி போயிருக்கலாம். ஆனால், விஜி அம்மா இவ்வளவு காலமும் அவருக்கு உறுதுணையாக இருந்துவந்திருக்கிறார். இப்பொழுது விஜி அம்மா இல்லை எனும் பொழுது, தோழர் தங்கராசு தோழருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்பது திகைப்பாக இருக்கிறது.,

மாயக்கதைகளில் வருவது போல ஒரு பறவைக்குள் உயிரை ஒளித்து வைத்திருப்பதாக சொல்வார்கள்! அது போல பள்ளிக் கட்டிடத்தின் உறுதியில், பிள்ளைகளின் தமிழில், வளர்ச்சியில் விஜி அம்மாவின் உயிரும் கலந்திருக்கிறது. இன்றைக்கும் ஒரு பட்டாம்பூச்சியை போல அந்த பள்ளியைத் தான் சுற்றி வந்துகொண்டிருப்பார். நம்மை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.

அவரை இழந்து வாடும் தோழர் தங்கராசு குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

"சாக்கு போக்குகளை விட்டொழியுங்கள்" - பிரையன் டிரேசி


”மனிதனின் தோள்களில் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய் அமைதி, அன்பு, நம்பிக்கை, உண்மை, இரக்கம், விசுவாசம் கொண்டது. இன்னொரு ஓநாய் பொறாமை, வருத்தம், சுயநலம், லட்சியம், பொய்கள் கொண்டது.


இரண்டுக்கும் எப்பொழுதும் சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இறுதியில் எந்த ஓநாய் வெற்றி பெறும்?

எந்த ஓநாய்க்கு உணவு அளிக்கிறானோ அந்த ஓநாய் வெல்லும்!”

****

”சுய ஒழுங்கு” தான் சிந்திக்கவைக்கும். முறையாக திட்டமிட வைக்கும். சுய ஒழுங்கு தான் தடைகள் பல வந்தாலும் செயல்படுத்த வைக்கும். சுய ஒழுங்கு தான் இலக்கை எட்டவைக்கும் என ’சுய ஒழுங்கும் தனிப்பட்ட வெற்றியும்’, ’சுயதொழிலும் வெற்றியும்’, ’சுயஒழுங்கும் சிறப்பான வாழ்க்கையும்’ என மூன்று பெரும் தலைப்புகள் தந்து, பொறுப்பாய் உட்தலைப்புகளில் பிரித்து, பலப்பல உதாரணங்கள் தந்து எளிமையாய் விளக்கியுள்ளார்.

ஒரு உதாரணம். துறை தொடர்பான விசயங்களை தினம் அறுபது நிமிடங்கள் படியுங்கள். படிக்க முடியவில்லையா கேளுங்கள். கேட்க முடியவில்லையா பாருங்கள். ஒரு துறையில் மேதைமை அடைய ஒரு மனிதன் ஏழு ஆண்டுகள் உழைக்கவேண்டும் அல்லது பத்தாயிரம் மணி நேரம் செலவழிக்கவேண்டும்.

எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டீர்கள்? சுய ஒழுங்கு என்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? வாழ்வில் பல சமயங்களில் நிறைய தீர்மானங்களை யார் தலையின் மீதாவது சபதம் செய்வோம். சில நாட்கள் நினைவில் இருக்கும். மெல்ல மெல்ல மங்கலாகும். பிறகு காற்றில் காணாமல் போய்விடும் என சொன்னால், பரவாயில்லை. இந்தப் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, உங்கள் போக்கில் போய்விடுங்கள் என்கிறார்.

பிரையன் டிரேசி உலகமெல்லாம் சுற்றியுள்ளார். நிறைய மக்களுடன் உரையாடியுள்ளார். நிறைய எழுதியுள்ளார். பல மொழிக்காரர்களையும் சென்றடைந்துள்ளார். நாகலெட்சுமி சண்முகம் இவருடைய எழுத்துக்களை அழகு தமிழில் தொடர்ந்து தந்து வருகிறார்.

படிக்க முடிந்தவர்கள் புத்தகம் வாங்கிப் படியுங்கள். ஒரு பெண்மணி பொறுப்பாய் வாசித்து, யூடியூப்பில் காணொலியாக தந்துள்ளார். கேளுங்கள்.

ஆசிரியர் : பிரையன் டிரேசி

பக் : 355

கீதா கோவிந்தம் (2018) தமிழ்


நாயகன் ஒரு கல்லூரி விரிவுரையாளர். தனக்கு வரக்கூடிய மனைவியைப் பற்றி எப்பொழுதும் கற்பனையோடும், கனவுகளோடும் இருக்கிறார். தான் கனவில் சந்தித்த பெண்ணை கோயிலில் பார்த்து காதல்வயப்படுகிறார். அடுத்து பேருந்தில் பக்கத்து இருக்கையில் பார்க்கிறார். தொலைபேசியில் குடிகார நண்பன் தூங்குகிற அவளுக்கு ”முத்தம்கொடுத்துவிடு! என ஏத்திவிடுகிறான். செல்பி எடுக்கலாம் என முயலும் பொழுது, பேருந்து திடீரென குலுங்கியதில் முத்தம் கொடுத்துவிடுகிறான். களேபரமாகிவிடுகிறது. அங்கிருந்து தப்பித்து ஒடிவிடுகிறான்.

நாயகியின் குடும்பமே அவன் கையில் கிடைத்தால் வெட்டனும் என கொலைவெறியோடு இருக்கிறது. தன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையின் தங்கை என அவள் வந்து முன்னாடி நிற்கும் பொழுது, நாயகன் வெலவெலத்துப் போகிறான். சில பல கலாட்டாகளுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை காதலோடும், கலகலப்போடும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

****
தான் செய்த ஒரு தவறால், தான் விரும்பிய பெண்ணிடம் இடைவேளை வரை சிக்கிக்கொண்டு கதறுவதும், பிறகு உண்மை நிலை தெரிந்த பிறகு அதுவே காதலாக மாறுவதும் என்பதை திரைக்கதை மூலம் அருமையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஒரு தமிழ்ப்படம் போல எடுத்திருக்கிறார்கள். அவனை வெட்டனும், கொல்லனும் என நாயகியின் குடும்பத்து ஆட்கள் மாறி மாறி பேசும் பேச்சில் மட்டும் ஆந்திராவின் காரம் தெரிகிறது.

”அர்ஜூன் ரெட்டி”யில் வந்த விஜய் தேவரகொண்டாவா இவ்வளவு பாந்தமாய் என ஆச்சர்யப்பட வைக்கிறார். கோபத்தில் தெறித்து, காதலில் உருகி என ராஷ்மிகா இருவருமே அருமை. மற்றபடி, வெளிநாட்டு மாப்பிள்ளையாய் நல்ல பண்புகளோடு வருபவரை காமெடியாக்கியிருப்பது படத்திற்கு பயன்பட்டாலும், நெருடலாய் இருந்தது.

தெலுங்கை விட, மெனக்கெட்டு தமிழில் நன்றாகவே டப் செய்திருக்கிறார்கள். யூடியூப்பில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

March 10, 2022

பழி!


நாயகி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் அந்த ஆள் வேலை செய்கிறான். நாயகி தன் மகனுடன் தனித்து வாழ்ந்து வருவதை தெரிந்துகொண்டு, “என்னை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளாலாம்” என சொல்ல. நாயகி செருப்பால் வெளுத்துவிடுகிறார். விசயம் பெரிசாகி, வேலை போய்விடக்கூடாதுன்னு என சுதாரித்து, அடுத்தநாளே அழுது, சீனைப் போட்டு மன்னிப்பும் கேட்டுவிடுகிறான்.


அதற்கு பிறகான நாட்களில், நாயகிடம் ஒரு ”சகோதரனைப்” போல பேசிப்பழகி வருகிறான். ஆனால், சக ஊழியர்களிடம் நான் நாயகியை கரெக்ட் பண்ணிட்டேன் என புளுகிவருகிறான். சந்தேகமாய் கேட்பவர்களிடம் ”இன்று மாலை 5 மணிக்கு நான் போன் செய்வேன். அவள் என்னைத் தேடி இந்த லாட்ஜ்க்கு வருவாள். நீங்க வந்தா பார்க்கலாம்!” என்கிறான். சொன்னது போல இவளும் அவசரம் அவசரமாய் கிளம்பி செல்கிறாள்.

பையனை யாரோ கடத்தியதாகவும், தான் அவனை மீட்டு வைத்திருப்பதாகவும், உடனே இங்கே வாருங்கள் என சொல்லியிருக்கிறான். நாயகியும் அடித்து பிடித்து இங்கே வந்துவிட்டாள். அவள் லாட்ஜின் அறைக்குள் உள்ளே நுழைந்ததும், கதவை சாத்துகிறான்.

அவன் பொய் சொல்லியிருக்கிறான் என தெரிந்ததும், அவள் பாட்டிலை உடைத்து ”பகக்த்துல வந்தா உன்னை கொன்றுருவேன்” என மிரட்டுகிறாள். உனக்கு பத்துநிமிசம் தர்றேன். அதுக்குள்ளே யோசித்து சொல்! என்கிறான். பத்துநிமிடம் கழித்து, கொஞ்சம் தலையை கலைத்துக்கொண்டு, சட்டையின் மேல்பட்டனை கழற்றிவிட்டுகொண்டு, ”வெளியே நம்ம சக ஊழியர்கள் வெளியே நிற்கிறார்கள். இப்ப நான் வெளியே போகப்போறேன். உள்ளே எதுவும் நடக்கலைன்னு உனக்கும் எனக்கும் தான் தெரியும். அவங்க கற்பனை பண்ணிக்குவாங்க!” என சொல்லிவிட்டு வெளியே போய்விடுகிறான். அடுத்தநாள் அலுவலகமே அவளைப் பற்றி பரபரப்பாய் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தப் பிரச்சனையை நாயகியை சரி செய்துவிடுவதாய் காண்பித்திருக்கலாம். கதைக்கு முக்கிய ட்விஸ்ட் தேவை என்பதால், மேலாளராய் இருக்கும் நாயகனே அவனை வெளுத்து உண்மையை சொல்லுவதாய் முடித்திருப்பார்கள்.

இதோ இன்னுமொரு தற்"கொலை"!


இன்னும் எத்தனை தற்கொலைகள் நடந்தால், இந்த ரம்மி விளையாட்டை தடை செய்வார்களோ? ரம்மி விளையாட்டை நடத்தும் ஒரு ஆப் தனக்கான‌ விளம்பரத்தில் தன்னிடம் 7 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக பெருமை பீற்றிக்கொள்கிறது. இன்னும் எத்தனை குடும்பங்கள் தெருவுக்கு வரப்போகிறதோ?

கோடிகளில் சம்பாதித்த பெரிய நடிகர், நடிகைகள் கூட ரம்மி விளையாட்டை பரிந்துரைக்கிறார்கள். "பொறுப்போடு விளையாடுங்கள்" என்ற எச்சரிக்கை வேறு! சமூக அக்கறையற்ற பொறுக்கிகள்!

March 9, 2022

மெளன கீதங்கள் (1981)


இன்று பொழுது போகாமல் யூடியூப்பில் சும்மா தேடிக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் நடித்தும், இயக்கிய ”மெளன கீதங்கள்” கண்ணில்பட்டது. பார்த்தேன்.


நாயகன் எம்.ஏ, எம்.காம் பட்டதாரி. வேலைக்காக நேர்முகத்தேர்வு போகிறார். அங்கு வந்த நாயகி, அவரை ஏமாற்றி அங்கிருந்து அனுப்பி, எழுத்தர் (Clerk) வேலையை கைப்பற்றுகிறார். பிறகு அந்த நிறுவனத்திலேயே உதவி மேலாளர் பதவியில் வந்து அமர்கிறார். கலாட்டா செய்து அந்த நாயகியை திருமணம் செய்கிறார்.

அவர் நாயகன் மீது பொசசிவ்வாக இருக்கிறார். இதில் நாயகியின் தோழிக்கு உதவப்போய், அங்கு தவறிழைக்கிறார். அதை மறைக்காமல் தன் மனைவியிடமே வந்து சொல்லிவிடுகிறார். விவாகரத்து வரை பிரச்சனை முற்றிவிடுகிறது.

மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பிறகு, இருவரும் ஒரே அலுவலகத்தில் எதிரெதிர் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். பிறகு அவர்கள் இணைந்தார்களா என்பதை உணர்வுபூர்வமாகவும், கலகலப்பாகவும் கொண்டு சென்றிருக்கிறார்.
*****

கணவன், மனைவி இடையே ஒளிவு மறைவு இருக்க கூடாது என்று பொதுப்படையாக சொல்லிக்கொள்கிறார்கள். செய்த தவறை வெளிப்படையாக சொன்னால் விவாகரத்து என்றால், இழைத்த தவறை சொல்வது நல்லதா? மறைப்பது நல்லதா? என்ற கேள்வி வந்துவிடுகிறது. படம் வந்து 40 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, நம் சமூக சூழலில் ஆண்/பெண் என இருவருக்குமே எல்லா உண்மைகளையும் சொல்கிற அளவுக்கு பக்குவம், அதை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு பக்குவம் இல்லை என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தின் கதை கூட எழுத்தாளர் ஜெயகாந்தனின் ”உண்மை சுடும்” என்ற சிறுகதையில் இருந்து தான் பாக்யராஜ் திரைக்கதை ஆக்கியிருக்கிறார். படத்தின் கதையை சுடுகிறார்கள். காட்சிகளை சுடுகிறார்கள் என இப்பொழுதெல்லாம் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அப்பொழுது இந்தப் படம் எடுத்துக்கொண்டிருக்கும் பொழுதே குமுதத்தில் தொடராக எழுதியிருக்கிறார். இதே போல ”பவுனு, பவுனு தான்” கதையையும் பாக்யாவில் எழுதியதாக படித்திருக்கிறேன். ஆச்சர்யம். படத்தின் இசையமைப்பாளர் கங்கை அமரன். எழுத்துப் போடும் பொழுது, இளையராஜாவிடமிருந்து சுட்டு போடுவதாக கார்ட்டூனாக காண்பித்திருக்கிறார்கள்.

படத்தில் எழுத்து போடும் பொழுது, ”பாக்யராஜ் – சரிதா” என எழுத்துப் போடுகிறார். நாயகிகளை மதித்து இருக்கிறார் என தெரிகிறது. படத்தில் குறைவான கதாப்பாத்திரங்கள் தான். எல்லோருமே சிறப்பு. சரிதாவின் கதாப்பாத்திரத்தில் Consistency இருக்கிறது. ஆனால், பாக்யராஜின் பாத்திரத்தில் மங்குனியா? தெளிவான ஆளா? என கொஞ்சம் குழப்பம் இருக்கிறது.

படம் பெரிய வெற்றி பெற்று, பாக்யராஜ் படங்களுக்கு உள்ள வழக்கம் போல இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரு சுற்று வந்திருக்கிறது.

யூடியூப்பில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

March 7, 2022

இதை யோசிக்காம விட்டுட்டோமே!


வாசிப்பை நேசிப்போம் குழுவில் கொடுத்த பரிசு குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு போட்டிருந்தேன். அதைப் படிச்சுட்டு, ஊரிலிருந்து தங்கச்சி பசங்க இருவர் இருபதினாயிரம் சந்தாதாரர்களை பெற்று யூடியூப் சானலை நடத்தி வருகிறார்கள். மாமா நிறைய படிக்கிறார்னு தெரிஞ்சுகிட்டு "எனக்கு கான்செப்ட் சொல்லுங்க! நாங்க அதை வீடியோ பண்றோம்" என ஆர்வமாய் கேட்கிறார்கள்.


நாம ஏதோ நமக்கு பிடிச்ச புத்தகங்களை, பிடிச்ச நேரத்துல படிச்சு, நேரம் கிடைக்கும் பொழுது எழுதிகிட்டு இருக்கோம். இப்ப இந்த மருமக பசங்க இப்படி கேட்கிறாங்க! அவங்களோடு பேசி, விவாதிச்சு கன்டென்ட் கொடுத்தே ஆகணும்! இல்லைன்னா, "மாமா ஒரு உடான்ஸ் பார்ட்டி"ன்னு ஊரில சொந்தங்களுக்கு மத்தியில் சொல்லிருவாங்கன்னு கெதக்குன்னு இருக்கு! 🙂

பொதுவுல சொல்றதில்ல இப்படி எல்லாம் பிரச்சனை இருக்குன்னு தெரியாம போச்சே!

வாசிப்பை நேசிப்போம் : பரிசாக மெடலும்! புத்தகமும்!



”வாசிப்பை நேசிப்போம்” என ஒரு குழு முகநூலில் இயங்குகிறது. அந்த குழுவில் 55000 –மக்களுக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பது சிறப்பு.. குழுவில் எல்லா வயதிலும், எல்லா துறைகளிலும் இருக்ககூடிய ஆட்களும் இருக்கிறார்கள். தேர்ந்த ஆட்களும் உண்டு. இப்பொழுது தான் எழுத துவங்கியவர்களும் உண்டு.


அதில் நானும் ஒருவனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணிக்கிறேன். குழுவில் உள்ளவர்களை உற்சாகப்படுத்த நிறைய போட்டிகள் நடத்துகிறார்கள். எல்லா போட்டிகளிலும் உற்சாகமாக பங்கெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு குறைந்தது 25 புத்தகமாக படிக்கவேண்டும் என மாரத்தான் போட்டியும் உண்டு. படித்த புத்தகங்கள் குறித்து குழுவில் அறிமுகப்படுத்தியும் எழுதவேண்டும்.

அப்படி கடந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில் குறைந்தப்பட்சமாக 25 புத்தகங்கள் படிக்கிறேன் என ஒப்புக்கொண்டு கலந்துகொண்டுவிட்டேன். ஜனவரியில் ஒரு புத்தகம். பிப்ரவரியில் ஒரு புத்தகம் என இரண்டோடு நிறுத்திவிட்டேன். ஆறு மாதம் எங்கெங்கோ திசை மாறி போய்விட்டேன். திரும்பவும் அக்டோபர் போல குழுவில் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. கனவில் குழு நிர்வாகிகள் “படிப்பதை விட்டுவிட்டாயா?” என மிரட்டி தொந்தரவு செய்தார்கள்.

இன்னும் மூன்று மாதத்தில் இன்னும் 23 புத்தகங்கள் சாத்தியமா? என கேள்வி வந்தது. இறுதிநாள் வரை மல்லுக்கட்டி படிப்போம் என முடிவு செய்தேன்.. 50 பக்கங்கள் கொண்ட புத்தகத்திலிருந்து 450 பக்கங்கள் கொண்ட புத்தகம் வரை படித்தது ஆச்சர்யம். டிசம்பர் 31ல் கடைசிப் புத்தகத்தை படித்து, எழுதி முடித்து பதிந்த பொழுது, உண்மையில் ஒரு மாராத்தானில் ஓடிய அனுபவமாய் தான் இருந்தது.

இப்படி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, இலக்கை எட்டியவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று புத்தக திருவிழா பந்தலில் நடத்தினார்கள். சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டது ஆச்சர்யம். பகல் 12 மணியளவில் சென்ற பொழுது பலர் வந்திருந்தார்கள். பரிசுகளை கொடுக்க துவங்கியிருந்தார்கள்.

குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களுடன் பெரிய உற்சாகத்துடன் வந்திருந்தார்கள். பல பெரியவர்கள் குழந்தைகளுக்கான உற்சாகத்துடன் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். தங்கள் அனுபவங்களை சுருங்க சொன்னார்கள். பரிசுகளை பெற்றுக்கொண்டார்கள். எனக்கு ஒரு மெடலும், ஒரு புத்தகமும் பரிசாக தந்தார்கள். கூச்ச சுபாவம் என்பதால், நான் ஏதும் பேசவில்லை.

இத்தனை ஆயிரம் மக்கள், பல்வேறு ரசனை கொண்டவர்களை, பல சித்தாந்த பின்னணி கொண்டவர்கள் கொண்ட குழுவை முகநூலில் இயக்குவது பெரிய சவால். தினமும் எழுதப்படும் பதிவுகளைப் படித்து, அனுமதித்து, போட்டிகளை நடத்தி, அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து, இலக்குகளை அடைந்தவர்களுக்கும் பரிசளித்து, நிர்வாகிகளின் உழைப்பு பெரியது என்கிற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது! அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும், இலக்கை அடைந்தவர்களுக்கும், எழுதிய பதிவுகளை எல்லாம் படித்து, பின்னூட்டங்களில் உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ இரண்டு மாதம் கடந்துவிட்டன. ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்து பதிந்திருக்கிறேன். மார்ச்சிலிருந்து மாராத்தான் ஓட்டத்தை ஓடவேண்டும். சுவற்றில் தொங்கும் இந்த மெடல் இனி நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும்.

March 4, 2022

நோ மீன்ஸ் நோ!



முகலாய பேரரசர் அக்பர். அவருடைய மனைவி ஒரு ரஜபுத்ர பெண். சதி செய்ததாய் சொல்லி மாட்டிவிடுகிறார்கள். கோபத்தில் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். உண்மை தெரிந்ததும், அவரே அழைக்க செல்கிறார். பேரரசர் என்பதால், தடபுடலான வரவேற்பு.

 
முதன்முறையாக மணமகன் மாமியார் வீடு வரும்பொழுது முக்காடிட்டு நிற்கும் பத்து பேரில் ஒருத்தியான தன் மனைவியை சரியாக கண்டுப்பிடிக்கவேண்டும். கண்டுபிடித்தால், மனைவியின் அறையில் தூங்கலாம். இல்லையெனில் வெட்டவெளியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு தூங்கவேண்டியது தான்! என சொல்லிவிட்டு சிரிக்கிறார்கள்.
 
கூட்டத்தில் நிற்கும் ராணியான தன் மனைவியை (ஐஸ்வர்யா ராயை) கண்டுபிடிக்க முடியாதா என்ன? கொஞ்சம் முயன்று கண்டுபிடித்துவிடுகிறார். கண்டுபிடித்தபின்பும், வெட்டவெளியில் தான் தூங்குகிறார். காரணம் மனைவி மறுத்துவிட்டால், பேரரசராக இருந்தாலும் வெட்டவெளி தான்! நோ மீன்ஸ் நோ தான்!