> குருத்து: பிள்ளை நிலா (1985) பேய் படம்

March 23, 2023

பிள்ளை நிலா (1985) பேய் படம்


நாயகன் ஒரு கல்லூரியில் படிக்கிறார். நாயகியும் அங்கு படிக்கிறார். பிரின்சிபால் கேள்வி கேட்டார் என்பதற்காக, அந்த கல்லூரியையே நாயகியின் அண்ணன் வாங்கிவிடுகிறார். பிறகு நாயகனுக்கும், நாயகிக்கும் கொஞ்சம் முட்டல் வருகிறது. பிறகு நாயகி நாயகனை காதலிக்க துவங்கிவிடுகிறார். இது நாயகனுக்கு தெரியவில்லை. அவ்வளவு தத்தி.


பெரிய பணக்காரி என்பதால், நாயகன் படித்து முடித்ததும், அண்ணன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையும் வாங்கி கொடுத்துவிடுகிறார். நாயகி வெளிநாடு போயிருக்கும் பொழுது, நாயகனுக்கு திருமணமாகிவிடுகிறது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். முடியாது என்றதும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த ஆவி நாயகனின் பெண் குழந்தைக்குள் சென்றுவிடுகிறது.

மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு, நாயகனுடன் “மேலுலகத்தில்” ஒன்றாய் வாழ்வதே அதன் இலக்காக இருக்கிறது. நாயகன் ஆவியுடன் போராடி, தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
*****

இயக்குநர் மனோபாலாவிற்கு முதல்படம். முதன்முறையாக இளையராஜாவின் படத்தின் பின்னணி இசையை தனியாக ட்ராக் வெளியிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்காக ஆர்வம் வந்து பார்த்தேன். அந்த காலக்கட்டத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

முதல் பாதி படு திராபை. அந்த கல்லூரி காட்சிகள். அவர்களுக்குள் காதல் வரும் காட்சிகள். நாயகி தற்கொலை வரைக்கும் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு செயற்கை. அவ்வளவு மொக்கை. கதை, திரைக்கதை, வசனம் கலைமணி. இடைவேளைக்கு பிறகு பேய் வந்த பிறகு தான் படத்தையே காப்பாற்றியிருக்கிறது. பேயைத் துரத்துவதையும் சிம்பிளாக முடித்துவிட்டார்கள். கிறிஸ்துவ முறைப்படி புதைத்திருக்கிறார்கள். அதை தோண்டி எரித்தால் போதும் என சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்து முறைப்படி, எரிப்பது தான் வழக்கம். அந்த ஆவிகள் எல்லாம் நிறைய படங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றனவே! பேய் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது. அவ்வளவு தான்.

பாடல்களும், இசையும் படத்திற்கு பெரிய பலம். இளையராஜா படத்தை காப்பாற்றியிருக்கிறார்.

நாயகனாக மோகன், காதலியாக ராதிகா, ராதிகாவின் அண்ணனாக ஜெய்சங்கர், நாயகியின் துணைவியாராக நளினி, மகளாக பேபி ஷாலினி, ஜப்பான் மந்திரவாதி என சின்ன வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். இடைவேளை வரை படத்தில் வருகிறார். இடைவேளைக்கு பிறகு அவ்வப்பொழுது பேயாகாவும் வருகிறார். கெளரவ வேடத்தில் ராதிகா என எழுத்துப்போடுகிறார்கள். ஆச்சர்யமாக இருந்தது.

யூடியூப்பில் இருக்கிறது. பாருங்கள். இடைவேளை வரை பார்க்கவே வேண்டாம். அதையும் மீறி மன உறுதி கொண்டவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: