அறிவியல் : சாட் ஜிபிடி (Chat GPT) என்னவெல்லாம் செய்யப்போகிறது ?
சாட் ஜிபிடியைக் குறித்து உலகம் முழுவதும் பேசுகிறார்கள். அது செயல்படும் தன்மையை, வளர்ந்து வரும் விதத்தைக் கண்டு வியந்து பேசுகிறார்கள்..அதன் சாதக பாதகங்களை நிறைய விவாதிக்கிறார்கள். குறுகிய காலத்தில் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்களையும் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இன்றைய நான்காம் கட்ட தொழிற்புரட்சி காலத்தில் அறிமுகமாகியுள்ள புதிய தகவல் தொழில்நுட்பம் இந்தளவிற்கு வேகமாக பரவ காரணம் என்ன?
சாட் ஜிபிடியை கடந்த 2022 நவம்பர் 30-ல்தான் அறிமுகப்படுத்தினார்கள். கடந்த இருபது ஆண்டு வரலாற்றில் அறிமுகப்படுத்திய நாள் துவங்கி பரபரவென மக்களிடம் பரவியதில் முதலிடத்தில் உள்ளது. பத்து லட்சம் பயனாளர்களைப்பெற புகழ்பெற்ற பேஸ்புக்கிற்கு பத்து மாதங்கள் தேவைப்பட்டது. அதே அளவில் பயனாளர்களைப் பெற இன்ஸ்டகிராமிற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால் சாட் ஜிபிடிக்கு ஐந்து நாட்கள் தான் தேவைப்பட்டது. இதிலிருந்து மக்களிடம் பரவும் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
சாட் ஜிபிடி ” கூகுள் கில்லரா ”?
பில்கேட்ஸ்-மைக்ரோசாப்ட் குழுமத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாட் ஜிபிடியை செல்லமாக ”கூகுள் கில்லர்” என அழைக்கிறார்கள். கூகுள் சாட் ஜிபிடியின் வளர்ச்சியைப் பார்த்து எரிச்சலில் இருப்பதாக சொல்கிறார்கள். நம் தேவைக்கான ஒரு கேள்வியை கூகுளில் பதிவிட்டால்… அதற்கு பொருத்தமான பதில்கள், பதில் தரும் தளங்களை கூகுள் தேடித் தருகிறது. அதற்குள் உள்ளே போய் நம் பதிலை தேடி அடைந்துகொள்ளவேண்டும். கிடைக்கவில்லை என்றால், நமது கேள்வியை வேறு வகையில் கேட்கவேண்டும். அதற்கு தகுந்ததையும் கூகுள் தேடித்தரும்.
ஆனால் சாட் ஜிபிடி அப்படியல்ல! நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதுவே பொருத்தமான பதில்களைத் தருகிறது. நம்மை தேடும் வேலையை சுலபமாக்குகிறது. எனவே பலரும் சாட் ஜிபிடியை நாடுகின்றனர். இதன் காரணமாக கூகுளின் வருமானம் பெரிய அளவில் அடிவாங்கும் என கணக்கிட்டு சொல்கிறார்கள். கூகுளும் சாட் ஜிபிடியைப் போல ஒன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பெயர் பார்ட் (Bard) என பெயர் வைத்திருக்கிறது. இந்த இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
சாட் ஜிபிடி என்பது என்ன?
சாட் ஜிபிடி என்பது ஒரு மெய்நிகர் ரோபோ. செயற்கை நுண்ணறிவுடன் இது செயல்படுகிறது. “ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்” (ஜெனரேட்டிவ் முன் பயிற்சி மின்மாற்றி) என்ற தொழில்நுட்பம்தான் ஜிபிடி. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பல்வேறு வகையான சாட்பார்ட்கள் உள்ளன. படம் வரைவது, புகைப்படங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகள் உள்ளன. நமது ரயில்வே தளத்தில் ”உங்களுக்கு உதவி தேவையா? என சாட் பாக்ஸ் திரையில் தோன்றுவதை பார்த்திருப்போம். அவற்றில் இது புதிய வரவு.
சாட் ஜிபிடி என்னவெல்லாம் செய்யும்?
இது மனிதர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் மனிதர்களைப் போன்றே பதிலளிக்கிறது. எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்கிறது. சரளமாக உரையாடுகிறது. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறது
உதாரணத்திற்கு ஒரு கதை கேட்டால்… ஒரு கதை தருகிறது. ”நான் இந்தத் துறையில் இருக்கிறேன். எனக்கு ஒரு ராஜினாமா கடிதம் எழுதி தா!” என்றால், உடனே தருகிறது. கவிஞர் நா.முத்துக்குமார் போல ஒரு கவிதையை எழுதிக் கேட்டால் எழுதி தருகிறது. ரோபோ படத்தின் சிட்டியை போல அனைத்தையும் விரல் நுனிக்கு கொண்டு செல்கிறது. கணினி நிரல்களை எழுதுவது, தவறுகளைக் கண்டறிவது போன்றவையும் கூட இந்த மென்பொருள் கருவியால் சாத்தியம். .ஒரு யூடியூப்பர் தான் தயாரிக்கும் ஒரு காணொளிக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதி தருகிறது. இவை அனைத்தும் சில வினாடிகளுக்குள் தருவது தான் இந்த சிறப்பு.
சாட் ஜிபிடி எப்படிச் செயல்படுகிறது?
முன்னரே கூறியதுபோல இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு மெய்நிகர் ரோபோ. முழுவதும் டெக்ஸ்ட், அதாவது உரை அடிப்படையிலானது. அதனால் பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். ஏற்கனவே இருக்கும் வாக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கான அல்காரிதம்களைப் (Algorithm) பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன.
இதற்கு பயிற்சியளிக்கும்போது, சில கேள்விகள் கேட்கப்பட்டு, வல்லுநர்கள் தரும் பதில்கள் உள்ளன. வழக்கமான பயனர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தும் இது கற்றுக் கொள்கிறது. அந்த பதில் தவறாக இருந்தால், சரியான பதில் உள்ளிடப்படுகின்றன. ஒரு மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கிறது.
தற்போதைக்கு செப்டம்பர் 2021 வரையிலான தகவல்கள் மட்டுமே உள்ளீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அதற்குள் தான் நாம் கேள்வி கேட்கமுடியும். 2023 பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு, துணிவுப் பற்றியெல்லாம் அதற்கு தெரியாது. சாட் ஜிபிடியை இன்னும் இணையத்தில் இணைக்கவில்லை. வரும் காலங்களில் இணைத்துவிட்டால், நடப்பு நிலவரங்கள் வரைக்கும் தொகுத்து சொல்லும்.சாட் ஜிபிடியின் முதலீட்டாளர்கள்
அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஈஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. வேறு சில காரணங்களால், இதிலிருந்து இலான் மாஸ்க் விலகினார். அதன் பிறகு பில்கெட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. பிப்ரவரி 2023 வரை இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தொட்டுவிட்டது. எனவே, விரைவில் பில்கேட்ஸ் இன்னும் பத்து மில்லியன் டாலர் முதலீட்டை தரப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாட் ஜிபிடியின் மொழி
சாட் ஜிபிடியில் இப்பொழுது ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வளர்ச்சியில், உலகின் முதன்மையாக இருக்கும் 20 மொழிகளில் அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது என கணக்கிடுகிறார்கள். எதிர்காலத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மொழி தெளிவாய் தெரிந்திருந்தால் போதும். மற்ற மொழி சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தால் நாம் புரிந்துகொள்ளமுடியும்.
எடுத்துக் காட்டாக கூகுளின் ஜி போர்டு என்ற செயலி தமிழில் நான்கு வகையான உச்சரிப்புகளை தமிழில் எழுத்தாக மாற்றி தருவதைப் போல சாட் ஜிபிடி அனைத்து மொழிகளில் மட்டுமின்றி பல வகையான பேச்சு வழக்குகளையும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும்..
சாட் ஜிபிடிக்கு கட்டணம் உண்டா ?
சாட் ஜிபிடி இன்னும் முழுமையாக தயாராகவில்லை. தன்னிடம் உள்ள தரவுகளின் படி, அது பதிலளிக்கிறது. சில பதில்கள் தவறாக உள்ளன என சிலர் சொல்கிறார்கள். எனவே, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே இன்றைய தேதி வரை பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. இதன் வளர்ச்சியில் கட்டணம் விதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சாட் ஜிபிடியின் வளர்ச்சியில் என்ன ஆகும் ?
சாட் ஜிபிடி வேலை வாய்ப்பில் என்னவித தாக்கங்களை உருவாக்கும் என அதனிடமே கேள்விகள் கேட்டதற்கு, சிலவற்றை பட்டியலிட்டு சொன்னது. ஒரு பொருள், சேவை குறித்த வழக்கமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் தகவல்களை வழங்க இது பயன்படும். ஏற்கனவே துவக்க நிலையில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சாட் ஜிபிடியால் இன்னும் துல்லியமாக பதிலளிக்க முடியும்.
சிரி (Siri), அலெக்சா (Alexa) போன்ற மெய்நிகர் உதவியாளர்களுக்கான அடிப்படை தொழில்நுட்பமாக இதைப் பயன்படுத்தமுடியும். முன்பை விட இன்னும் துல்லியமாக இயங்க உதவும். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரு உரையை, செய்திக் கட்டுரையைத் தயாரிக்க உதவும். மொழிபெயர்ப்பில் பெரிய தாக்கத்தை கொடுக்கும். முன்பை விட மேம்பட்ட மொழிபெயர்ப்பு செய்யும் கருவிகள் வந்துவிட்டன. சாட் ஜிபிடி இன்னும் மேம்பட்ட முறையில் தரஇயலும்.
மாணவர்களுக்கு ஒரு மொழியை கற்றுத்தர, பிறமொழிகளை கற்றுத் தர என கல்வித்துறையில் பயன்படும். மனிதர்களின் மனநலம் சார்ந்த பொதுவான ஆலோசனைகளைவழங்கும்.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சமூக விளைவுகள்
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் 2013-ல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோக்கள் செய்யத் துவங்கிவிட்டன. இன்னும் பத்து ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் (AI) கொண்ட கணிப்பொறிகளே அந்த வேலைகளை செய்துவிடும் என்பதை அறிக்கை சொல்கிறது. அதாவது சுமார் 702 வகை வேலைகள் காணாமல் போகும் என்கிறது.
பல்வேறு வேலைகளில் ரோபோக்களை, தானியங்கி சேவைகளை நிறுவத் தொடங்கிவிட்டார்கள். சென்னை போன்ற நகரங்களிலேயே பல ஷாப்பிங் மால்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கட்டணத்தைக் கணக்கிட்டுச் சொல்வதற்கும், மின்னணு முறையில் பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டாக் (ஃபாஸ்ட் டேக்) என்னும் முறையில் சென்சார்கள் உதவியுடன் தானாக கட்டணத்தை எடுக்கத் துவங்கிவிட்டன. சட சடவென ஆட்குறைப்பும் வேகமாக நடக்கிறது.
பெங்களூரில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தானியங்கி போன் விற்கும் கியோஸ்க்களைத் திறந்துவிட்டன. ரயில்வே நிலையங்களில் குளிர்பானங்களை அடுக்கி வைத்திருக்கும் ஒரு எந்திரத்தில் பணத்தைப் போட்டால் குளிர்பானத்தைத் தள்ளிவிடும். இதைத்தான் கியோஸ்க் என்கிறோம். இனி ஸ்மார்ட் போன் வாங்க உங்களுக்கு என்ன மாடல் வேண்டும் என்று உள்ளிட்டால் போதும். தொகையைக் காட்டும். மின்னணு முறையில் பணத்தைச் செலுத்தினால் விரும்பிய ஸ்மார்ட்போனைப் பெட்டியில் இருந்து வெளியே தள்ளும். ஆக, இனி மெல்ல கடைகளில் விற்பனை பிரதிநிதிகள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.
சென்னையில் உள்ள பல துரித உணவுக் கடைகளில் ஆர்டர் செய்து மிஷின்கள் வந்துவிட்டன. இதுநாள் வரை வார இறுதி நாட்களில் இது போன்ற துரித உணவகங்களில் ஆர்டர் எடுக்க பகுதிநேர வேலை பார்க்கக் குவிந்த கல்லூரி மாணவர்கள் இனி என்ன செய்வது என திகைக்கிறார்கள். சென்னையில் மட்டும் பரிமாறுபவர் (Waiter) இல்லாமல் இயங்கும் தானியங்கி ரோபோ ஹோட்டல்கள் சில இயங்குகின்றன.
வங்கி சேவையில் பணம் எடுப்பது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்தையும் ஏடிஎம்மிலேயே செய்துவிட முடிகிறது. அப்படியிருக்க ஏன் வங்கிக்குச் செல்ல வேண்டும்? ஸ்மார்ட்போன் ஆப்களில் பல விதமான வங்கி சேவைகள் வந்துவிட்டன. எனவே,கால ஓட்டத்தில் வங்கிகள் இயங்குவதும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் குறையத் தொடங்குவார்கள். .ஒருவேளை வங்கிகள் இயங்கினாலும் அங்கு பெயருக்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பார். ரோபோக்கள் மற்ற வேலையாட்களின் பணிகளைச் செய்துவிடும் என விவரிக்கிறது ஆக்ஸ்போர்டு ஆய்வு.
இந்நிலையில் “ரோபோக்கள் பல வேலைகளை அழிக்கப் போகின்றன. ஆனால், நம் சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை…” என்று எச்சரிக்கிறது ‘கார்டியன்’ பத்திரிக்கை. 2018-ம் ஆண்டு உலகம் முழுவதிலும் சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’.
வேலைபறிப்பும், தீர்வும்!
மறுகாலனியாக்கத்தை விரைவுபடுத்தும் புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி (Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. 40 கோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்..கடந்த தேர்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் மோடி. ஆனால் இன்று வரை அது வெற்று அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.
பல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களையே தூக்கியெறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.
முன்னேறிய தொழில்நுட்பம் உண்மையில் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா? இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா? என்றால் ஏகாதிபத்திய முதலாளிகளின் மீமிகு உற்பத்திக்கும், லாப வேட்டைக்கும் தான் பயன்படுகிறது. கருவிகளின் கண்டுபிடிப்புகள், அது யாரின் கையில் இருக்கிறது? என்பதைப் பொருத்துதான் மனித குலத்திற்கு பயன்படுகிறது.
சோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தில் கார்ப்பரேட் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு ” வேலை பறிப்பு”. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் பொழுது தான், வேலையில் இருப்பவர்களை மிரட்டியே சம்பளத்தை குறைக்கவும் முடியும். ஆனால் அதன் உபவிளைவாக ஏகாதிபத்திய முதலாளிகள் ஆசைப்படும் விற்பனை உயர்ந்துகொண்டே செல்லாமல் அதலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் ஏற்படும்.
அறிவியலின் வளர்ச்சியான தானியங்கி தொழில்நுட்பத்தை புறக்கணிக்க முடியாது. ஆனால் மனித குலத்திற்கு எதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். புதிய சாட் ஜிபிடியை அந்த வகையில் பயன்படுத்த பாட்டாளி வர்க்கத்தை பயிற்றுவிப்போம்.
தமிழ்ச்செல்வன்
புதிய ஜனநாயகம் (மா-லெ)
மார்ச் மாத இதழ் 2023
0 பின்னூட்டங்கள்:
Post a Comment