> குருத்து: Iratta (2023) மலையாளம் அருமையான திரில்லர்.

March 6, 2023

Iratta (2023) மலையாளம் அருமையான திரில்லர்.



இடுக்கி மாவட்டத்தில் ஒரு போலீஸ் நிலையத்தை ஒட்டி நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக மந்திரி வர இருக்கிறார். 

அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழாவிற்கான வேலைகளில் பரபர என இருக்கிறார்கள். ஊடகங்கள், மக்கள், போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். அப்பொழுது போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள்.


அந்த போலீஸ் நிலையத்தின் இடைநிலை அதிகாரி ஒருவர் சுடப்பட்டு இறந்துக்கிடக்கிறார். அந்த அறைக்கு பக்கத்தில் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் மீது சந்தேகப்படுகிறார்கள். இறந்தவரும், அங்கு உயரதிகாரியாக இருப்பவரும் பிறவி இரட்டையர்கள். எல்லோரையும் சந்தேக வட்டத்துக்குள் வைத்து விசாரிக்கிறார்கள். இறந்தது போலீஸ். அதுவும் போலீஸ் ஸ்டேசனிலேயே என்பது இன்னும் அரசுக்கு அவமானமாக இருக்கிறது. ஆகையால் மேலிடத்தில் இருந்து நிறைய அழுத்தம் வருகிறது. அந்த பெண் மந்திரி இந்த வழக்கு தீர்க்கும் வரை வீட்டுக்கு போகமாட்டேன் என ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்துவிடுகிறார்.

விசாரணை துவங்குகிறது. இதில் இறந்தவரின் வாழ்க்கை முன்னும், பின்னும் நிகழ்வுகளாக நகர்கிறது. அதில் நிறைய எதிர்மறை சம்பவங்களும், சில நேர்மறை சம்பவங்களும் என மெல்ல விரிகின்றன.

இறுதியில் கொலையா, தற்கொலையா என இறுதியில் முடிச்சை அவிழ்க்கும் பொழுது, அதிர்ந்து போகிறோம்.

****

இரட்டையர்களின் வாழ்க்கை குறித்து பல படங்கள் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன. அதிலும் ஒரே தோற்றம் கொண்ட இரட்டையர்கள் கதைகளையும் பார்த்திருக்கிறோம். ஒருவரின் செயல்பாடுகள் மற்றவரை எத்தனைப் பாதிக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம். எங்கள் வீட்டுப் பிள்ளையில் ஒரு எம்.ஜி.ஆர் நல்ல பசியில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு நடையை கட்டிவிடுவார். இன்னொரு அப்பாவி எம்.ஜி.ஆர் இரண்டே இட்லி சாப்பிட்டு, மொத்த பில்லுக்கும் பணத்தை கட்ட வேண்டியிருக்கும். இந்தப் படத்தில் இன்னொரு லேயரைத் உணர்வுப்பூர்வமாக தொட்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு போலீசின் வாழ்க்கைக்குள் போனால், அவரின் அழுக்குகளையும், பல போலீசின் அழுக்குகளைப் பார்க்கிறோம். சட்டம் எல்லாம் மக்களுக்கு தான். தங்களுக்கு இல்லை என போலீஸ் நடந்துகொள்வதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். அதை இந்தப் படத்திலும் நம்மால் உணரமுடியும். ஒரு மனிதனின் நடத்தைக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை முக்கியமானது என ஒரு சைக்கலாஜிக்கல் விளக்கம் படத்தின் போகிற போக்கில் சொல்வார்கள். உண்மை தான். அதற்காக தான் சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாமல், வெறுப்பு உணர்வு இல்லாமல், சமூகம் சுமூகமாக இயங்கவேண்டும் என பலரும் விரும்புகிறோம்.

மற்றபடி, படம் துவக்கம் மூதல் இறுதிவரை சஸ்பென்ஸை பாதுகாத்திருக்கிறார்கள். ஒரு ஸ்டேசனுக்குள் நடக்கும் கதை என்றாலும், பல கதாப்பாத்திரங்கள் வந்து போகிறார்கள். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கேரளா என்பதால், நிறைய பெண் பாத்திரங்களும் வருகின்றன. இரட்டையர் என்பதை நடிப்பில் அத்தனை நுணுக்கமாய் ஜோஜு ஜார்ஜ் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது ஆச்சர்யம். இயக்கியிருக்கும் ரோஹித் எம்.ஜி. கிருஷ்ணனுக்கு முதல் படம் என்பது ஆச்சர்யம். வாழ்த்துகள்.

இப்பொழுது நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: