> குருத்து: The Woman king (2022) கருப்பின மக்களின் வரலாற்று சண்டைப் படம்

March 12, 2023

The Woman king (2022) கருப்பின மக்களின் வரலாற்று சண்டைப் படம்1800களில் கதை நகர்கிறது. ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் செல்வத்துக்கு ஆசைப்பட்டு தன் சொந்த நாட்டு மக்களையே அடிமைப்படுத்தி, காலனியாதிக்கவாதிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறான்.


ஆப்பிரிக்காவின் இன்னொரு பகுதியான தகோமாவில் இன்னொரு இனக்குழுத் தலைவனாக இருப்பவன், நம் நாட்டு மக்களையே இப்படி அடிமைப்படுத்தி, அடிமைகளாக விற்பது தவறு என்கிறான். அவனை எதிர்த்து நிற்கிறான். அவனிடம் பெண்கள் மட்டுமே பங்களிக்கிற அகோஜி (Agojie) என வலுவான படை இருக்கிறது. அந்த பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. ஆண்களோடு இணைவதுமில்லை. தம் மண்ணைக் காக்க தன் உயிரையும் தருவதற்கு கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

அடிமைகளை ஏற்றுமதி செய்கிற மன்னனிடம் காலனியாதிக்கவாதிகளின் சகவாசத்தால் நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் இருப்பதால், தகோமா மன்னனை மிரட்டிக்கொண்டே இருக்கிறான். கப்பமும் வாங்கிக்கொள்கிறான்.

அவன் எந்த நிமிடத்திலும் தகோமாவின் மன்னனை வீழ்த்தி எல்லோரையும் அடிமைப்படுத்தும் அபாயம் இருக்கிறது. பிறகு என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாகவும், போர் காட்சிகளுடனும் முடித்திருக்கிறார்கள்.

***

உண்மை வரலாறு சம்பவங்கள் கொண்ட படம் என்கிறார்கள். அமெரிக்க மண்ணே இப்படி ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட கருப்பின மக்களால் தான் பண்பட்டது. ஆனால் இன்றைக்கும் கருப்பின மக்கள் மீது இன வெறுப்பு காட்டுவதெல்லாம் அயோக்கியத்தனம். இதெல்லாம் அமெரிக்காவில் நடப்பது.

ஆப்பிரிக்க மண்ணில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு வரலாற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பது ஆராயப்படவேண்டிய விசயம். ஆனால், படம் வெற்றி பெறவேண்டும் என்பதால், கொஞ்சம் கமர்சியல் தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப ஆட்கள், இயக்குநர் என பெரும்பாலும் பெண்கள் பங்களிப்பு என்பது சிறப்பு. நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஜீ5, அமேசான் தளத்தில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: