> குருத்து: Romancham (Goosebumps) (2023) மலையாளம் பேய் காமெடி கலாட்டா படம்

March 8, 2023

Romancham (Goosebumps) (2023) மலையாளம் பேய் காமெடி கலாட்டா படம்


2007ம் ஆண்டில் கதை நடக்கிறது. ஏழு (மலையாள) நண்பர்கள் பெங்களூரில் ஒரு அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். ஏழு பேரும் இயல்புகளில் ஏழு விதமாய் இருக்கிறார்கள். ஏழு பேரில் ஒருவனுக்கு மட்டும் வேலை இருக்கிறது. வேலை நேரம் போக மீதி நேரம் முழுவதும் காதலியுடன் பேசிக்கொண்டே இருக்கிறான்.


மாலை நேரங்களில் பந்து விளையாடுவது போல… ஒரு நாள் ஒயிஜா (Ouija) போர்டை ஒருவன் அறிமுகப்படுத்த, அதை விளையாட துவங்குகிறார்கள். விளக்கெல்லாம் அணைத்துவிட்டு, அறையில் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடுவில் கேரம் போர்டு வைத்து, அதில் ஏபிசிடி என 26 எழுத்துக்களையும் எழுதி, நடுவில் ஒரு சின்ன மெழுகுவர்த்தை ஏற்றி வைத்து, நாலுபேர் சுற்றி அமர்ந்துகொண்டு… மெழுகுவர்த்திக்கு மேலே ஒரு கிளாஸை கவிழ்த்து, தங்களுடைய ஒற்றைவிரலை நால்வரும் அதில் பிடித்துக்கொள்கிறார்கள். “புனித ஆத்மாவே வா!” என அழைக்க துவங்குகிறார்கள். சில நிமிடங்களில் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொரு எழுத்தாக கைவைத்த கிளாஸ் நகருகிறது. எழுத்துக்கூட்டி புரிந்துகொள்ள வேண்டியது தான்.

விளையாட்டாக கிளாஸை நகர்த்தித் துவங்கும் “பேய்” விளையாட்டில், உண்மையிலேயே ”பேய்” வந்துவிடுகிறது. அதற்கு பிறகு நடக்கும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான் முழு நீளப்படமும்!

****

தமிழில் பேயை வைத்து பல காமெடி படங்கள் வந்து, வெற்றி பெற்றிருக்கின்றன. மலையாளத்திற்கு இது புதியதா என தெரியவில்லை. ஆனால், மலையாளப் படங்களின் தன்மைக்கேற்ப நம்பிக்கையாய் Goosebumps என பெயர் வைத்து, பேயை வைத்து எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது பாகம் வரும் எனவும் இறுதியில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டு சீரியசாகும் பொழுது, ஒருவர் பந்தாவாக வருவார். தன் வண்டி எண் பற்றி கேட்கும் பொழுது சரியாக சொல்லிவிடும். ”அது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என் அப்பா பெயர் சொல்” என கெத்தாக கேட்கும் பொழுது, பேய் ஒரு பெயரை சொல்லும். “தப்பு. அது என்னுடைய சித்தப்பா பெயர்” என்பார். ”இல்லை. நான் சொன்னது தான் சரியான பெயர்” என பேய் திரும்பவும் சொல்லும். எல்லோரையும் கோபமாய் திட்டிவிட்டு செல்வார்.

நடிகர்களில் Soubin Shahir மட்டும் தான் பழைய ஆள். மற்ற நண்பர்கள் பெரும்பாலும் புதியவர்கள் தான். எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும் நன்றாக ஒத்துழைக்கிறது.

இப்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: